காலைப் பிடித்த கை
தடதடவென்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டிய ஒலி, இடிமுழக்கம் போல எங்கும் பரவி எதிரொலித்தது. சம்பிரதாயத்துக்காகக் கைதட்டுவதாக இருந்தால் அது சட்டென்று நின்றிருக்கும். மாணவர்கள் பேச்சாளரின் சொற்பொழிவைச் சுவைத்து ரசித்தனர்; அந்த ஈடுபாட்டால் பிறந்த கைதட்டொலி அது. அதனால் பேச்சாளர் ஒலிபெருக்கியின் முன்னிருந்து விலகி, மேடையில் தனக்குரிய இடத்தில் போய் அமர்ந்த பிறகும் கைதட்டல் நீடித்தது. இலக்கிய மன்றத்துச் செயலாளன் நன்றி கூற வந்த பிறகுதான் கைதட்டல் நின்றது.
செயலாளன் நன்றி கூறியவுடன், நாட்டு வாழ்த்துப் பாடப்பட்டது. பின்பு கூட்டம் கலைந்தது. மாணவர்கள் கலகலப்போடு கலைந்தார்கள். ஏறத்தாழ அத்தனை பேரும் அன்று நடந்த சொற்பொழிவைப் பற்றிப் பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.
சேரன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்தான். அவனுக்குப் பக்கத்தில் இன்னும் உட்கார்ந்தபடியிருந்த விஜய்குமாரைப் பார்த்தான். அவன் தோளில் கை வைத்து உலுக்கி, "என்ன விஜய்! புறப்படலையா? வீட்டுக்குப் போக வேண்டாமா?" என்று கேட்டான். அதன் பிறகுதான் விஜய் தன் பையுடன் எழுந்தான்.
சேரனும், விஜயும் பள்ளிக்கூடத்து மாடியிலிருந்து இறங்கினர்; கட்டடத்தை விட்டு வெளியே வந்தனர்.
சாலையின் ஓரத்தில் நீலநிற பியட் கார் நின்றிருந்தது. அதன் டிரைவர், விஜயைப் பார்த்ததும், எழுந்து பின் சீட்டின் கதவைத் திறந்தான். விஜய் ஏறினான். சேரனும் ஏறினான். உடனே கார் புறப்பட்டது.
பள்ளிக்கூடம் இருந்த அழகேசன் சாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில், பாரதி பூங்கா அருகே விஜயின் பெரிய பங்களா இருந்தது. நடந்தே போகலாம். நடந்துபோக வேண்டும் என்று விஜயும் விரும்பினான். ஆனால் விஜயின் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை. "கோடீஸ்வரரின் குமாரன் நடந்து வர்றதா? கூடாது. காரிலேதான் வரணும். நடக்கணும்னு ஆசையிருந்தா காலையிலே வாக்கிங் போ" என்று கூறி விட்டாள். அதனால் விஜய் காரிலே வந்தான்; காரிலே சென்றான்.
கோடீஸ்வரரின் மகனோடு நட்புக் கொள்ள எத்தனையோ பேர் முன்வந்தார்கள். ஆனால் விஜய் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, சேரனைத் தானே தேர்ந்தெடுத்து நண்பனாக்கிக் கொண்டான். மாலையில் சேரனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டிலே கொஞ்ச நேரம் அவனுடன் டேபிள் டென்னிஸ் ஆடுவான். பிறகு ஆறு மணி அளவில்தான் சேரனை வீட்டுக்கு அனுப்புவான்; சேரனின் வீடு, பள்ளிக்கூடத்துக்கும் விஜய் பங்களாவுக்கும் இடையே, நெசவாளர் காலனியில் இருந்தது.
அன்றும் வழக்கம்போல் விஜய், சேரனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.
"விளையாட்டைத் தொடங்கலாமா?" என்று கேட்டான் சேரன்.
"இன்றைக்கு விளையாட்டு வேண்டாம்."
சேரன் விஜயின் முகத்தை உற்றுப் பார்த்தான். "என்ன விஜய், பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்டது முதல் ஏதோ நினைவாக இருக்கே? என்ன விஷயம்?" என்று கேட்டான்.
"சேரா! சென்னையிலிருந்து வந்த அறிஞர் பேசிய பேச்சு என் மனத்தில் அப்படியே நிறைஞ்சி நிற்குது. நீ அந்த அருமையான பேச்சை ஒரு காதிலே வாங்கி மறு காதிலே விட்டுட்டையா?"விஜய் கேட்டான்.
சென்னை அறிஞர் பேச்சு வெறும் காற்றிலே கலக்கும் பேச்சல்ல. கூட்டத்தில் அக்கறையற்றவர், சொற்பொழிவுக் கேட்பதில் விருப்பமற்றவர் முதலிய அனைவரும் ஐந்து நிமிட நேரத்தில், அவர் பேச்சில் ஒன்றி விட்டார்கள். ‘இதுதான் கேட்டார்ப் பிணிக்கும் பேச்சு’ என்று சொல்லத்தக்கது. செவியிலே நுழைந்து நெஞ்சிலே இறங்கி நிலைக்கும் பேச்சு அது. சேரன் நெஞ்சிலும் அந்தப் பேச்சு நின்றது. இப்போதும் கூட அவர் கூறிய சொற்கள் காதிலே ஒலித்தன. அதனால், "இல்லை விஜய், அவர் பேச்சு கல் மேல் எழுத்துப்போல என் மனத்திலே பதிந்திருக்கு" என்று கூறினான்.
"சேரா! நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார்; திலகர்-பாரதியார் நிலைக்குச் சமமாக்கி விட்டார். ஏட்டைச் சுமக்கும் சிறுவர்களே, நீங்கள்தான் நாட்டைக் காக்க வேண்டும் என்று கூறினார். கூடவே கென்னடியின் பொன்மொழியையும் சொன்னாரே. நினைவிருக்கிறதா?"
சேரன் நினைவிலும் அது நிலைத்திருந்தது.
" நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்’ என்று கென்னடி சொன்னார்".
அதைக் கேட்டதும் விஜயின் முகம் மலர்ந்தது.
"ஆமாம் சேரா! "கென்னடி இப்படிப் பொதுவாகக் கூறினார். அது பெரியவர்களுக்கு உரியது என்று ஒதுக்காதீர்கள். அது உங்களையும் நோக்கிச் சொன்னதுதான். ‘இளங்கன்றுதான் பயம் அறியாது. பயம் அறியாதவர்கள்தான் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும்’ என்று கூறினார். சேரா! நம் நாட்டு விடுதலைக்காக நேதாஜி சிங்கப்பூரில் படை அமைத்துப் போரிட்டபோது பாலர்கள் செய்த சேவையை எப்படி விளக்கினார்!"
சென்னை அறிஞர் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது அரங்கத்திலும் அவையிலும் ஒரே அமைதி. சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வெள்ளையருடன் போரிட்டார். ஆண்களும், பெண்களும் நாட்டுப் பணியில் ஈடுபட்டபோது சிறுவர்கள் சும்மாயிருப்பார்களா? அவர்கள் வெள்ளையரின் டாங்குப்படையை எதிர்த்துப் போரிட்டனர். பிணங்கள் நிறைந்த தெருவில் ஆங்கிலேயரின் டாங்கு பெரிய அரக்கன் போல வரும். பாலர் படையைச் சேர்ந்த சிறுவன் வெடிகுண்டோடு, பிணங்களிடையே பிணமாகப் படுத்திருப்பான். டாங்கு அச்சிறுவன்மீது ஏறி அவனை நசுக்கும்போது, குண்டு வெடிக்கும். டாங்கும் சிதைந்து விழும். தற்கொலை படைபோலப் பாலகர்கள் தம் உயிரை இழந்து செய்த தியாகத்தைச் சென்னை அறிஞர் சொன்னபோது, கண்கள் கலங்கின; உடல் சிலிர்த்தது. அறிஞர் ஒரு கணம் பேசாது நின்றாரே! சேரன் நினைவில் இவையெல்லாம் திரைப்படம்போல ஓடின.
"ஆமாம் விஜய். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்கு அந்தச் சிங்கப்பூர் இந்தியச் சிறுவர்கள் செய்த தியாகமும் ஒரு காரணம்" என்றான் சேரன்.
"உலகின் பல நாடுகளில் சின்னஞ் சிறுவர்கள் நாட்டுப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதைச் சொன்னார். முன்பு நடந்த வியட்நாம் போரில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், தமக்காகத் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கிகளை ஏந்திப் போரிட்டதைச் சொன்னாரே! சேரா! நம் நாடு நமக்காக என்ன செய்தது என்று கேட்கவே கூடாது. நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்."
விஜய் சொல்லி முடிக்கும்போது, சமையற்காரன் இரண்டு பிளேட்டில் கேக்கும், வறுத்த முந்திரிப் பருப்பும் கொண்டு வந்து இருவர் முன்பும் வைத்தான். கூடவே சூடான காப்பியும் வைத்தான்.
சேரன் சாப்பிடத் தொடங்கினான். விஜய் தன் பேச்சையே தொடர்ந்தான்.
"நான் நாட்டுக்குச் சேவை செய்யப் போகிறேன். என்னால் முடிந்ததைச் செய்யப் போகிறேன். இன்றைய பேச்சு என்னை மாற்றிவிட்டது."
விஜய் சொன்னான். சேரன் ஏதும் பேசவில்லை. விஜய் விடவில்லை.
“என்ன சேரா! உன் மனத்தில் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா?”
சேரன் விஜயின் முகத்தை நேராகப் பார்த்துப் பேசினான்.
"விஜய்! என் மனத்தில் நினைப்பதை அப்படியே சொல்கிறேன். அதைத் தப்பாக நினைக்காதே. நீ பெரிய பணக்காரரின் மகன். நீ நினைத்தால் நாட்டுக்கும் சேவை செய்யலாம்; உலகத்துக்கும் சேவை செய்யலாம். என்னால் அது முடியுமா? என் வீட்டுக்கே நான் போதுமான சேவை செய்யாமல் சுற்றுவதாக அம்மா திட்டுகிறாள். நான் நாட்டுக்கு எப்படி சேவை செய்ய முடியும்?"
"நாட்டுச் சேவைக்குப் பணம் தேவையில்லை…"
விஜய் முடிக்கும் முன் சேரன் குறுக்கிட்டான்:
"பலம்கூடப் போதும். என்னைப் பார்? நான் பலசாலியுமல்ல. சுமாரான உடம்பு. சின்னக் காய்ச்சல் வந்தால்கூட மூன்று நாள் படுத்து விடுவேன்."
"உடல் பலம்கூட வேண்டாம். மனபலம் போதும்!"
"விஜய், உன்னிடம் உண்மையைச் சொல்வதில் வெட்கப்படவில்லை. எனக்கு மனபலமும் இல்லை. இருட்டில் தனியே போகப் பயப்படுவேன். வீட்டில் யாரும் இல்லாமல், தனியே பகலில் இருக்கவும் பயந்தான். தெருவில் யாராவது சண்டை போட்டால், என் மனம் நடுங்கும்! நான் எங்கே! தன் உயிர் போனாலும் ஒரு டாங்கு உடைய வேண்டும் என்று வெடிகுண்டோடு வீதியில் படுத்துத் தியாகம் செய்த வீரர்கள் எங்கே! என்னால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது! நீ நாட்டுக்குச் சேவை செய்! நான் உன் சேவையைப் புகழ்கிறேன்."
"நீ ஒரு கோழை."
விஜய் வெறுப்போடு சொன்னான். சேரன் மறுக்கவில்லை. என்றாலும் அவன் மனம் புண்பட்டது.
"நேரமாகுது. நான் கிளம்பறேன்" என்று சேரன் புறப்பட்டு விட்டான்.
விஜய் அதன் பின்பும் நாட்டுக்குச் சேவை செய்த சிறுவர்களைப் பற்றியே நினைத்தான். அன்றிரவு அவன் இன்னது என்று தெரியாத இடத்திலே துப்பாக்கி ஏந்திப் பகைவர்களைச் சுட்டு வீழ்த்துவதாகக் கனவு கண்டான்.
நான்கைந்து நாட்கள் விஜய், நாட்டுச் சேவையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். பேச்சு மெல்லக் குறைந்தது. ஒரு வாரத்துக்குப் பின்பு அவன் சென்னை அறிஞரை – கென்னடியின் பொன் மொழியை – நேதாஜியின் பாலர் படையை முற்றிலும் மறந்து விட்டான். ‘நீ ஒரு கோழை! நீ பாயும் புலியல்ல; பதுங்கும் பூனை! உனக்குப் போய் வீரமன்னன் சேரன் பெயரை வைத்தார்களே!’ என்றெல்லாம் சேரன்மீது விஜய் தொடுத்த குற்றச்சாட்டுக்களும் குறைந்து, மறைந்தன.
இது பிரசங்க வைராக்கியம் போலும்! பேரறிஞர்கள் நாவன்மையோடு பேசுவதைக் கேட்டு, அந்தக் கணத்தில், அந்த இடத்தில் அவர்கள் கூறியபடி நடக்க எத்தனையோ பேர் தீர்மானிப்பார்கள். கூட்டம் கலையும்போது கொள்கையும் கலையும்! அப்புறம் அதைப் பற்றிச் சிந்திக்கவும் மாட்டார்கள். பெரியவர்கள் நிலையே இப்படி! விஜய் சிறுவன்தானே! அவனும் உணர்ச்சிவசப்பட்டு மேற்கொண்ட கொள்கையை ஒரு வாரத்தில் மறந்து விட்டான்; ஏன், துறந்துவிட்டான் என்றும் சொல்லலாம்.
அதன் பிறகுதான் சேரன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். தினசரி அவனுடைய சொல்லம்புகளால் தாக்கப்பட்டுத் தவித்துப் போனவன் அவன்தானே! விஜய் பழைய விஜயாகி, டேபிள் டென்னிஸ், படிப்பு, வீடியோ என்று திரும்பிய பிறகு சேரன் முன்போலவே அவனுடன் கலகலப்போடு பேசி, விளையாடிக் களிப்புக் கொண்டான்.
ஒரு மாதம் ஓடியது.
அன்று திங்கட்கிழமை. தேதி, நவம்பர் ஆறு. மாலை நேரம்.
சேரன் விஜய் வீட்டுக்குப் போனான். விஜய் அம்மாவுடன் வெளியே போயிருப்பதாகக் காவல்காரன் கூறினான். ‘திரும்பிப் போகலாமா? விஜய் வரும் வரை காத்திருக்கலாமா?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘லொள், லொள்’ என்று குரைத்துக் கொண்டு ஓடிவந்த ஒரு நாய் அவன் மீது தாவியது.
(அத்தியாயத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்)
“