அண்மையில், மூன்று உறுப்பினர் கொண்ட ஜப்பானியர் குழு ஒன்று பீகார் மாநில சூப்பர் 30-லிருந்து மூன்று மாணவர்களை டோக்கியோவில் நான்காண்டு இளநிலை மேற்கல்விக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. குழுவின் உறுப்பினர்கள் ஒரு மணி நேர நேர்காணலுக்குப் பின்பே இந்த மாணவர்களைத் தங்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்குத் தேர்வு செய்திருக்கின்றனர்.
இது மட்டுமா?
பிரிட்டனின் பல்கலைக்கழகம் ஒன்று, சூப்பர் 30-இன் சாதனைகளைத் தன் ஆய்விற்காக எடுத்துக்கொண்டிருக்கிறது. சூப்பர் 30 மூலம் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வசதியற்ற மாணவர்களை நேர்முகம் கண்டு, அதற்குக் காரணமாக இருக்கும் ஆனந்தகுமார் என்ற ஒரு சாதாரணமான மனிதரின் அசாதாரணச் சாதனையை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு, அதை அனைத்து உலகிற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
ஆமாம்… இந்த சூப்பர் 30 என்பது என்ன?…
பல்கலைக்கழகமா?…
புகழ் வாய்ந்த கல்லூரியா?…
இல்லை!
ஒரு தனிமனிதனின் கனவில், முயற்சியில் உருவான உன்னதமான ஒரு திட்டம்! ஒரு தனி மனிதப் படையின் புரட்சி!
சூப்பர் 30 என்பது வறுமை நிலைமையில் உள்ள, ஆனால் அறிவுத்திறமை கொண்ட மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, எதிர்கால வாழ்விற்காக, ஆனந்தகுமார் என்ற ஒரு தனி மனிதர் உருவாக்கிய உன்னத, தனித்தன்மை வாய்ந்த திட்டம். அவர் தன் தனிப்பட்ட முயற்சியால் ஒரு மௌனமான சாதனையை பீகாரில் ஏற்படுத்தியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு அவர் தொடங்கிய இந்த சூப்பர் 30 திட்டத்தின் கீழ்ப் பல நூறு மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி மட்டுமில்லை, உணவும் தங்க வசதியும் செய்து கொடுக்கிறார் ஆனந்தகுமார்.
வசதி பெற்ற பல மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்காகத் தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சங்கள் செலவழித்துப் படிக்கையில், இங்கே சூப்பர் 30 தனது லட்சியத்தையே முதலாகக் கொண்டு, வசதியற்ற மாணவர்களைத் தொழில்நுட்பக் கல்லூரித் தேர்வுக்குத் தயார் செய்து பெரும் வெற்றியைக் காண்கிறது. அதிசயம்தானே!
வறுமை நிலை மாணவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் ஒரு வெறியுடன் ராமானுஜர் கணிதப்பள்ளி என்று ஒன்றைத் தொடங்கித் தொடர்ந்து இயக்கி வருகிறார் ஆனந்தகுமார். இதுதான் சூப்பர் 30 என அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், கல்வியைத் தொடர வசதியற்ற 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து -இப்போது 60ஆக உயர்ந்திருக்கிறது- அவர்கள் கனவிலும் நினைக்க முடியாத, பலரின் கனவாக விளங்குகிற ஐ.ஐ.டி நுழைவுத்தேர்விற்குப் பயிற்சி அளிக்கும் கோயில் இது! ஒரு சிறு வாடகை வீட்டிலிருந்து இயங்கிப் பல மாணவர்களைக் கல்வி மாளிகையில் நுழைய வைக்கும் இயக்கம்! இதனால் ஏறத்தாழ, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 300 மாணவர்களில் 283 மாணவர்கள் ஐ.ஐ.டி நுழைவுக் கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
20 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தகுமார் யாரென்றே பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இன்று, அவர் அகில உலகம் அறிந்த அமைதியான சமூக ஆர்வலர், ஆசிரியர், சீர்திருத்தவாதி! அவருடைய தந்தை தபால் இலாகாவில் ஒரு சாதாரண ஊழியராக இருந்தார். தந்தை இறந்ததும் தாயார் செய்த அப்பளங்களை வீடு வீடாகச் சென்று விற்று வந்தார். அதன் மூலம் கிடைத்த சொற்ப வருவாயில் மட்டுமே அவர்கள் வாழ்க்கை நடத்த முடிந்தது. பாட்னாக் கல்லூரி ஒன்றில் கணிதம் பயின்றார்.
இந்தக் கடினமான வாழ்க்கையே வறுமையினால் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அவருக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் தன் வறுமை நிலையினால் செல்ல முடியாது போன ஏக்கமே பலரின் கல்வி உயர்வுக்குப் பணியாற்ற அவருக்குள் உந்துதலாக உருவெடுத்தது. 2000ஆம் ஆண்டு, ஏழை மாணவன் ஒருவன், சிறு வணிகரின் மகன், "எனக்கு ஐ.ஐ.டி-யில் படிக்க ஆசை. ஆனால் வசதியில்லை" என்று ஏக்கத்துடன் கேட்டது, இந்தத் திட்டம் தொடங்க ஒரு வித்தாக அமைந்தது.
சொல்லிக்கொள்ளும்படி சொத்துக்கள் எதுவுமில்லாத விவசாயியின் மகன் ஷந்தன் குமார். ஒரு சிறு கடைக்குச் சொந்தமானவரின் மகன் அபிஷேக் குமார். புத்தகம் விற்றுப் பிழைக்கும் ஒருவரின் மகள் சிலாங்கி குப்தா. இன்னும் இவர்களைப் போன்ற பல மாணவர்களே ஆனந்தகுமாரின் சூப்பர் 30இல் தேர்வு பெற்றவர்கள். ரிக்ஷா இழுப்பவர்கள், வீட்டைத் தூய்மை செய்பவர்கள், வீட்டுக் காவலாளிகள் இவர்களின் வாரிசுகளே ஆனந்தகுமாரின் அயராத முயற்சியால் கடுமையான போட்டி நிரம்பிய ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அலோக் ரஞ்சன் என்ற ஏழை ஆசிரியர் ஒருவரின் மகன், "இது வரை ஐ.ஐ.டி தேர்வுக்காக எந்தப் புத்தகமுமே நான் செலவழித்து வாங்கியதில்லை" என்று கூறுகிறான்.
ஆனந்தகுமாரின் இந்த முயற்சி மாபியா கும்பல்களால் பல எதிர்ப்புக்களைச் சந்தித்திருக்கிறது. ஒரு முறை அவர் பயங்கரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறார். ஆனால், இந்த எதிர்ப்புக்களைக் கண்டு அவர் ஒயுதல் செய்யவில்லை; தலை சாயுதல் செய்யவில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே என மேலும் உற்சாகத்துடன் தன் பணிகளைத் தொடருகிறார்.
இன்று ஆனந்தகுமார் ஒரு தலைப்புச் செய்தி! அனைத்து உலகமும் திரும்பிப் பார்க்கும் அதிசய மனிதர்!
ஆனந்தகுமாரின் சூப்பர் 30க்குப் பல நாடுகளிலிருந்தும் புகழாரங்கள் வந்து குவிகின்றன. அமெரிக்கக் குடியரசு அதிபர் ஒபாமா அவர்கள் இந்திய விஜயத்தின்போது (2011) "இது மிக ஆச்சரியகரமான சாதனை!" என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் இதழ், "இந்தியாவின் மிகச் சிறந்த திட்டம்!" என்று பாராட்டியிருக்கிறது. டிஸ்கவரி சேனல், சூப்பர் 30இன் வெற்றிக் கதையைப் படமாக வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து, டிஸ்கவரி சேனலின் சிறந்த விருதையும் அந்தப் படம் வென்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த விழாவில், "சூப்பர் 30 மிகவும் அதிசயிக்கத்தக்க திட்டம். இது உலகின் பல பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும்" என்று மிட்சல் ஒபாமா கூறினார்.
அகில உலகையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆனந்தகுமார் மற்றவரின் வாழ்க்கையில் கல்வி ஒளியேற்றுவதையே தன் ஆனந்தமாக உணருகிறார். அவருடைய அமைதியான இந்தப் பணி பல மாணவர்களின் வாழ்த்தையும் நன்றியையும் தொடர்ந்து பெறும். இதை விட ஆனந்தகுமாருக்கு வேறென்ன வேண்டும்?