இத்தோடு இரண்டாவது தடவை டாய்லெட்டுக்குப் போயிட்டு வந்து விட்டான் கிஷோர். மணியைப் பார்த்தான். சரியாக மாலை ஆறு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் தானிருந்தன. ஒருவாறு கஷ்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் மணி பார்க்கக் கற்றுக் கொண்டான். ஸ்கூலில் மணிபார்க்கச் சொல்லிக் கொடுத்து பார்க்கத் தெரிந்தும், இரண்டு மூன்று நாட்களுக்கு அம்மாவிடம் சொல்லவேயில்லை.
கிளாஸ் டீச்சர் அவன் என்னவோ இரண்டு தடவைகள் சொல்லிக் கொடுத்ததும் பிடித்துக் கொண்டுவிட்டான் என்று நன்றாகப் புகழ்ந்தாளெனினும், அவனுக்குத் தனது நண்பர்கள், பீட்டர், ஜேம்ஸ் இருவரிடம் பலமுறை சரியாக மணிபார்க்கத் தெரியும் என்று நிச்சயப்படுத்தப்படும் முன்னர் அம்மாவுக்குச் சொல்ல விருப்பமில்லை.
நடப்பது தெரியும்தானே. அம்மா ரொம்ப மகிழ்ச்சியாக அப்பாவிடம் ஓடிப்போய்ச் சொல்லுவாள். அப்பாவும் "டேய் கிஷோர் இங்கே வா" என்று கத்தியதும், தான் தயங்கித் தயங்கிப் போய் அவர் முகத்தைப் பார்க்க அஞ்சியவாறு நிலத்தைப் பார்த்தவாறு நிற்பான். "எங்கே மணியைப் பார்த்துச் சொல்லுடா" என்று கர்ஜிப்பார். தான் ஒருசமயம் பிழையாகச் சொல்லி விட்டாலோ. "முட்டாள் பயலே! சரியா மணி பார்க்கத் தெரியல்ல. அதுக்குள்ள இவள் வேற உன்னோட புகழ் பாடிக்கிட்டு" அர்ச்சனை மகா கும்பாபிஷேகம் போல நடக்கும். எண்ணிப் பார்க்கவே அவன் உடம்பு நடுங்கியது.
அதேதான் நடந்தது. அம்மாவிடம் சொல்ல அப்பா கர்ஜனையுடன் பரிசோதிக்க, ஏதோ கடவுள் புண்ணியத்தில் சரியாகச் சொல்லி விட்டான். அதுக்கும் சும்மா விட்டாரா என்ன? "பக்கத்து வீட்டில இருக்கிற ஸ்டுவேர்ட்டைப் பார். அவனுக்கு நாலு வயதுதான் ஆகிறது. அவனுக்குத் தெரியிற அரைவாசி விஷயங்கள், ஆறு வயதுக் கழுதை உனக்குத் தெரியாது" மீண்டும் கர்ஜனை. பரிதாபமாக அம்மாவைப் பார்த்தான். அவள் கண்களில் கனிவோடு ஆறுதலாகப் பார்த்தாள். அவள் என்ன செய்வாள்? வாயைத் திறந்தாள் அவளுக்கு வாய் மூடாதபடி அர்ச்சனைதான்.
மறுபடியும் நினைவலைகளில் இருந்து விடுபட்ட கிஷோரின் கண்களில் ஒருவித மருட்சியோடு, நெஞ்சத்தை திகில் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது. சரியாக மாலை 6 மணி 15 நிமிடத்திற்கு அப்பாவின் கார் வந்து உள்ளே நிற்கும். அதற்கு முன்னால் தான் சிட்டிங் ரூமில் இருந்து விளையாடிய இடத்தைப் போய்ப் பார்த்துக் கொண்டான். அப்பாவின் கர்ஜனைக்குக் காரணமான பொருள் ஏதாவதை மறந்து போட்டிருப்பானோ என்று.
அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத்திருக்கும் போது "டாட்" என்று கொண்டே பீட்டர் அவன் அப்பாவை நோக்கி ஓடுவதும், பீட்டரின் தந்தை அவனை அப்படியே அணைத்துக் கொள்வதும் மனக்கண்ணில் தெரிந்தது. அப்படிக்கூட அப்பா இருப்பார்களா? அந்தச் சின்ன மனதில் ஏக்கம் வேரிட்டது.
‘சீ! தான் அப்பக்கத்து வீட்டு நாலு வயது ஸ்டூவேர்ட்டாக மாறக்கூடாதா? அவனைத்தானே அப்பா புத்திசாலி என்று எண்ணுகிறார்.’ ஆறு வயதுச் சிறுவனின் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகை.
அம்மாவுக்கோ, அப்பா வந்தவுடன் சுடச்சுட சாப்பாடு தயாராக இருக்க வேண்டும் என்ற கவலை. இல்லா விட்டால் சிங்கம் அவளையல்லவா கடித்துக் குதறி விட்டுவிடும். மனதுக்குள் தான் வழமையாகப் போகும் அந்த பிள்ளையார் கோவிலில் இருக்கும் பிள்ளையாரை எண்ணி, ‘பிள்ளையாரப்பா, அப்பா வருவதற்கிடையில் அம்மா சமையலை முடித்துவிட வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான். பிள்ளையாரைக் கேட்டால் எல்லாம் தருவார் என்று அம்மாதானே சொன்னாள். அந்தப் பிஞ்சு உள்ளம் தன் அன்னையின் மீது விழும் வசைமாறியை தெய்வத்தின் துணைகொண்டு தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
திரும்பவும் மணியைப் பார்த்துக் கொண்டான் கிஷோர். இன்னும் ஐந்து நிமிடங்கள் தானிருக்கின்றன. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
"கிஷோர், அப்பா வரப் போறார். நல்ல பையனாகப் போய் பாடப் புத்தகத்தை எடுத்து படி. இல்லாட்டி அப்பாவுக்குக் கோபம் வந்து விடும்" என்றாள் அம்மா.
"சரி அம்மா" என்று கூறியபடி தனது ரூமிற்குள் சென்று புத்தகத்தை எடுத்துக் கொண்டு கதிரையில் அமர்ந்தான்.
பீட்டரும், ஜேம்ஸும் பேசும்போது, ஏதோ கதை கேட்பது போல அவர்களது வாயைப் பார்த்துக் கொண்டு இருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. "என்னுடைய டாடிக்கு எனக்கு கணக்குச் சொல்லிக் கொடுப்பது தான் பிடிக்கும். மம்மி தான் இங்கிலீஷ் சொல்லிக் கொடுப்பா" என்று பீட்டர் சொல்ல, "எனக்கு எல்லாமே மம்மி தான் சொல்லிக் கொடுப்பா. டாடி எனக்கு டின்னர் ரெடி பண்ணி வைப்பார்" என்று பதிலுக்கு ஜேம்ஸ் சொல்ல, அந்தச் சின்ன உள்ளத்தில் இப்படிக்கூட அப்பா, அம்மா, சேர்ந்து அன்பாக இருப்பாங்களா? என்ற அங்கலாய்ப்பு ஏற்படும்.
டேபிளில் இருந்த கடியாரத்தைப் பார்த்தான். மணி மாலை 6.25க் காட்டியது. ‘அப்பா இனி எந்தச் சமயத்திலும் வந்து விடலாம். அவருக்கு நான் டைம் டேபிள்ஸ் படிப்பது தான் பிடிக்கும். இன்றைக்கு 10வது டேபிளை படித்து முடித்து எப்படியாவது அப்பாவுக்குச் சொல்லிக் காட்டிவிட வேண்டும்’ என்றெண்ணி, விறுவிறுப்பாக டைம் டேபிள்ஸ் சொல்லத் தொடங்கினான்.