நண்பனின் தவறு (4.1)
அந்தத் தெரு வழியே சென்று கொண்டிருந்த மயில்சாமி, சேரனின் வீட்டுக்கு முன்னே நின்றிருந்த இருவரைப் பார்த்ததும், அருகே வந்தான்.
"சேரன் வீட்டுக்கு முன்னே நிக்கிறீங்களே, உள்ளே யாரையாச்சும் பார்க்கணுங்களா? கதவைத் தட்டித் திறக்கச் சொல்லட்டுங்களா? எனக்குச் சேரனின் அம்மாவைத் தெரியும். சேரன் என் நண்பன்" என்று கேட்டான், மயில்சாமி.
"வேண்டாம் தம்பி. நாங்களே, கொஞ்சம் முன்னாடி அம்மாவோடே பேசினோம்” என்று கூறிய ஜாக்கி, தொடர்ந்து, "சேரனை உடனே பார்க்கணும்னு வந்தோம். நாங்க வர்றதுக்குள்ளே அவன் போயிட்டான். அவனைப் பார்க்க முடியலையேன்னு வருத்தத்தோட நிற்கிறோம்" என்றான்.
"இப்போ நீங்க சேரனைப் பார்க்கணுங்களா?"
மயில்சாமி கேட்டதும், கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததைப் போல மகிழ்ந்து, "ஆமாம்" என்று ஜாக்கியும் பாபுவும் ஒரே குரலில் கூறினர்.
உண்மையில் சேரன் அப்போது எங்கே இருக்கிறான் என்பது மயில்சாமிக்குத் தெரியும்.
சேரன் பதினொரு மணியளவில் கோயமுத்தூர் வந்து விட்டான். நேரே வீட்டுக்குப் போனான். ‘இப்போது சென்னைக்குப் போக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’ என்று யோசித்தான். சென்னைக்கு ரயிலில் போகச் சுமார் நாற்பது ரூபாய் வேண்டும் என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. ‘அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? ஊட்டியிலேயே விஜயிடம் கேட்டிருக்கலாம். இங்கே நாற்பது ரூபாய் யாரிடம் கேட்டுப் பெறுவது?’
இந்தச் சிந்தனையிலிருந்தபோதுதான், தெருவையே அதிரச் செய்யும் பெரும் சப்தத்தோடு ஒரு லாரி சென்றதை, வீட்டுச் சன்னல் வழியே பார்த்தான், சேரன். லாரியின் டிரைவரையும் பார்த்தான். அப்போதுதான் மின்னல் போல ஒரு யோசனை உதித்தது!
லாரி டிரைவர், அவனுடைய வகுப்பு நண்பன் மயில்சாமியின் தந்தை கந்தப்பன். தன் தந்தை சென்னைக்கும், கோவைக்கும் இடையே செல்லும் லாரி ஓட்டுகிறவர் என்று மயில்சாமி கூறியது நினைவுக்கு வந்தது. அடுத்த தெருவில் இருக்கும் மயில்சாமியின் வீட்டுக்குக் கந்தப்பன் லாரியுடன் அடிக்கடி செல்வதையும் பார்த்திருந்தான். ‘மயில்சாமியின் தந்தையோடு லாரியில் சென்னைக்குச் சென்றுவிடலாம்’ என்று முடிவு செய்தான்.
உடனே மயில்சாமி வீட்டுக்குப் போன சேரன், அவனிடம் விஷயத்தைச் சொன்னான். மயில்சாமி தந்தையிடம் சிபாரிசு செய்ய, அவர் ஒப்புக் கொண்டார். "இரண்டு மணிக்குள்ளே செட்டி வீதியில் இருக்கிற எங்க சம்பத் டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு வந்துடு. உன்னை மெட்ராசுக்கு அழைச்சுட்டுப் போறேன்" என்று சொல்லி விட்டார்.
சேரன் மிகுந்த சந்தோஷத்தோடு புறப்பட்டான்.
தான் சேரனுக்குச் செய்த இந்த உதவியை யாரிடமாவது சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மயில்சாமி, ஜாக்கியும், பாபுவும் "ஆமாம்" என்று சொல்லிவிட்டு அவனை வெகு ஆர்வத்தோடு பார்த்ததும் பூரித்துப் போனான். அதனால் ‘நாம் ஒரு தவறு செய்கிறோம்’ என்பதை உணராமல், தான் சேரன் சென்னைக்குச் செல்ல உதவியதை விளக்கி, முடிவில் "செட்டி வீதியில், சம்பத் டிரான்ஸ்போர்ட் கம்பெனின்னு ஒண்ணு இருக்கு. அங்கே எங்கப்பா கந்தப்பன் ஓட்டுற லாரி இருக்கும். அதிலே சேரன் இருப்பான். சீக்கிரமாப் போனால் பார்க்கலாம். இல்லே, சேரன் லாரியிலே சென்னைக்குப் போயிடுவான்" என்று சொன்னான்.
மயில்சாமி சொல்லி முடித்ததும் இருவரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, கொஞ்ச தூரத்தில் நிறுத்தியிருந்த தமது அம்பாசிடரை நோக்கி ஓடினார்கள். இருவரும் லாரிக் கம்பெனியைத் தேடிக் கண்டுபிடித்தபோது, "கந்தப்பன் லாரி புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாயிடுச்சு" என்ற செய்தி கிடைத்தது.
மீண்டும் ஏமாற்றம்!
என்றாலும், செய்தியைக் கூறிய பாரம் தூக்கும் தொழிலாளியிடம் ஐந்து ரூபாயை நீட்டி, அந்த லாரியில் ஒரு பையனும், ஒரு அழகான நாயும் சென்றதையும், லாரி மேட்டூரில் கொஞ்சம் சாமானை இறக்கி விட்டுச் சென்னை செல்லும் என்பதையும் தெரிந்து கொண்டனர்.
அதன்பின், அம்பாசிடர் கார், ரேஸில் கலந்துகொண்ட வண்டியாகப் பறந்தது.
கந்தப்பனின் லாரி, பவானியைக் கடந்து ஒரே சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. கந்தப்பனுக்குப் பக்கத்தில் கிளீனர் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில், சேரன் உட்கார்ந்திருந்தான். அவன் மடியில் டாலர் உட்கார்ந்திருந்தது.
லாரியில் அவனை அழைத்துச் செல்ல, கந்தப்பன் ஒப்புக் கொண்டதும், அம்மாவிடம் ஊட்டிக்கே திரும்பவும் போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அப்போதுதான், டாலரையும் உடன் அழைத்துக் கொண்டு போகும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் விஜய் வீட்டுக்குப் போனான். டாலரைத் தான் அழைத்துச் செல்வதாக விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டான். ஆனால் வாட்ச்மேனிடம் மாலையில் டாலரைத் திரும்பவும் அழைத்து வருவதாகக் கூறிவிட்டு, டாலருடன் லாரிக் கம்பெனிக்கு வந்துவிட்டான். சரியாக இரண்டு மணிக்கே லாரி புறப்பட்டுவிட்டது.
வழியில் வெயில் உறைக்கத்தான் செய்தது. பவானியைக் கடக்கும்போது வெம்மை குறைந்தது; ஓரளவு இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது.
ஒரு காசு செலவில்லாமல் சென்னைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தான், சேரன்.
லாரி, காவேரி மின் நகரைக் கடந்தபோது, சேரன் இடப்புறத்தில் பார்த்துக் கொண்டே வந்தான். சாலையின் இருபுறமும் கரும்பு செழித்து வளர்ந்து, கண்ணுக்கு அழகாகக் காட்சியளித்தது. ஒருமுறை அந்தக் காட்சியோடே பார்வையைச் செலுத்திக் கழுத்தைத் திருப்பிப் பின்னே பார்த்தான்.
அது சாலை வளைந்து செல்லும் இடம். அதனால் லாரிக்குச் சிறிது தூரத்தில் ஒரு வெள்ளை அம்பாசிடர் வருவதும் அவன் பார்வையில் பட்டது.
காவேரி மின் நகரின் மின்சாரம் முழுவதும் அவன் உடம்பில் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி அடைந்தான், சேரன். ‘ஊட்டியில் விரட்டியவர்கள் வருகிறார்களா? சே… சே… அவர்களாக இருக்க முடியாது! அவர்களுக்கு நான் கோவை வந்ததோ, கோவையிலிருந்து லாரியில் புறப்பட்டதோ தெரியாதே!’ என்று நினைத்து, கழுத்தை வெளியே நீட்டி நன்றாகப் பார்த்தான்.
அதே கார்! அதே குறுந்தாடி டிரைவர்! பக்கத்தில்…
அவன் பார்ப்பதற்கு முன் கார் லாரியை நெருங்கி, அதை ஓவர் டேக் செய்து கடக்கத் தொடங்கி விட்டது. சேரன் பார்வையை வலப்பக்கம் திருப்புவதற்குள் கார், லாரியைக் கடந்து வேகமாகச் சென்றது. கொஞ்ச தூரம் சென்றதும் நடுச்சாலையில் கார் கிறீச்சிட்டு நிற்க, அதிலிருந்து ஜாக்கியும், பாபுவும் இறங்கி முன்னே வந்து சாலையில் குறுக்கே நின்றனர்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத கந்தப்பன் பிரேக்கை அழுத்தினான்.
லாரி, தார் படிந்த சாலையை உழுது சென்று சட்டென்று நின்றது!
சேரனின் இதயமும் சட்டென்று ஒரு விநாடி நின்று விட்டது!
–புலி வளரும்
“