ஒரு மிகை யதார்த்தக் காலக்கட்டம் (2)

இருவரும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள். அவன் சமையல் அற்புதமாய் இருந்தது. அவளுக்கு ஒரே உற்சாகம்! அவன் சமையலை ஆகா ஓகோவென்று கொண்டாடினாள்.

"இப்படியொரு சாப்பாடு சாப்பிட்டு எத்தனையோ காலமாச்சு" என்றாள்.

"இதுவும், அதுக்குப் பிடிச்ச உணவு சாப்பிட்டது இன்னிக்கு. வேக வெச்ச இறைச்சி…" அப்பா நாயைக் காட்டிச் சொன்னார். "இது பேர் பிரின்ஸ். இதுக்கு வயசு ஒரே வாரம் இருக்கும்போது இவன் அம்மாவை யாரோ சுட்டுக் கொன்னுட்டாங்க. அப்பலேர்ந்து இவன் என்கூடத்தான் இருக்கிறான்."

அவள் எழுந்து பிரின்ஸைக் கட்டிக்கொண்டாள். அதுவும் அவளோடு ஈஷியது.

"நான் எங்க அப்பாவைப் பார்த்ததே இல்லை" என்றாள், அவன் கண்ணைப் பார்த்தபடி.

"அவர் ஒரு வீதிநாடகப் பிரச்சாரக் கலைஞர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கைப்பட எழுதிய சில நாடகப் பிரதிகளை அவர் கையெழுத்திலேயே இன்னும் வைத்திருக்கிறேன். கல்லூரிகளுக்கு இடையேயான நாடகப் போட்டி ஒன்றில், அவரது ‘சொர்க்கத்தில் நரகம்’ என்ற நாடகத்தை நான் மேடையேற்றி, முதல் பரிசு கிடைத்தது எனக்கு. இந்தப் பக்கத்து எல்லாப் பத்திரிகைகளும் அதைப் பற்றி விலாவாரியா செய்தி வெளியிட்டார்கள். அவருடைய சில நாடகங்களைத் தொகுத்து, நூலாகக் கொண்டுவரப் போகிறேன். பிழை திருத்தி அச்சுக்குக் கொடுத்து விட்டேன். விரைவில் அது வெளிவரப் போகிறது."

"அருமையான யோசனை! ஆனால் உங்க அப்பா… அவங்களுக்கு என்ன ஆயிற்று?"

"உடம்பு முடியாத யாரோ சிநேகிதனைப் பார்க்க என்று ஒருநாள் கிளம்பிப் போனார். திரும்பி அவர் வரவேயில்லை. தனக்குத் தெரிஞ்ச இடம், தெரியாத இடம்னு அனைத்திலும் அவரை எங்க அம்மா தேடிவிட்டாள். அரசுக்கு எதிரான கலகக்காரர்களின் பதுங்கிடங்களில், பக்கத்து நாடுகளிலெல்லாம் கூட அவரைச் சலித்துத் தேடிச் சலித்தாள்."

சிறிது மௌனத்துக்குப் பின் அவள் தொடர்ந்தாள்.

"சொல்லவே சங்கடமாய் இருக்கிறது. என்னிடம் அம்மா சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள். எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அத்தனை ஒத்துப்போகல்ல என்றெல்லாம் ஊரில் வதந்தி. அப்பாவோட சிநேகிதர் கூட அம்மாவுக்குத் தொடுப்பு என்று கூட… நீங்க அதை நம்பறீங்களா?" – அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. என்ன பதில் அவன் சொல்ல முடியும்? திடீரென்று வானம் பொத்துக்கிட்டுத் தலைமேல் மழை ஊத்தினாற் போலிருந்தது.

அவள் தொடர்ந்தாள். "அப்பா காணாமல் போனதுக்கு அம்மாவுக்கும் ஒரு பங்கு இருக்கலாம்னு கூடச் சில பேர் சந்தேகப்பட்டார்கள். இது தவிர, நிறையக் கதைகள் வேற உலா வந்தன. போலிஸ் விசாரணையில் அவர் இறந்துபோனார்; பதுங்கி வாழும் கலகக்காரர்களை என்கவுன்டர் பண்ணுகையில் அப்பாவும் இறந்துவிட்டார்; ஒரு கவர்ச்சி நடிகையுடன் அவர் ஓடிப் போயிட்டதாகக் கூடப் பேச்சு…

… ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், அவங்களுக்குள்ள பணப் பிரச்னை இருந்திருக்கிறது. அம்மாவோட அத்தனை நகைகளையும் விற்றுவிட வேண்டியதாகியிருக்கிறது. அப்பாவுக்கு நிரந்தமான வருமானம் என்று இல்லை. அம்மாவை அடிக்கடிப் பணம் கேட்டுப் பிடுங்கியிருக்கிறார்… நாடகம் போடறது ஒண்ணே குறின்னு, அதற்காக சிநேகிதர்கள்கிட்டயெல்லாம் கைநீட்டிக் கடன். இது அவங்க இடையே பெரிய பிளவை, திரும்ப ஒட்டிவர முடியாத பிரிவை ஏற்படுத்தியிருக்கும்னு தோணுது."

பேசாதிருந்தான் அவன். ஒரு கறைபோல இவள் இப்போது நிதர்சனச் சாட்சி போல இருக்கிறாள் என்பது, அவனைத் துன்பப்படுத்தியது. கடைசியாக, பட்டுக்கொள்ளாத பாவனையில் அவன் சொன்னான். "குழந்தே! நாம வாழ்கிறது ஒரு மிகை யதார்த்த காலக்கட்டத்தில். நாம் கேட்கிற உண்மையில் ஜோடனையும், ஜோடனையில் உண்மையும் கலந்தே நமக்கு வாய்க்கிறது…"

"ம்! எனக்கு ஒரு எண்ணம்…" கனவில் போல அவள் பேசினாள். "ஒருநாள் அப்பா, தன்னைப்போலத் திரும்பி வருவார். நீங்க பாத்திருக்கீங்களா? நாடகம் முடிஞ்சப்பறம் அந்த இயக்குநரும், கலைஞர்களும் ஒண்ணா மேடைக்கு வருவார்கள். ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பார்கள்…"

ஆகாவென்றிருந்தது அவனுக்கு. "மனசாரக் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டால், கடவுள் அதைச் சீக்கிரமே நிறைவேத்திவிடுவார் அம்மா…"

அவள் தொடர்ந்தாள். "ஒரு உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அம்மா தலைமையாசிரியர் ஆனாள். நான் இப்ப அதில்தான் ஆசிரியர் வேலை பார்க்கிறேன். ஆறு மாசம் முன்னால், அவள் மார்பகப் புற்றுநோயில் இறந்து போனாள். என் பேர் டோலி. நான் முகம் அறியாத அப்பாவின் ஒரே பெண். என் அதிர்ஷ்டம்… உங்களை அப்பான்னு வாய்நிறையக் கூப்பிடுகிற வாய்ப்பு!" அவன் சந்தோஷமான புன்னகையுடன் தலையாட்டினான்.

"நீங்க ரொம்ப அலுப்பா இருக்கீங்க அப்பா! போய்ப் படுத்துக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க!"

******

ஒருமணி நேரத்தில் அவள் எழுப்பினாள். "சூடா காப்பி…" என்றாள். அவர்கள் பேச்சின் நடுவே, தூரத்துக் குண்டுச்சத்தம் நிறுத்தற்குறிகள் இட்டது.

"“உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?" அவள் கேட்டாள்.

"ம்! ஆனால், அவரைப் பற்றிப் பெரிசா என்னால புரிஞ்சிக்க முடியவில்லை. கடவுள் ரொம்ப மர்மமான ஆசாமி." அவன் புன்னகைத்தான்.

"அம்மா…" என்றாள். "கடைசிக் காலங்களில்… படுத்த படுக்கை. பெரும்பாலும் மருந்தின் மயக்கத்தில்தான் இருந்தாள். ஆனாலும், எந்த நிலைமையிலும், அவள் உதடுகள் என்னவோ சொல்லித் துடித்தபடியே இருந்தன. எப்ப நினைவு திரும்பினாலும் அவள் சொல்வாள்… அவர் வருவார், கண்டிப்பா வருவார்… என்னிடம் கூட அவள் கேட்பாள். அவர் வந்தாரா?… அப்படியே மயக்கக் கிறக்கத்துடன், என் கூட யாராவது நிக்கறாங்களான்னு பார்ப்பாள். ஏமாத்தமாய்க் கண்ணைத் திரும்ப மூடிக்கொள்வாள். கடைசியா ஒருதரம் தன்னை அவர், கிருஷ்ணர் வந்து பார்ப்பார்னு அவள் ஆசையுடன் காத்திருந்தாள்…

ஒருநாள் அழவே அழுதுட்டாள். அவருக்கு நான் ஒரு பொருட்டாவே இல்லையோ என்னமோ? அடுத்தநாள் அவள் தேறியிருந்தாள். மனசில் ஆறுதல் வந்திருக்கலாம். முகத்தில் களை வந்திருந்தது. அவள் தேடிய முடிவுக்காலம் வந்துவிட்டதான, அதைக் கண்டுகொண்ட ஒரு தெளிவு அது… என்கிற முகத்தின் புன்னகை! என்னைக் கட்டிக்கொண்டு அவள் சொன்னாள், உலகத்தில் அன்புதான் எல்லாமே… எனக்கு அப்போது அது விளங்கவில்லை. அடுத்த கணம் அம்மா இறந்துவிட்டாள்.

பிற்பாடு, அம்மாவோட சிநேகிதி ஒருத்தி எனக்குச் சொன்னாள். பகவான் கிருஷ்ணர், அம்மாவோட கடைசி காலத்தில் அபயஹஸ்தம் கொடுத்தாராம். கடைசி வரை அம்மா கிருஷ்ணநாமத்தை விடாமல் உச்சாடனம் பண்ணிக்கிட்டிருந்தாள்.

… என்ன யோசிக்கறீங்க?" என்றாள் புன்னகையுடன்.

"என்னடா இவ, லூசுப்பிறவி! புது ஆள் ஒருத்தரை வீட்டுக்குக் கூட்டி வந்து வெச்சிக்கிட்டு… அவரை அப்பான்னு அழைச்சிக்கிட்டு… கன்னாபின்னான்னு என்னவோ அவர்கிட்ட பினாத்திக்கிட்டு…"

அவன் சிரித்தான். "அதெல்லாம் ஒண்ணுமில்ல. மகளின் யோசனைகளை, உணர்வுகளை, நம்பிக்கைகளைப் பகிர்ந்துக்கலைன்னா அப்பா வேற எதுக்கு இருக்காரு?"

கதவை யாரோ தட்டும் சத்தம். அவள் வெளியே போனாள். யாரோ ஒரு பெண் குரல் அவளுடன் கிசுகிசுப்பாய்ப் பேசிக்கொண்டிருந்தது. கதவைச் சாத்திவிட்டு யோசனையுடன் அவள் உள்ளே வந்தாள்.

(தொடரும்)

About The Author