ஒரு பூனை புலியாகிறது (5.2)

சேரன் எங்கே? (2)

அத்தியாயத்தின் முற்பகுதி: சேரன் எங்கே? (1)

ஜாக்கியின் மனம் கேட்டது.

"ஒரு பையன் இவ்வளவு நேரம் தோட்டத்துக்குள்ளே ஓடுவானா? பாபு இன்னுமா அவனை விரட்டிக் கொண்டிருக்கிறான்?"
ஜாக்கியின் மனம் அமைதி இழந்தது. அவன் கரும்புத் தோட்டத்தின் ஓரத்திலேயே நடந்து போனான். சிறிது தூரம் சென்றதும் கரும்புத் தோட்டத்தைப் பிரிக்கும் உயரமான வரப்புத் தெரிந்தது. ஜாக்கி அந்த வரப்பின் மீது நடந்தான். இருபுறத்து வயலையும் கூர்ந்து பார்த்தபடி நடந்தான். அவன் நடக்க நடக்க, ‘சேரன் எங்கே? பாபு எங்கே?’ என்று அவன் மனம் கேட்டுக் கொண்டே இருந்தது.

வரப்பின் மேல் சுமார் பத்து நிமிடம் நடந்த பிறகு, எதிர்த்திசையில் யாரோ வருவதைக் கண்டான். வருவது யார்? பாபுதானா?

"பாபு…"

ஜாக்கி, குரல் கொடுத்ததும், "எஸ் ஜாக்கி" என்ற பதில் வந்ததுடன் எதிரே வந்தவன் கொஞ்சம் வேகமாக நடந்தான்.
ஜாக்கி திடுக்கிட்டான்! அவன் திடுக்கிட்டமைக்குக் காரணம், எதிரே பாபு மட்டும் – பாபு ஒருவன் மட்டுமே வந்து கொண்டிருந்ததுதான். அப்படியானால் மீண்டும் பொடியன் தப்பித்துக் கொண்டானா? சேரன் எங்கே?

ஜாக்கியும் பாபுவை நோக்கி வேகமாக நடந்தான். சில விநாடிகளில் இருவரும் நெருங்கியபோது இருவர் வாயிலிருந்தும் ஒரே கேள்விதான் வெடித்துக் கிளம்பியது.

பையன் கிடைத்தானா?

ஜாக்கி தான் ஏமாந்து விட்டதை நன்றாக உணர்ந்து கொண்டான்.

"என்ன பாபு இது! நான் கேக்கற அதே கேள்வியை நீ கேக்கறே? நீதானே பையனைப் பின் தொடர்ந்து போனே? பையன் கிடைச்சானான்னு நான் கேட்கிறது நியாயம். நீதான் பதில் சொல்லணும். சொல்லு பாபு! என்ன நடந்தது? சேரன் எங்கே?"

"கரும்புத் தோட்டத்திலே பையன் நுழைஞ்சதை நீ காட்டினே. உடனே நான் அவனைப் பிடிக்க ஓடினேன். அவன் எனக்கு முன்னாடி கொஞ்ச தூரத்தில் ஓடறதை உணர முடிஞ்சுது. கரும்புகளின் அசைவைப் பின்பற்றி ஓடினேன். கரும்புகளை விலக்கி, வழியுண்டாக்கிப் போறது எனக்குச் சிரமமாயிருந்தது. பையன் பழக்கப்பட்டவன் போல் முன்னேறிட்டான். அதே நேரத்திலே காத்தும் பலமா வீசிச்சு. எல்லாக் கரும்புகளும் அசையவே, நான் அவனைத் தவற விட்டுட்டேன். இந்த வரப்பிலே ஏறி நின்னு பார்த்தா, கரும்பு வயல் இன்னும் கடல்போலப் பரவியிருக்கு. இதுலே எந்த மூலையிலே அவன் இருக்கிறானோ? தெரியலே!" பாபு சொன்னான்.

"பாபு, மூன்றாவது முறையா பையன் தப்பிச்சுட்டான். பையன் முன்னாடி போனானா? இல்லை, உன்னை ஏமாத்தி பின்னாடி வந்து சாலைக்குப் போயிட்டானா?"

"தெரியலே! வா! ரோடுக்குப் போய்ப் பார்ப்போம்!"

பாபுவும், ஜாக்கியும் வரப்பின் மீதே வேகமாக ஓடினார்கள். அவர்கள் சாலையை அடையும்போது இரண்டு லாரிகள் அவர்களைக் கடந்து ஓடின. சாலையில் வேறு யாரும் இல்லை. அவர்கள் ஓட்டி வந்த அம்பாசிடர்தான் அனாதையாக நின்று கொண்டிருந்தது.
"பாபு, பையனோட ஒரு நாய் இருந்ததே…?"

"ஆமாம். அதையும் காணோம். அதுவும் அவனோடு ஓடியிருக்கும்."

ஜாக்கி சிறிது நேரம் யோசித்தான். பிறகு, "பாபு, பையன் சென்னைக்குப் போகிறவன். எப்படியும் சென்னைக்குத்தான் போவான். நீயும் நானும் வயலுக்கு மத்தியில் இருக்கும்போது அவன் சாலைக்குப் போய் ஏதேனும் லாரியில் ஏறிப் போயிருக்கலாம். அதனாலே நான் காரிலே சென்னைக்குப் போறேன். நீ இந்த வயலுக்குப் பின்னாடியிருக்கிற கிராமத்துக்குப் போய்ப் பாரு. கிராமத்துலே புதுசா ஒருத்தன் வந்தா உடனே தெரிஞ்சுடும். அதுவும் அழகான-உயர்ந்த ஜாதி நாயோட ஒரு பையன் வந்திருந்தா அவனைக் கண்டுபிடிக்கிறது சிரமமில்லை. பையன் கிடைச்சா விடாதே! பிடிச்சுக்கோ. பையன் கிடைக்கலேன்னா கோயமுத்தூருக்குப் போய்ப் பாரு. பையன் கோவைக்குப் போக மாட்டான். எதுக்கும் அங்கே பாத்துட்டு, நீயும் சென்னைக்கு வந்துடு" என்றான்.

அப்போதே மெல்ல இருள் பரவ ஆரம்பித்து விட்டது. பாபு "சரி" என்று ஒப்புக் கொண்டு, தான் திரும்பிய வரப்பின் மீதே மீண்டும் நடந்து, மறுமுனையிலிருக்கும் சிற்றூரை நோக்கிச் சென்றான்.

ஜாக்கி அம்பாசிடரில் ஏறி அதைக் கிளப்பினான். அப்போதும் அவன் மனம், ‘சேரன் எங்கே?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தது.
ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் தொலைபேசி தேவை. அதுவும் ரகசியமாகப் பேசக் கூடிய தொலைபேசி வேண்டும். அதனால் வேலூர் வழியாகச் சென்னைக்குச் செல்ல விரும்பினான். வேலூர் ஜாக்கியின் சொந்தவூர். அவன் குடும்பமும் அங்கேதான் இருக்கிறது. வீட்டில் தொலைபேசியும் இருக்கிறது. அங்கே போனால் குடும்பத்தாரையும் பார்க்கலாம். தொலைபேசியில் பேசலாம். சில மணி நேரம் நிம்மதியாகத் தூங்கலாம். மறுநாள் காலையில் மீண்டும் பயணத்தைத் தொடங்கிச் சென்னைக்குச் செல்லலாம்.

ஜாக்கி இந்தத் தீர்மானத்தோடு காரை ஓட்டினான். சுமார் ஐந்து மணி நேரத்திற்கு பிறகு, இரவு பத்தரை மணிக்கு ஜாக்கியின் கார் வேலூருக்குள் நுழைந்தது. சைதாப்பேட்டைப் பகுதியில் கோட்டைப் பிள்ளையார் கோயில் தெருவில் அவன் வீடு இருக்கிறது. ஆனால், அது கார் நுழைய முடியாத குறுகலான… வளைந்து நெளிந்து செல்லும் சந்து. அதனால் அதை ஒட்டிய சாலையில் காரை நிறுத்தி விட்டுத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

அப்போதும் அவன் மனம் ‘சேரன் எங்கே?’என்று கேட்டுக்கொண்டே இருந்தது.

ஜாக்கியைப் போலவே நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் அப்போது சேரன் எங்கே இருந்தான்?

–புலி வளரும்.

About The Author