காமெடிப் படங்களையே பார்த்து அலுத்துப் போன தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாச விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்! படத்தில் பாடல்களே கிடையாது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடும் படத்தில் காமெடிக் காட்சிகளோ ஆபாசக் காட்சிகளோ சிறிதும் கிடையாது. இப்படி ஒரு முயற்சி செய்ததற்காகவே இவரைப் பாராட்டலாம்!
Emotional Thriller வகையைச் சார்ந்த திரைப்படம். யூகிக்கமுடியாத திருப்பங்கள், இறுதி வரை அதைக் கையாண்ட விதம் எனக் கச்சிதமான திரைக்கதை.
எதற்காக இவையெல்லாம் நடக்கின்றன என நாம் யோசிக்கும்போது அதை வழக்கமான தமிழ் சினிமா போல் முன்கதைச் சுருக்கமாகச் சொல்லாமல், கண் தெரியாத சிறுமிக்குக் கதை சொல்வது போல் "ஒரு ஊருல ஒரு ஓநாய் இருந்துச்சாம்…" என்று தொடங்கி மிஷ்கின் கதை சொல்லி முடித்ததும் பார்ப்பவர்களின் நெஞ்சும் கனக்கத்தான் செய்கிறது. அந்தக் கதை எல்லாருக்கும் புரியும்படிப் போய்ச் சேர்ந்தது படத்துக்குச் சாதகமான ஒன்று.
பார்வையற்ற சிறுமியாக நடித்த பெண்ணின் நடிப்பு அருமை! அதுவும் இறுதிக் காட்சியில், பதற்றத்துடன் சுவரின் ஓரம் தேடித் தடவியபடியே போய் நிற்கும் காட்சிகள், தனது அம்மா இறந்து போனதாகத் தெரிந்த உடன் மிஷ்கினிடம் " நாமளும் செத்துப் போய்ரலாமா" என்று கேட்கும் காட்சிகள் ஆகியவற்றில் ஸ்கோர் செய்கிறாள் சிறுமி.
சந்துருவாக ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்த ஸ்ரீ இதில் மேலும் தேறியிருக்கிறார். அவர் இறுதியில்தான் மிஷ்கினுடன் சேர்கிறார். அந்த மன மாற்றத்துக்கு வசனம் ஏதும் இல்லை. மாறாக ஒரே ஒரு காட்சி, அந்தச் சிறுமியைச் சுடுகிறான் வில்லன். அது வரை ஒன்றுமே செய்யாத ஸ்ரீ, சுடும் நேரத்தில் எந்த யோசனையும் இல்லாமல் சிறுமியின் குறுக்கே விழுகிறார். இப்படி நிறையக் காட்சிகள் கதாபாத்திரத்தை விவரிக்கின்றன.
இன்னும் நிறையக் கதாபாத்திரங்கள் படத்தில் பாராட்டும்படி இருக்கின்றன. குறிப்பாக அந்த சி.பி.சி.ஐ.டி அதிகாரி, வில்லனுக்குத் துணை போகும் காவல்துறை அதிகாரி, ஸ்ரீக்கு உதவும் மருத்துவர், ரூபாயைத் தூக்கிப் போடும் பிச்சைக்காரன், எட்வர்டின் அம்மா, சிறுமியை அழைத்து வரும் இளம்பெண், எப்போதும் தின்றுகொண்டே இருக்கும் வில்லனின் அடியாள், அடிபட்டவனிடமிருந்து கைக்கடிகாரத்தை எடுத்து வைத்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரி என நிறையக் கதாபாத்திரங்கள் ஒரு சில காட்சிகளே வந்தாலும் ஞாபகத்தில் நிற்கிறார்கள்.
இறுதிக்கட்ட காட்சிகளில் சிறுமியை ஒரு பெல்ட்டால் தன்னுடன் இணைத்துக்கொண்டு மிஷ்கின் போடும் சண்டை கிளாஸ்! படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சிதான். இருந்தும் படத்தில் படபடப்புக்குக் குறைவேயில்லை.
சிற்சில இடங்களில் லாஜிக் தவறினாலும், படத்தின் திரைக்கதை அதை மறக்கடிக்கிறது. முந்தைய படங்களில் இருந்தது போல் கால்களைக் காட்டும் காமிரா, தலை குனிந்தபடியே இருக்கும் ஹீரோ போன்ற சில விசயங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றன.
இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால், படத்தின் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். முகமூடி பார்த்து மிஷ்கினை விமர்சித்தவர்கள், இதைப் பார்க்க வேண்டும். மிஷ்கின் மீண்டும் தன்னை நிரூபித்துவிட்டார்!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – உணர்ச்சிப் போராட்டம்!