கடலில் கிளைத்த நதி (1)

அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர். வற்றிய வரியோடிய தேகத்தில் உதிரத்துக்கு பதிலாகத் தமிழ் ஓடுகிறது. இறைபக்தியே அதன் வளமைச் செழுமை. கண்பார்வை சற்று ஒடுக்கந்தான். செவிப்புலனும் அத்தனைக்கு சிலாக்கியமாய் ‘சொல்லுந்தரமாய்’ இல்லை. எனினும் என்ன… சொல் தரமாய் இருக்கிறதே… முத்தாய்த் தெரிகிற பற்களும், முத்தாய்ப்பு வாக்குகளும். சிந்தனையின் சீர்வரிசை என மாலை தொடுத்தாற்போலப் பேசுகிறார். பூமாலை அல்ல – பாமாலை. திருத்தலம் திருத்தலமாய்ப் பயணிப்பதும், ஈசனைக் கோவில் தோறும் சென்று தரிசித்து ஆனந்தக் கூத்தில் களிப்பதும், ஊனும் உடலும் உருகி நெகிழ மனசில் அருவிப்பாலென அருள் சொரிகிற ஐயனை எண்ணியெண்ணி மகிழ்வதும், அவன் திருச்சந்நிதியில் நின்று மனசில் வாசனை பரத்துகிற ஈசனை வாய் தித்திக்க வாழ்த்திப் பாடுவதுமாக அவர் திருப்பணி சிரமேற் கொண்டார். அப்பனின் திருச்செல்வர். சான்றோர் அவரை அப்பர் என அன்புடன் அழைக்கத் தலைப்பட்டனர். கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா? அவரது வருகை வழியெங்கிலும் ஊர்தோறும் கொண்டாடப் பட்டது. பெருந் திரளான ஜனங்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தார்கள். அவரை வணங்கி, தம் இல்லத்துக்கு அழைத்து அவரோடு விருந்துண்டு மகிழ்ந்தார்கள். வஸ்திராதி திரவியங்கள் வழங்கி கெளரவித்தார்கள். மற்ற தலத்துக்கு என அவர் கிளம்பும்போது தமது உற்ற உறவினரைப் பிரிவது போலவே அனைவரும் உணர்ந்தார்கள். துயருற்றார்கள். அவர் கிளம்பிப் போய்விட்டார் எனினும் என்ன… அத் திருத்தல மகிமை சாற்றும் அவர்தம் பதிகங்களை அவர் நித்திலமாய் விட்டுச் சென்றிருக்கிறாரே… அப்பதிகங்களை சந்நிதியில் அவர்கள் ஓதி மகிழ்கிறார்கள்.

இவர் சிறிய திருவடி. பிறப்பினால் அந்தணர் என்பர். கருவிலே திருச்சுமந்த தமிழ் வித்தக மத்தகர். உமையே மனம் இரங்கி இறங்கி வந்து அமுதம் ஊட்டியதாக ஊரே வியந்து கொண்டாடியது. அவர்தம் மழலை குழலை வென்றது. திருவருட் சந்நிதியில் கரங்கூப்பி, கண்மூடி நின்று காட்சிப்பட்ட இறைவனை உள்ளே நிரப்பிக் கொள்கிற அழகென்ன? நெஞ்சக் கனகல் நெகிழ அதன்பாற் பட்ட… அதற்கும் அப்பாற்பட்ட அனுபவத்தை வருணத் தெறிப்பென சிந்தனைச் சலங்கையின் கலீரென… சிலீரென மனத் தாழ்வாரத்தில் மழை ஈரமாய்ப் பரத்தி விடுகிறார். இப்படியோர் மகவு என் வயிற்றில் பிறக்கவில்லையே எனத் தாய்மார்கள் ஏங்கினர். ஆண்மக்களோ இச்சிறு பாலகனின் அறிவின் அகலமும் ஆழமும் நோக்கி வியந்து கொண்டாடினர்.
குருத்திலேயே கருத்துச் சுரங்கமென அவர் பொலிந்தார். உலகமே வயது வித்தியாசம் இல்லாமல் அவரை வணங்கி மகிழ்கிறது. ”அடடா நான் சிறுவன் ஐயா… இது தகுமோ?” என அவர் மிகுந்த நல்லடக்கத்துடன் காலை விலக்கிக் கொண்டார். எனினும் வணக்கம் அவருக்கானது, என்பதைவிட அவரது உள்ளத்துறையும் இறைவனுக்கு என அவர் உணர்ந்தார். இறைவனை வணங்குதல் முறையல்லவா? வணங்காதது குறையல்லவா? சிறிய திருவடி அப்பர் சுவாமிகள்பால் மாளாத அன்பு பெற்றிருந்தார். ஊர்தோறும் மக்கள் அவரை வாயாரப் புகழ்வதையும் அவர் பரவசமாய்ப் பாடியருளிய பதிகங்களை வியந்தும் நயந்தும் கொண்டாடியதையும் அமரர் தலைவனின் திருச்சந்நிதிகளில் அப் பாசுரங்களை விரும்பி ஓதியதையும் அவதானித்தார். பெரியவரின் பக்தியும் திருப்பணியும் எத்தகைய அற்புதமான அனுபவங்கள் எனக் கண்டார். மனம் மகிழ்ந்தார். அவரைச் சந்திக்கும் நாளை எண்ணிக் காத்திருந்தார். இறைவன் திருவுளம் இருந்தால் அது விரைவில் சாத்தியமே எனக் காத்திருந்தார்.

பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று. அவர் விட்டுச்சென்ற தமிழும் பாசுரங்களும் நற்தாழம்பூவென மணத்துக்கிடந்தன.வழிதோறும். அடடா, அடடா… இத்தனை அருகே வந்தும் பெரியவர்தம் திருமுகமும் பார்க்க எமக்கு வாய்க்கவில்லையே… என்றிருந்தது.
நேரில் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லைதான். எனினும் என்ன… மனசினால் அவர்தாம் அறிமுகம் கொண்டவராயினர். உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தந்தது. அறிவினால் தாம் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்தாற் போலவே உணர்ந்தனர்.
பெரியவர் – பக்தியினால் எமக்கு முன்னேர் அவர் அல்லவா- எமக்கு முன்னே அவர் முன்னேறிச் செல்வது முறையே அல்லவா… என நினைத்துக் கொண்டார் சிறிய திருவடி.
காலம் கனியும். யானையும் குனியும். யாம் பெரியவரைச் சந்தித்து வணங்கி உரையாடி மகிழும் திருநாளும் அமையும்… அதுவரை காத்திருத்தல் நல்லது அல்லவா? காத்திருந்து எதிர்பார்த்திருந்து பெற்ற தருணங்கள் உள்ளத்தைக் கிளர்த்தி, வைரங்களை வெளிக்காட்டி விடுகிறது. கதவு பின்னே ஒளிந்து கொண்டு விளையாடும் குழந்தை விளையாட்டு காலத்துக்குப் பிடித்தமான விளையாட்டு. அதை சிறிய திருவடி அறிவார்.
யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே என்கிறாப் போல… இந்த நிலை. ஆனால் சிறு மாறுபாடு. யானை சென்ற பின்பும் செல்கிற மணியோசையை நான் கேட்கிறேன். புன்னகை செய்து கொள்கிறார் சிறிய திருவடி.
ஐயா, உமக்கு வந்தனம். நும் தமிழைப் பின்பற்றி யாம் வந்தனம்.

சிறிய திருவடியின் கீர்த்தியும் அப்பர் சுவாமிகள் அறியாததல்ல. எத்தகு பேறுபெற்று இச்சிறு பாலகன் இங்கு அவதரித்தினன் எனப் பெரிய திருவடி வியந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்கிறாப் போல… ஐந்தில் இவரை அடையாளங் காட்டிய இறைவனின் திருவுளந்தான் என்ன? என அக மகிழ்ந்தார். மனசார அவனுக்குத் தம் ஆசிகளை வழங்கி வந்தார். ஒரு நாள் அவனை யாம் இப்பயண நெடுவழியில் சந்திக்க வாய்ப்புக் கூடிவரும் என அவர் நம்பிக்கை கொண்டார்.
அடாடா, பார்த்து ஒன்றாக உண்டு களித்து உரையாடி மகிழா விட்டாலும் இச்சிறு மகவு என்னில் புகுந்து இதயத்தில் எத்துகிறது என வியந்தார். காலம் கைகூடி வரும்… நாம் கண்கூடி மகிழ்வோம்…. எனக் காத்திருந்தார்.

பெரிய திருவடி விட்டுச் சென்றவை விருத்தங்கள் அல்ல- கவிதா விருட்சங்கள். எத்தகு நிழலை ஜனங்களுக்கு அவை வழங்கின? ஈசன் எந்தை இணையடி நிழல் அல்லவா அவை. ஐயன் கடலில் முத்தெடுத்தாற் போலத் தத்தெடுத்த பிள்ளை அவர். பிரித்தெடுத்த தங்கம். சுண்ணாம்புக் காளவாயில் சுட்டெடுத்த தங்கம். அது மேலும் பொலிவது இயற்கையே அல்லவா?
வெளி நெற்றியில் திருநீற்று வரிகள்… உள்ளேயோ பக்தியின் வரிகள். விழித்த மனதின் பாடல் வரிகளாக அவை கவிதைக் கவரி வீசின. குளிந்த கடலலைகள் போல.
மனமெனும் தோணி கண்ட மானுடம்… வாழ்க்கைக் கடல் கடக்க முயல்கிறது. கவிதைகள் வாழ வகை செய்கின்றன. பிறவிப் பெருங்கடல் கடக்கப் பேருதவி செய்கின்றன.
கடலுக்கு சிறகு முளைத்தால் அலைகள்…
உயிர்ப்பறவை உயர்ந்தெழட்டும். மாதா. பிதா. குரு எனத் தொட்டும் விலகியும் கடந்து… கடவுளைக் கண்டடையட்டும். சொன்னாரே எம் முன்னரே… புழுவாய்ப் பிறக்கினும் என் மனதில் வழுவாதிருக்க வரந்தர வேண்டும். ஞானப்பிள்ளை காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியது. பெரியவரின் பாத்திறம் நோக்கி அதைத் தன் பாத்திரம் என்கிற மனதில் பத்திரப் படுத்திக் கொண்டார் ஞானப்பிள்ளை.
ஆடிப்பெருக்கெனப் பாடிப் பெருக்கி விட்டார் பெரியவர். எம் மனசின் கூளங்களைப் பெருக்கி, குத்துவிளக்காய்ப் பொலிகிறார்… வாழ்க பெரிய திருவடி.

அடியார்கள் சந்திக்கும் வாய்ப்பினை நல்க இறைவன் திருவுளங் கொண்டனன்.
சிறிய திருவடி வந்து சேருமுன்பே அவர் வருகை தர இருப்பதை ஊர் மக்கள் அறிந்ததையும், அவரை வரவேற்க இன்முகமும் எதிர்பார்ப்புமாய்க் காத்திருப்பதையும் அப்பர் கண்டார். மனம் கசிந்தார். தாமே சிறிது அவ்வூரில் தங்கி சிறிய திருவடியைச் சந்திக்கச் சித்தம் கொண்டார்.
பொடியன் அல்லன் இவன் – மானுடத்தின் விடியல் வெளிச்சம். பெருவிரல் என்பது ஆணவம். சுட்டியசையும். இவன் சிறு விரல் – ஞானத்தின் வெளிப்பாடு.
மணியோசை தந்த யானை, கொலுசின் ஓசைக்குக் காத்திருக்கிறது. உலா வருகிற உதய வெளிச்சம் அவன். மேற்கிலிருந்து நான் காத்திருக்கிறேன்.
ஊரெல்லையில் நுழைகையிலேயே சிறிய திருவடி அப்பர் பெருமான் தமக்கெனக் காத்திருக்கச் சித்தங் கொண்டதை அறிந்து நெகிழ்ந்தார். பேறு பெற்றேம் யாம், என அக மகிழ்ந்தார். பல்லக்கை விரைந்தேகப் பணித்தார். மூடுதிரை விலக்கி முகநிலாக் காட்டி ஆவலுடன் அவர் பார்த்தபடி வந்தார்.
பல்லக்கு எத்தனை விரைந்து ஏகினும் அது ஊர்ந்து செல்கிறாப் போலவே உணர்கிறார் ஞானப்பிள்ளை.
பல்லக்கு வந்த ஓசை கேட்ட பெரியவர் பரவசம் கொண்டு வெளிப்போந்தார். வீதியென்றும் பாராமல் விழுந்து வணங்கினார்.
”ஐயா என்ன இது? அறிவாலும் வாழ்வாலும் மூத்தவர் நீர். தமிழ்க் கங்கை நீர். நீர் எம்மை வணங்குவதா?” என் நெகிழ்ந்தார் சிறிய திருவடி.
”பையா, நீ சிவபிரானின் திருநீற்றுப் பையா, என ஊரே வியக்கிறது. பொய்யா அது? உம்மில் இறைவனைக் காண்கிறேன். கை தாமரையெனத் தானாய்க் குவிகிறதே” என்றார் பெரியவர்.
”குனிந்து இக்குழந்தையை ஏற்றிக் கொள்கிறது யானை…” என நகைக்கிறார் ஞானப்பிள்ளை.
”உனைக் காணத் தவங் கிடந்தேனப்பா… வா உள்ளே செல்வோம். விருந்துண்டபடி செவிக்கும் நிறைத்துக் கொள்வோம்” என்கிறார் பெரியவர்.
சிறிய திருவடிகளைக் காணவே அவருக்கு உள்ளம் பொங்கியது. அருள் சுரந்தது அந்த முகத்தில். என்ன தேஜஸ். பெரியவரது இடுங்கிய கண்களும் கூசின.
இவனைப் பெற இவன் தந்தையும் தாயும் எப்பேறு பெற்றனர் என விம்மியது மனம். இவனது அன்னை, பனித்துளி என்றால்… அந்தப் பனித்துளி சுமந்து காட்டிய பனைமரம் இவன்.
”வழிப் பயணம் சுகமாய் அமைந்ததா?” என்று பரிவுடன் கேட்டார் பெரியவர்.
”உம்மை நினைத்தபடி வந்தேன். மாசில் வீணையென எமக்குள் நீர் இசைத்தீர். இசைத்தேர் அசைத்தீர்.”
”ஆஹா! மேற்கைப் பார்த்து வாழ்த்திசை பாடுகிறது கீழ்த்திசை…” என்றார் பெரியவர்.
செம்புலப் பெயல் நீரென அந்த அன்புடை நெஞ்சங்கள் கலந்தன. இச்சிறுவனிடம் பிரிக்க இயலாத அளவில் தம் மனம் கட்டுண்டதை உணர்கிறார் பெரியவர். இவன் என்னே அழகு. சித்திரம் உயிர்பெற்ற விசித்திரம். சொல்லோ அதைவிட அழகு. அசை போட்டு மகிழத்தக்க அளவில் அசையும் சீரும் எதுகையும் மோனையுமாக… அம்மானைத் துள்ளல்.
பெரியவர் முடிவு செய்து விட்டார். இனி என் பயணங்கள் இப்பிள்ளையுடனேயே….
இவனைப் பிரிதல் இனி என்னால் தாளவியலாத துயரம் தரும்.
வயோதிகத்தின் வேண்டுகோளா இது? என்றது மனது. மெல்ல நகைத்துக் கொள்கிறார். அதைப் பற்றி என்ன? இவன் நிறைமதி. எம் வயதில் இவனை… மதியெனும் கோலாய் ஊன்றி நடக்கிறேன் யான்…
சற்று தயக்கத்துடன் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார் பெரியவர்.
”ஆஹா!, பேறு பெற்றேம்” என்றார் சிறிய திருவடி.
”இனி நமக்கெனத் தனித்தனிப் பல்லக்குகள் கூடத் தேவையில்லை…” என்றார் பெரியவர் மகிழ்ச்சியுடன்.

(தொடரும்)

About The Author