கடலில் கிளைத்த நதி (2)

திருத்தலப் பயணங்களை அவர்கள் சேர்ந்தே மேற்கொண்டனர். கடுமையான பயணங்கள். காடும் மலையும் கடினப் பாதையும் எத்தனைக்கெத்தனை அலுப்பைத் தந்தனவோ அத்தனைக்கத்தனை இனிமை பயத்தன இப்போது. மழையும் வெயிலும் ஒரு பொருட்டாய் இல்லை. இருளும், ஒளியும், காடும், மேடும் எனப் புறநிலை அசெளகர்யங்களை அவர்கள் புறந் தள்ளினர். அகம் புகுந்த அகல் வெளிச்சம் அவற்றைச் சட்டை செய்யவில்லை. ஒருவரது அருகாமையை மற்றவர் விரும்பினர். இது பூர்வ ஜென்ம உறவோ என்ற கண்டவர் வியந்தனர். பசுவும் கன்றுமாகவே அவர்களுக்கு இருவரும் காட்சி தந்தனர்.
பல்லக்கு விரைந்து கொண்டிருக்கிறது. மெல்ல இருள் சூழும் மாலை. கரும் பூக்கள் கட்டிய மாலையா இது? அவர்கள் திருமறைக்காடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர். இருள் மெல்ல உலகம் சூழ்ந்து மானுடர்தம் கண்ணுக்குள் புக முயன்று கொண்டிருக்கிறது.

இருள் முற்றுமுன் அவர்கள் ஊரடைய உத்வேகங் கொண்டு கிளம்பியிருந்தனர். பாதை கடுமையாய் அமைந்தது. பல்லக்குச் சுமப்பவர் வருத்தம் கொண்டுவிடக் கூடாதே என்பதே முதற் கவலை இருவருக்கும். அதைவிட கோவில் நடை சாத்தி விடுவார்களோ… இறைவனை தரிசிக்கப் பிந்தி விடுமோ என்கிற நினைவிலேயே இருவரும் தாகத்தில் வாடினர்.
”ஓம் நமச்சிவாய…”
”சிவாய நமவோம்…”
”ஓம் நமச்சிவாய…”
”சிவாய நமவோம்…”
விரைந்தது பல்லக்கு.

ஊர்த்தலைவரின் பூரண கும்ப வரவேற்பை அவர்கள் பாராட்டி மகிழப் பொழுதில்லாதவர் ஆயினர். ”ஐயா எமை மன்னியுங்கள். யாம் இறைவனை தரிசிக்க வந்தவர்கள். சற்றே விலகுவீர். கோவில் நடை சாத்தும் நாழிகை ஆகிவிட்டதல்லவா?” என்று பதறினார் பெரியவர். அவர் கண்பார்வை வெளிச்சத்திலேயே சற்றுத் தடுமாறும்… இப்போது இந்த இருள் அவருள் கண்ணில் புகுந்து மனதிலும் மெல்லத் திரள – மேகமென உருள ஆரம்பித்திருந்தது.

நடை சாத்தியிருந்தது. பெரியவர் மனம் சோர்கிறார். அவர் வாடிய முகம் கண்டு வாடினார் சிறிய திருவடி.

”சரி, இறைத் திருவுளம் அதுவெனில் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்…” என்றார் பெரியவர்.
”இறைவன் திருவுளம் அஃதல்ல ஐயா” என்றார் சிறிய திருவடி புன்னகையுடன்.
”என்ன சொல்கிறீர்?” என்று திரும்பினார் பெரியவர். ”கோவிலை நாம் திறக்கச் செய்யலாம்…” என்கிறார் சிறிய திருவடி மேலும் அழுத்தமாய்.
”அது எப்படி முடியும்? அது மரபல்லவே?” பெரியவர் விளங்காமல் கேட்டார்.

”இறைவன் தன்னைப் பூட்டிக் கொண்டதை… குழந்தை ஒளிந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவதாகவே யாம் உணர்ந்தோம்” என்றார் ஞானப்பிள்ளை. ”நீர் அவரைக் காணாமல் தவிப்பதை வேடிக்கை பார்க்கிற ஆசை இறைவனுக்கு…” மெல்ல நகைக்கிறார் சிறிய திருவடி. ”உம்மைத் தடுத்தாட் கொண்டு ஏற்றுக் கொண்ட தந்தை அவர். , இப்போது அவரே குழந்தையென உமக்குக் காத்திருக்கிறார். அலகிலா விளையாட்டுக்காரர் இந்த அம்பலவாணர்….”

”ஐயா, உம் தேமதுரத் தமிழோசை அழைப்புக்குக் காத்திருக்கிறாரய்யா ஈசன். உமது பதிகங்களால் இச் சந்நிதி திறக்கட்டும்… யாமும் உம் தமிழை… இசையைக் காதாரக் கேட்டவர் ஆவோம். தமிழ்ப் பூசனையால் இறைவன் வரம் பெற்றவர் ஆவோம்… பாடித் திறவுங்கள் இறைவனின் மனக் கதவை…” அப்பர் சுவாமிகள் அதை ஏற்றுக் கொண்டார். சொக்கலிங்கத்தை மனசிலே நிறைத்தபடி அவர் சந்நிதி முன்னின்று ஊற்றெனப் பெருக்கினார் உற்சவச் சொற்களை.

ஊரே ஜனமே அந்தப் பாடல்களில் மெய்ம்மறந்து லயித்துக் கிடந்தது.

பதினெட்டுப் பாசுரங்கள். ஓங்கார ரீங்காரம். மானுடத்தை அசைத்தன அச் சொற்பெருக்கு. அந்த வளாகமே மணத்தது அவர் தமிழில். விருட்சங்கள் சிலிர்த்துப் பூக்களை வாரியிறைத்து வாழ்த்தி நின்றன. பதினெட்டு பாசுரங்கள். பதினெட்டாவது பாசுரத்தில் அவ்வதிசயமும் நிகழ்ந்தது. கோவில் வளாகத்துப் பூட்டு தன்னைப்போல வாய் பிளந்து மயங்கி வீழ்ந்தது தரையில். கதவம் திறக்க… உள்ளே சர்வலங்காரப் பொலிவுடன் சொக்கலிங்கம். தீபதூபம் பொலியக் காட்சி தந்தனன். ஊரே அந்த தரிசன இன்பம் தாளாமல் திகைப்புற்றது.

எப்பெரும் நிகழ்ச்சி அது. சொன்னால் நம்பவும் இயலுமோ அதை? விவரிக்கவும் மானுடத்தால் இயலுமோ அப்பேரனுபவத்தை? கண்டவர் விண்டிலர்… என்ற நிலை. கோவில் மணிகள் தாமே அசைந்தன. தேவர்கள் வந்து நடாத்திய பூஜை அது. விண்ணுலகக் காட்சிதாமோ அது… இப்போது நம் கண்ணுக்கு விருந்தாய்க் கிட்டியதே… திகட்டியதே… அப்பர் வந்த வேளையில் யாம் புண்ணியம் பெற்றேம் என அத்தனை பேரும் நெகிழ்ந்தனர்.

”ஐயா, உம் தமிழ்த் திறம் உலகறிய இறைவனின் திருவிளையாடல் அல்லவா இது…” என நெகிழ்ந்தார் சிறிய திருவடி.
பெரியவர் புன்னகைத்தார். ”அப்படிச் சொல்லிவிடாதே அப்பா. இப்போது உன் முறை…” என்றார் சுவாமிகள். ”நடையை மீண்டும் சாத்தி இறைப்பணி நிறைவு செய்வது உம் பொறுப்பு” என்றார் பெரிய திருவடி.
”அதுவே பொருத்தம்” என வேண்டிக் கொண்டனர் ஜனங்கள்.
”முயற்சி செய்கிறேன்” என்று ஞானப்பிள்ளை பாட ஆரம்பித்தார். என்ன குரல்? என்ன இழைவும், குழைவும், ஜாலமும், வித்தையும்…? ஒரே பாடல்.
நடை மீண்டும் சாத்திக் கொள்கிறது.
ஹா… என ஆர்ப்பரித்தது கூட்டம்.

சிலிர்த்தது பெரியவருக்கு. கண்கள் பனித்தன. ”எப்பெரும் மகவு அப்பா நீ. பதினெட்டு பாடல்களில் எமது வேண்டுகோளுக்கு இறைவன் அருள் செய்தனன். நீயோ ஒரே பாடலில் அவன் மனதை வென்று விட்டாய் எனில் உனது பக்திக்கு… தமிழுக்கு முன்னே யான் எம்மாத்திரும்” என்று வணங்கினார் பெரியவர்.

”இல்லை ஐயா இல்லை. இது மழலைச் சொல். ஆழமும் சாரமும் தத்துவமும் அவ்வளவேயானது என்பதால் இறைவன் ஒரே பாடலில் கட்டுண்டனன். உமது ஆழ்ந்து அகண்ட புலமையின் வளமையில் மேலும் மேலும் கேட்க அவன் சித்தங் கொண்டனன்…” என்றார் சிறிய திருவடி.

”நீர் ஐயன் எடுத்துக் கொண்ட தத்துப்பிள்ளை. நான் உமையிடம் பரிவு கண்ட முத்துப்பிள்ளை. நான் அன்பு உருவானவன். நீர் அறிவுருவானவன். உமது அறிவுக் கடலில் விளைந்த முத்து நான். கவிதை என்னுடையது என்றாலும் கூட, பெருமை உமக்கே. உம் பிந்தைய தலைமுறைக்காரன் நான். என் பெருமையின் சொந்தக்காரர் நீரே…

நான் நும் தோளேறி நின்று கூவிய சேவல். நும் கடலில் கிளைத்த நதி” என்றார் சிறிய திருவடி.

ஹா… என வியந்து நின்றனர் மக்கள்.

*****

About The Author