அத்தியாயத்தின் முன்பாதி: ஒரு பூனை புலியாகிறது (8.1)
நான்கு ஜோடி டிரிங்குக்குப் பிறகு, அது டக்கென்று நின்றது. சேரனின் ‘ஹலோ’வுக்கு, "யெஸ்! உங்களுக்கு யார் வேணும்?" என்ற குரல் பதில் அளித்தது.
அந்தக் குரல் ஹனிமேன் குரல்தான்! அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. இப்போது அந்தக் குரல் உண்மையில் தேன் குரலாக இனித்தது.
"சார், நீங்க ஹனிமேன்தானே?"
"யெஸ்! நீ சேரன்! சேரா, உன்னை யாரோ கடத்திட்டுப் போனாங்களாமே! தப்பிச்சுட்டயா?"
"ஆமாம் சார்!"
"இப்ப நீ எங்கிருந்து பேசறே?"
அவன் அந்தத் தெருவில் நடந்து வந்தபோதே சில கடைகளின் பெயர்ப் பலகையைப் படித்துக் கொண்டு வந்தான். அதனால், "சாமித்தெரு – சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பேசறேன் சார். நீங்க இங்க வர்ற வரைக்கும் நான் காத்திருந்தா, முன்னாடி மாதிரி நடந்துடலாம், சார்."
மறுமுனையில் ஒரு நொடி மௌனம்.
பிறகு, "சேரா, பக்கத்திலே ஆட்டோ, டாக்ஸி ஏதாவது நிற்குதா?" என்று ஹனிமேன் குரல் கேட்டது.
சேரன் நிமிர்ந்து வெளியே பார்த்தான். எதிர்ப் புறத்தில் ஒரு டாக்ஸி நிற்பது தெரிந்தது.
"ஒரு டாக்ஸி இருக்குதுங்க சார்."
"சேரா! அந்த டாக்ஸி டிரைவரை ஒரு நிமிஷம் இந்த போனில் பேசச் சொல்லு. நீ வர வேண்டிய அட்ரஸை டிரைவரிடம் நான் சொல்றேன்."
சேரன் ரிசீவரை டேபிள் மேலே வைத்தான். "சார், ஒரு நொடியிலே வர்றேன்" என்று கூறிவிட்டு, அவர் பதிலுக்குக் காத்திராமல், தெருவில் இறங்கி, டாக்ஸியிடம் ஓடினான்.
"டிரைவர்!"
டிரைவர் ஓர் இளைஞன். ஏறிட்டுப் பார்த்து, "எங்கே போகணும்?" என்று கேட்டான்.
"டிரைவர் சார்! நான் ஊருக்குப் புதுசு. எங்க மாமா போன்லே நான் வர வேண்டிய இடத்தைச் சொல்றார். தயவு செஞ்சு நீங்க வந்து கேட்டுக்கோங்கோ, ப்ளீஸ்…"
சேரனது குரலின் இனிமையும் பணிவும் அவனை எழுந்து வந்து போனில் பேசச் செய்தன.
"நான் டாக்ஸி டிரைவர் பேசறேன்."
"டிரைவர்! உங்களைக் கூப்பிட்ட பையனை டாக்ஸியில் ஏத்திக்கிட்டு நான் சொல்ற அட்ரஸுக்கு வா! மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் தரேன்."
"நூறு ரூபாயா?"
"ஆமாம்; ஒன் ஹண்ட்ரட் ரூபீஸ்."
"அட்ரஸ் சொல்லுங்க."
ஹனிமேன் அட்ரஸைச் சொன்னான்.
"சரி! அழைச்சுட்டு வர்றேன்."
"டிரைவர், உன் டாக்ஸி நம்பர் என்ன?"
"எம். டி. யு. டபுள் ஃபோர் டபுள் ஃபைவ்" என்று தயங்காது சொன்னான் டிரைவர்.
சேரன் போனை வாங்கிப் பேசினான். "டாக்ஸியில் வந்துடறேன் சார்" என்று கூறிவிட்டு போனை வைத்தான். பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து மேசை மேல் வைத்து, "தாங்க்ஸ் சார்" என்றான்.
"ரெண்டு ரூபாயா? ஒரு ரூபாய் எங்கிட்ட இல்லே. ஒரு ரூபாய் இருந்தா கொடு" என்றார் சுழல் நாற்காலிக்காரர்.
"மீதி ஒரு ரூபாய் அப்புறம் வந்து வாங்கிக் கொள்கிறேன் சார்" என்று கூறிவிட்டு சேரன் கடையிலிருந்து இறங்கினான். டிரைவர் அதற்கு முன்னரே இறங்கி விட்டான்.
டிரைவர் டாக்ஸியில் ஏறி, கதவைத் திறந்துவிட்டான். சேரன், டாக்ஸியின் முன்புறமாகச் சுற்றிக்கொண்டு போய் டாக்ஸியில் ஏறினான். அப்படி முன்புறமாகச் சென்றபோதே டாக்ஸியின் நம்பர், எம். டி. யு. 4455 என்பதைப் பார்த்துக் கொண்டதால், ஒரு திருப்தி. அடுத்த நிமிடம் டாக்ஸி ஓடியது.
அரை மணி நேரத்தில் ஹனிமேன் அவனைச் சந்தித்தான். டிரைவருக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, சேரனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
ஹனிமேன் சேரனைப் பார்த்தான். அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வயதிலே குறைந்தவன். மெலிந்தவன். ஆனால் முகத்திலே அறிவும் திறமையும் தெரிந்தன. "சேரா! ஏதாவது சாப்பிடுகிறாயா!" என்று கேட்டான் ஹனிமேன்.
காலையில் வேலூரில் சாப்பிட்ட சேரன், பிறகு ஒன்றுமே சாப்பிடவில்லை. வயிறு ‘பசி!’ ‘பசி!’ என்று கூவியது. என்றாலும், "சார், நான் முதலில் சொல்ல வேண்டியதைச் சொல்லிடறேன். பிறகு சாப்பிடறேன்" என்றான், சேரன்.
ஹனிமேன் அப்படியும் அறைக்கு வெளியே போய்ச் சேரனுக்குச் சாப்பிட டிபன் கொண்டு வரச் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.
சேரன், விஜயின் பிறந்த நாளுக்காக ஊட்டிக்குச் சென்றது முதல் அன்று அங்கு வந்து சேர்ந்தது வரை நடந்த அனைத்தையும் சொன்னான். ஹனிமேன், ஏழு உலக அதிசயங்களையும் ஒன்றாகக் கண்டதுபோல் வியந்து போனான். உளவுத் துறையில் பணிசெய்ய வருகிறவர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள். பயிற்சியைப் பெற்ற ஒரு சிறந்த வீரனின் அஞ்சாமை – ஆற்றல்- அறிவுத் திறம் ஆகிய அனைத்தும் இந்தச் சிறுவனிடம் இருப்பதைக் கண்டு ஹனிமேன் உள்ளம் திகைத்தது! உடல் சிலிர்த்தது! சேரனைப் போன்ற தேசப்பற்றுள்ள வீரச்சிறுவர்கள் சில நூறு பேர் இருந்தால் போதும்! எந்த வல்லரசும் இந்தியாவைக் கண்டு வணங்கும் – ஹனிமேன் நினைத்தான்.
அறைக்குள் டிபன் வந்தது. அதைச் சாப்பிடத் தொடங்கும் முன், "சார், என் டாலரை உடனே கண்டுபிடிக்கணும்" என்று கூறினான், சேரன்.
"ஆமாம் சேரா! காக்கர்ஸ் ஸ்பானியல் விலை உயர்ந்த – அழகான நாய். அதை யார் பிடித்துக்கொண்டு போனார்களோ? விசாரிக்க வேண்டும்."
"இன்றே கண்டுபிடித்தால்தானே, நாளை நடைபெறவிருக்கும் கொலையை நிறுத்தலாம்."
சேரன் சொன்னதும் ஹனிமேனின் மனம் நடுங்கியது. நாளைய கொலையைத் தடுக்க வேண்டும். முதலில் சேரனின் நாயைக் கண்டுபிடிக்க வேண்டும்.
"சேரா, பேருந்து நிலையத்தில் உன்னைக் கடத்திய ஒருவன், நாயை எட்டி உதைத்தான். அப்புறம் நாயை நீ பார்க்கவில்லை, இல்லையா?"
"அப்புறம் சில நிமிடம் பார்த்தேன். நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது" என்ற சேரன், அந்தக் காட்சியை மனத்திலே நினைத்துப் பார்த்தான். அந்தக் காட்சியை நினைத்ததும் திடீரென்று அவன் முகம் ஒளிர்ந்தது.
"சார், அப்போ ஆட்டோ போன திசைக்கு எதிரே, நாயைப் பிடிக்கும் வேன் போனதைப் பார்த்தேன் சார். டாலரை அவர்கள் பிடித்து விடுவார்களோ என்று பயந்தேன் சார். இது வரைக்கும் அதை மறந்துட்டேன். நாயைப் பிடித்து வைக்கிற இடத்துக்குப் போனால் உடனே டாலர் கிடைக்கும் ஸார்."
சேரன் சாப்பிடுவதை விட்டு எழுந்து நின்றான்.
ஹனிமேன் அவனை அழைத்துக் கொண்டு காரிலே புறப்பட்டான்.
அவர்கள் புறப்பட்ட அதே நேரத்தில், பேருந்து நிலையத்தில் சேரன் நாயைப் பற்றி விசாரித்த ஜாக்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அழகான ஒரு நாயை நாய் வண்டிக்காரர்கள் பிடித்துக் கொண்டு போனதை அறிந்து, பிடிக்கப்பட்ட நாய்களை வைத்திருக்கும் இடத்தின் வாயிலை அடைந்துவிட்டான். ஆம்; ஜாக்கி, சேரனை முந்திக் கொண்டான்.
–புலி வளரும்