ஒளிந்து கொண்டிருக்கும் தாய் (1)

மொட்டை மாடியில் இருந்து சூர்யோதயமும் அஸ்தமனமும் விவரிக்க இயலாத கிளர்ச்சி அனுபவமாய் இருந்தனது.

ஊரில் அவன் பிளாட், தரைத்தளமும் இல்லாமல் மேல்தளமும் இல்லாமல் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும். மொட்டைமாடி மேல்தளத்துக்காரர்களின் குத்தகை போல. மேல்மாடியில் தளத்தையே மறைத்து அட்ச தீர்க்க ரேகைகளாய்க் கொடிகள்., எப்பவும் யார் வீட்டுத் துணிகளாவது காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே முகம் தெரியாமல் ஒரு குழந்தை உரக்கப் பாடம் படிப்பது மாத்திரம் கேட்கும். காற்றாடக் கொஞ்ச நேரம் போய் உட்கார முடியாது.

மாடியில் இருந்து தெருக்கோடியும் அதைத் தாண்டி ஊரெல்லை வரை கூடப் பார்க்க முடிகிறது. பால்காரன். கோலம் போடும் பெண்களின் முதுகுப்புறம். புதுப்பட அறிவிப்புப் பலகையுடன் சினிமா வண்டி.

தூரத்துப் பசிய வயல்கள். காற்றுக்குப் பயிர்கள் ஒருசேரத் தலையசைப்பது என்ன அழகு… எம்பியெஸ்ஸின் சேர்ந்திசை போல. நடுவே பாம்பாய் வளைபாதையில் பஸ்ஸோúஸô லாரியோ சைக்கிளில் மனிதர்களோ போவது தெரியும். தோள்ச் சுமையுடன், குளித்த ஈர உடைகளுடன் ஜனங்களின் நடமாட்டம் பார்க்கலாம். காலை இருள் பிரியப் பிரிய மஞ்சளாய் ஆரஞ்சாய் நீர்த்த நீலமாய் நிறக்கலவை உருமாறி வழிந்தோட, சட்டென்று பாலாய்ப் பொங்கியது வானம்.
சுமதிக்கும் இந்த ஊர் பிடித்துப் போயிற்று. அவனாவது சிறு வயதிலில் இருந்து கிராமத்துச் சூழலில் பழகி, பின் காலத்தின் நெருக்குதலில் நகரம் ஒதுங்கி, இப்போது மீண்டும் இழந்த அழகுகளைத் திரும்பப் பெற்றவனாக இருந்தான். இவளுக்கு இங்கே ஒத்துப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் அவள். சதா புதுப் புது அனுபவங்களுடன், பரபரப்பானது அவளது அன்றாடம். காத்திருப்பது என்பது பொழுதுகளை வீணடிப்பது என்றே அவள் உணர்கிறாள். காத்திருப்பின் கவிதைத்தன்மையை அவள் உணர்ந்தவள் இல்லை. எல்லாம் தன் வசம், தன் அறிவின் நிழலில்… என்கிற அவளது அணுகுமுறையில் அவனுக்கு அதிக உடன்பாடு இல்லை, அது தவறு என்று அவனால் சொல்ல முடியாவிட்டாலும் கூட….

திண்ணை வைத்து உள்நீளமான வீடுகள். பெண்கள் வாசல் திண்ணையில் தானியங்கள் புடைத்துக் கொண்டு, உட்கார்ந்து தலைகோதிச் சிக்கெடுத்துக் கொண்டு, வாசலில் நெல்லோ மிளகாயோ பரத்தி அளைந்தபடியே சினிமாக்கதை பேசினார்கள். சுமதி வருவதை கவனித்து அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வெட்கமாய்ப் புன்னகைத்தார்கள். பேசும் கதையை விட அவர் களுக்கு சுமதி சுவாரஸ்யமாய் இருந்தாள்.

காலை விடியலில் ஆற்றங்கரைக்கோ ஊருணிக்கோ போய்த் துவைத்துக் குளித்து அவர்கள் ஈர உடைகளைத் தோள்களில் குவித்துக் கொண்டு,. ஈர மணலின் குறுகுறுப்பும் புடவைத் தடுக்கலுமாய்ப் புது நடை நடந்து வந்தார்கள். வீட்டில் குளியல் அறையில் குளிப்பவள் என்று சுமதி மீது அவர்களுக்கு மரியாதை இருந்தது.

கோயிலுக்கோ கடை கண்ணி என்றோ அவள் வெளியே கிளம்பினால் அவர்கள் அவளை வைத்த கண் வாங்காமல் கவனித்தார்கள். அவள் அணிந்து கொள்ளும் உடை, அதை அவள் அணிந்து கொள்ளும் முறை, அவள் செய்துகொள்ளும் அலங்காரம்…. இதைப் பற்றி யெல்லாம் அவர்கள் பிறகு பேசிக் கொண்டார்கள். சிறு உதவி என அவள் விரல சைத்தாலே அவர்கள் சிரமேற்கொண்டு அதைச் செய்து கொடுத்தார்கள்.

தான் கொண்டாடப் படுவதை, குறைந்தபட்சம் தன் அருகாமை உணரப் படுவதை அவள் விரும்பினாள், என அவன் நினைத்துக் கொண்டான். அது அவளது இயல்பு. வீட்டில் அநேக சந்தர்ப்பங்களில் அவள் தன் அப்பாவைக் கைனடிக் ஹோண்டா வில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்தில் விட்டிருக்கிறாள். கல்லூரிக்குப் போய்விட்டு, வீடு திரும்பத் தாமதமாகி விட்டால், தனியே ஆட்டோ பிடித்து வீடு வந்து விடுவாள்…..

இன்றைக்கும் எங்கள் விஜயாவுக்குத் தனியே கல்லூரி போய்வரத் தெரியாது. "அவ என்னிக்குதாம்மா கத்துப்பா?" என்று அவன் கேட்டால்,"கூடப் போய்ட்டு வாங்க. பஸ் ஸ்டாண்டு வரைதானே? அதுகூட முடியலியா உங்களுக்கு? வேற எதுக்குடா நீங்க கூடப் பொறந்திருக்கீங்க?" என்பாள். அம்மா சொன்னால் சரி, மாற்றிப் பேச யாருமில்லை அங்கே.

மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய ஃபிப்ளாட்டில் அவன், அண்ணா வெங்கடேசன், அவன் மனைவி சந்திரா, குழந்தை ரேணுகா, தங்கை விஜயா, அவனும் சுமதியும், கூட அம்மா…. என்று கூட்டுக் குடும்பமாக வாழ்வதே சுமதிக்கு என்னமோ போலிருந்தது. கல்யாணம் ஆனதும் சின்னஞ் சிறுசுகளைத் தனிக் குடித்தனம் வைக்கிறதைப் பார்த்துப் பழகியவள் அவள்.

நடுவாய், வட்டத்துக்குள் பம்பரமாய், அச்சாய் வளைய வந்தாள் அம்மா. எத்தனை மணிக்குப் படுத்தாலும், வழக்கமான காலையில் அம்மா விழித்துக் கொள்வாள்…. இன்னிக்கு ரேணுகா வுக்குச் சீக்கிரம் போகணும்னாளே, முரளிக்கு இன்ஸ் பெக்ஷன்னானே…. அவளுள் உள் நரம்புக்குள் செய்தி துடித்துக் கொண்டிருந்தது. அதுதான் அவளது அலாரம்.

அம்மாவின் குடைக்குள் எல்லாரும் அங்கே அடங்கிக் கிடந்தாற் போலிருந்தது. சுமதிக்கு. ஆண்களே அவளது ஆளுமைக்குக் கீழ்ப் படிந்தவர்களாக வளைய வந்தது அதிசயம் போலவே பட்டது. ஆண்மை என்பது முரட்டுத்தனமும் வலிமையும் வேகமும் எனவே அவள் அறிந்திருந்தாள். அவள் தம்பி சேகர் – கம்பியூட்டர் கம்பெனியில் வேலை அவனுக்கு. பரபரப்பானவன். ஓய்வே கிடையாது. அவன் பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். நுனி நாக்கு ஆங்கிலம். அம்மாவே அவனை, சின்னப் பையன்… என் வயிற்றில் பிறந்தவன் என அணுக முடியாது.

சுமதி கல்யாணமாகி வந்த தினத்தில் எல்லாருமே வீட்டில் இருந்தார்கள். வீடே கலகலப்பாய் வெளிச்சமாய் இருந்தது…. அவன் சற்றே பெருமையுடன் சுமதியைப் பார்த்தான். ஒரே வீட்டில் இத்தனை மனிதர்கள் அடைசலாய் அதுவும் உற்சாகமாய் இருப்பதே அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சாதாரண அந்த வீட்டுக் கூட்டமே அவளுக்குக் கல்யாணக் கூட்டம் போல இருந்தது…. தன் வீட்டின் அமைதியில் அவள் நெவில் ஷுட், மேரி கொரல்லி என்று யாரையாவது வாசித்துக் கொண் டிருப்பாள். ரேடியோ கேட்பாள். சில சமயம் கூடவே பாடுவதும் உண்டு.

இத்தனை மனிதர்கள் மத்தியில் வாழவே அவளுக்குத் திகைப்பு. ரகசியங்களை, அந்தரங்கங்களை இழந்தாற் போலிருந் தது. நடமாடவே கூச்சமாய் இருந்தது. அந்தரங்கத்தைப் பேணுதல் காற்றில் அலையும் சுடரைக் கைக்குள் பேணுதல் போல…. அந்தரங்கம் ஒரு மனிதனின் உள் அழகுகளைப் பெருக்குகின்றதுன. என் தாயாரைக் காட்டிலும் சேகரின் உலகம் பெரியது என்பதைது நாங்கள் யாவருமே உணர்கிறோம்….

எல்லாரும் ஒருசேர வீட்டில் இருப்பது சுமதிக்குத் தலைவலி தந்தால், மாமியாருக்கு அது எத்தனை சந்தோஷம் தந்தது!. வீட்டில் முறுக்கோ, உளுந்து வடையோ, அடையோ பண்ணவும்…. மருதாணியரைத்து வரிசையாய் ஆட்களை உட்கார்த்தி உள்ளங்கையில் இட்டுவிடவும்… மாமியார் புது வேலைகளில் உற்சாகப் பட்டாள். இருக்கிற வேலைகளே திகைப்பளிக்கும் எனக்கு… என சுமதி நினைத்துக் கொண்டாள். மாமியார் இரவில் ஒரு கல்சட்டி நிறையச் சாதம் பிசைந்து மாடிக்கு எடுத்து வந்தாள். வடுமாங்காய் பிய்த்துப் பிய்த்துச் சேர்த்தபடி சுற்றிலும் எல்லாரையும் உட்கார வைத்துக் கொண்டு கை கையாய்ப் போட்டாள்…. கோவிலில் பிரசாதம் என்று சுண்டல் தருகிறாற்போல., அம்மாவின் கைமணமே அலாதிதான், என்று அவள் கணவனும் போய் உட்கார்ந்து கொண்டான். சீச்சீ, என்ன இது வெட்கமில்லாமல்…. என்றிருந்தது. இந்த லெட்சணத்தில் அவளை வேறு சாப்பிட அழைக்கிறான். பசியில்லை, என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. சின்னவர் பெரியவர் வித்தியாசங் கூடவா இல்லாமல் போகும்?

இன்னொரு பெண்தானா நான் இவளுக்கு? கல்யாணம் என்பது இன்னும் சற்றுப் பொறுப்புக் கூடிய நிலையெனவே அவள் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு புதிய வீட்டுக்கு வந்திருந்தாள். தற்காத்து, தற்கொண்டாற் பேணி…. தனது வியூக எல்லைகளை, சிறகுகளை விரித்துக் கொள்ள அவள் எதிர்பார்த்திருந்தாள்.

முதலில் அவனுக்குப் பிரியமானவளாகி, அவன் தேவைகளை உணர்ந்துகொண்டு, தனது அருகாமையை அவன் உணர வைத்து, திருமண வாழ்க்கையைச் சற்று மேம்பட்டதாக ஆக்க, அவளுக்கு இங்கே வேலையே இல்லாமல் போயிற்று…. இங்கே வந்து மாமியாரிடம், அவள் என்னைப் பற்றிக் குறை சொல்வதைக் கேட்டுக்கொண்டு நிற்கிற சங்கடம் நேருமோ…. என்கிற பிரச்னை இல்லாததில் முதலில் ஆசுவாசமாய்க் கூட இருந்தது. நாளாவட்டத்தில், இலாகா ஒதுக்கப் படாத மந்திரி போல, தானே ஒதுக்கப் படுகிறோமோ என்கிற உணர்வைத் தாள முடியவில்லை.
சிறகுகள் முளைத்த பின்னும் அடைகாக்கப் படுகிற நிலை, தாய்மைக் கதகதப்பில் இதம் தேடுகிற எளிய நிலை…. அதிலும் இந்த விஜயா கொஞ்சுகிற சீராடல், அதை வாங்கித் தா, இதை வாங்கித் தா…. அம்மாவிடம் என்ன பேச? வேறெதற்குக் கூடப் பிறந்திருக்கீங்க? நாளைக்கு அவள் இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்…. என்று ஆரம்பித்து விடுகிறாள்.

வீட்டு வேலைகள் என்று அதிகாரப் பீடத்தில் அமர்ந்து கொண்டாள் அம்மா., சுமதியும் சந்திராவும் அம்மாவின் குற்றேவல்களுக்கு, சமையல் அறைக்கு வெளியே காத்திருந் தார்கள். காய்கறி நறுக்கிக் கொடுக்க வேண்டும். போய்த் தண்ணீர் எடுத்து வர வேண்டும்…. இப்படி. சீச்சீ, புருஷனுக்குச் சமைத்துக் கூடப் போட முடியாமல் ஒரு கல்யாண வாழ்க்கை எத்தனை அசுவாரஸ்யமானது!….
சமையல் ஆனதும், முதலில் ஆண்கள் சாப்பிட, அம்மா மேற்பார்வையில் இவர்கள் பரிமாற வேண்டும். ""“முரளிக்கு வெண்டைக்காய் போடு இன்னும் கொஞ்சம்”” என்பாள் அம்மா. யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும். திட்டமான உப்பு – கார கைப்பக்குவம். ருசி ஒருநாளும் மாறியதேயில்லை… எப்படி என்று ஆச்சரியமாய் இருக்கும்.

அவள் சாப்பிட உட்கார்ந்தபோது அம்மா அவளை, எலுமிச்சபழ ரசத்தைக் கையில் வாங்கிக் குடிக்கச் சொன்னாள். எனக்குப் பிடிக்கும் என்று எப்போது கண்டு பிடித்தாள், தெரியவில்லை. "தெரியும்" என்று அம்மா புன்னகைக்கிறாள்.

"சரிம்மா,. ஸ்வீட்டில் எனக்கு எது பிடிக்கும், சொல்லுங்க பாக்கலாம்?"என்று வேடிக்கைபோலக் கேட்டாள் சுமதி.

"ஜாங்கிரி."

"எப்பிடிம்மா கண்டுபிடிச்சீங்க?" என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சுமதி.

"உன் முதலிரவு அறையில் பார்த்தேன். காலைல அதைத்தான் மிச்சம் வைக்கல நீ…"

"ஒருவேளை இவர் சாப்பிட்டிருந்தா?" என்று வெட்கம் இடறக் கேட்கிறாள்.

"அவனுக்கு ஜாங்கிரி பிடிக்காது !"

நான் கவனிக்கவில்லையே என நினைத்துக் கொண்டாள் சுமதி. அவளுக்கு வருத்தமாய் இருந்தது.
பொறுப்புகளைத் தான் ஏற்றுக்கொண்டு காலை நேரத்தில் அவனை அலுவலகத்துக்கு அனுப்பும் வரை பம்பரமாய் அல்லாடி, அவனை அனுப்பியதும், ஸ் என்ற ஆசுவாசத்துடன் அலுப்புடன் நாற்காலியில் உட்கார்கிற நிலையை அவள் ஏக்கத்துடன் விரும்பினாள்.

அம்மாவின் ராஜ்யம்…. அவள் ஆள்வதைப் பற்றிக் கூட இல்லை…. எங்களுக்கெல்லாம் இலாகாக்களே இல்லையே? மாதம் பிறந்ததும் சம்பளம் வாங்கி எல்லாரும் அப்படியே அம்மாவிடம் கொடுத்து நமஸ்கரித்தார்கள். கைச் செலவுக்கு தினசரி அம்மா விடமே கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு ஒரு அவசரச் செலவு வரும் என்றால், நான் என்ன செய்வது? மாமியாரிடம் கேட்பதா? அவளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு செலவு செய்வதே, அந்த நிர்பந்தமே பிடிக்கவில்லை. இதற்கு ஒரு வழி பண்ணியே ஆகவேண்டும்…. என்று உட்புழுக்கமாய் உணர்ந்தாள்.
மொட்டைமாடியில் துளசிச்செடி தொட்டிக்குள் காடென மண்டிக் கிடக்கிறது. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு அம்மா மாடிக்குப் போனால், சந்திரா கூடப் போகிறாள். கொடித்துணிகள் அம்மா மேல் படாமல் பிடித்துக் கொள்வாள். அம்மா துளசிக்குத் தண்ணீர் ஊற்றிப் பிரதட்சிணம் செய்வாள். வணங்குவாள். சந்திரா மாதவிலக்கான ஒரு தினம் பொறுப்பு சுமதிக்கு வந்தது. ஏன் விஜயா போகட்டுமே…. என்று கோபம் கோபமாய் வந்தது.

"எங்கம்மா கிட்ட நீ ஏனோ வேத்துமுகம் காட்டறே!? பெரிய மன்னி அம்மாட்ட எவ்ளோ பிரியமா நடந்துக்கறா பாத்தியா?" என்கிறான் முரளி.

"அ…" என்று சிரித்தாள் சுமதி. "அவளை மனசைத் திறந்து பேசச் சொல்லிக் கேக்கணும் நீங்க. நீங்க ஆம்பளைங்க! கேப்பீங்களா? மாட்டீங்க…." என்கிறாள் சுமதி. "நீங்க கேட்டுப் பாருங்கோ. உங்கம்மாவை நார் நாராக் கிழிச்சித் தோரணம் கட்டிருவா… நானாவது பேசி ஆத்திக்கறேன். உங்கண்ணா பேசவே விட மாட்டார் போலருக்கு."

"எங்கம்மாவுக்கு அதிகாரப் பித்தோ ஆட்சி போதையோ கிடையவே கிடையாது. சின்ன வயசிலேயே எங்கப்பா தவறிட் டார். அஸ்ஸோúஸô…. அப்ப மட்டும் அம்மா தலை நிமிரலைன்னா எங்க கதி? நினைச்சிப் பாரு!. வீட்ல இன்னிக்கு நிறைஞ்ச மனுஷியா வளைய வரா. அதுக்கு தன்னையும் எங்களுடன் கூட தயார் பண்ணிண்டவ அவ. இல்லையா?"

அவள் முகம் சுருங்கப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. "அம்மாகிட்ட நீ கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு இவளே. அவ உன்னைத் தன் பொண்ணு மாதிரிதானே நடத்தறா? ஏதாவது வித்தியாசமா நடத்தறாளா, பேசறாளான்னு சொல்லு. பாக்கலாம்…"

அவன் வண்டி ஒழுங்காக ஓடும் வரை ஏன் கவலைப் படுகிறான்?. தன் ஸ்தானம் பற்றிய பிரக்ஞை உள்ள மாமியார், எங்கள் ஸ்தானங்களை அலட்சியப் படுத்துவானேன், என்றிருந்தது சுமதிக்கு. ஆம்! நான் இந்தக் காலப் பெண். அடக்குதலோ அடங்குதலோ இரண்டும் இல்லை. நாம் சுதந்திர உணர்வுடன் பரஸ்பர சுதந்திரத்தை மதித்து அங்கீகரித்து அனுமதித்து வாழ்வோம். அதுவே நியாயமானது…. இந்தப் பணிவு, மாமியாரிடம் வாலைக் குழைத்து வளைய வருவது போலியானது. அல்லவா?

"புரியலியே" என்றான் அவன். "உன் சுதந்திரம் எந்த அளவுல குறைப்பட்டுப் போச்சுன்றே? அம்மா உன்னை எந்த அளவுக்காவது கட்டுப் படுத்தறாளா? இந்த மாதிரிதான் உடையுடுத்தணும், இப்படிதான் இருக்கணும்…. வாசல்ல வந்து வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கக் கூடாது. இதைப் பேசணும், இதைப் பேசக் கூடாதுன்னு அட்வைஸ் பண்றாளா? உன் இஷ்டப்படிதானே இருக்கே நீ? அப்பறமென்ன?"
இவனிடம் பேசிப் பிரயோஜனமில்லை. இஅவன் ஒரே மாதிரி சிந்தித்துப் பழக்கப் படுத்தப் பட்டவன். மாற்று யோசனைகள் அற்றவன் இவன். அம்மா தியாகி. அவ முகம் கோணக் கூடாது… என்பதை மனசில் ஆழ வைத்துக் கொண்டிருக்கிறான். சென்டிமென்ட் அம்மாவின் சந்நிதிக் கற்பூரம்.

"இங்க பாரு!. இப்ப…. உன்ட்ட எப்படிச் சொல்றது?… ம்! இப்ப நாங்க அம்மா கீழ இருக்கம்ன்றே, எங்களுக்குக் கல்யாணமாகி தனிக் குடும்பம்னு ஆனப்பறம்…. தனிக்குடும்பம்ன்றதையே நாங்க நம்பல. சரி அதை விடு. இந்த வயசுலயும் அம்மாவைத் தலைமைச் செயலகமா வெச்சி இன்னும் குழந்தையாவே நாங்க நடமாடறதா நீ நினைக்கறே. இல்லையா?… சரி, அட ஒரு போதாத காலம். அம்மாவுக்கே ஏதாவது ஆயிட்டதுன்னு வையி. இந்தக் குடும்பம் திகைச்சு நின்னுடாது. அடுத்த பெரிய உறுப்பினர் தலைமை ஸ்தானம் எடுத்துப்பான். எங்க விஜயா கல்யாணமும் அம்மா இருந்தாலும் இல்லாட்டியும் ஜாம் ஜாம்னு நடந்துரும். அதைவிட…." என்று நிறுத்தினான்.

"இப்ப…. எனக்கோ அண்ணாவுக்கோ கூட ஏதோ ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சின்னா, அப்பவும் உனக்கோ மன்னிக்கோ பெரிய அளவுல வாழ்க்கை சீரழிஞ்சிறாது. இங்க சௌரியம் பண்ணிக் குடுப்பா அம்மா. புரியுதா? உங்களை விட்ற மாட்டா. அதான் கூட்டுக் குடும்பத்தோட மகிமை. அதாவது தனிக் குடித்தனத்துல ஒரு இழப்பு மரம் முறியறாப்ல திகைக்க அடிச்சுடும். கூட்டுக் குடும்பம்னா அதே இழப்பு கிளை முறியறாப்ல…."

விஜயாவை எங்க போனாலும் கூடப் போய்க் கூட்டி வருவது, அண்ணன் தங்கைப் பாசத்தை உணர்வு மங்கவிடாமல் காக்கிற அம்மாவின் உபாயம் அல்லவா? நாளை அவ கல்யாணம் என்று வரும்போது சகோதரர்கள் வேத்துமுகம் காட்டிவிடக் கூடாது. என் சம்பளம் இவ்வளவு… நான் இவ்வளவுதான் தர முடியும்… என்பதான பிரச்சிசனைகளை அம்மா கவனமாய்த் தவிர்க்க விரும்புகிறாள். சரிதானே? இதையெல்லாம், இந்த அழகுகளையெல்லாம் தொலைத்து விட்டு, வாழ்க்கையை நம்பிக்கை அடிப்படையில் எளிமையாக்கிக் கொள்ளாமல், அறிவு அடிப்படையில் சிக்கலாக்கிக் கொள்வது தேவைதானா, என்பது அவன் கட்சி.

அம்மாவின் ஜெராக்ஸ் நகல்கள் இவர்கள். அன்பினால் அந்த வீடு முழுவதும் அவள் நிரம்பியிருந்தாள். குழந்தைகளுக்குப் பாட்டி என்றால் உயிர். தாய்ப்பால் ஒன்றுதான் அவள் கொடுக்கவில்லை. இருந்தால் அதையும் அவள் கொடுத்திருப்பாள்…. இந்த வயசிலும் இவனும் குடிக்கத் தயார், என நினைக்கையில் சிரிப்பு வந்தது அவளுக்கு.

அவன் அம்மாவை அவன் புரிந்து கொள்ள வேண்டுமானால், நானோ, இவரோ, வேறு பிரஜைகளோ…. தான், தனது என்கிற சுயரூபங்களுடன் நடமாடி அல்லது உருப்பெருகிக் காட்ட வேண்டும். அதை அம்மா எப்படி எடுத்துக் கொள்வாள் என அவன் நேரடியாய்ப் பார்க்க வேண்டும். நினைவு அளவிலேயே இவன் திகைக்கிறான். விபரீதங்கள் நிகழ்ந்து விடுமோ எனப் பதைபதைக்கிறான். இவளால் எதும் குழப்பம் விளைந்து விடுமோ எனப் பதறுகிறான்…. என்ன செய்ய!…
.
அப்போதுதான் அந்தச் செய்தி வந்தது.

முடிவு அடுத்த இதழில்

About The Author