காலைவேலைகளை முடித்து வேலைக்காரியை அனுப்பிவிட்டு மனோஜைக் குளிக்கவைத்துக்கொண்டிருக்கும்போது சுந்தர் தொலைபேசியில் அழைத்தான்.
"ரம்யா… வீட்டை மராமத்து பண்ணனும்னு அப்பா பணம் கேட்டிருந்தாரே…. இன்னைக்கு அனுப்பறேன்னு சொல்லியிருந்தேன், மறந்திட்டேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்."
"என்ன பண்ணனும்?"
"நேரா பேங்குக்கு போய் இருபதாயிரத்துக்கு ஒரு டிடி எடுத்து அப்பாவுக்கு கொரியர் பண்ணிடேன்."
"என்னது, பேங்குக்கா? அங்கெல்லாம் என்னால முடியாது. நீங்க வந்து அனுப்புங்க, இல்லைனா நாளைக்கு அனுப்புங்க…"
"விளையாடாத ரம்யா… நான் பயங்கர பிஸி. இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படிதான் இருக்கும். பர்மிஷனும் போடமுடியாது. கொஞ்சம் புரிஞ்சுக்கோ…"
என்ன இவன்? தன்னை என்ன வேலைக்காரி என்று நினைத்துக்கொண்டானா? ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும் என்ற அக்கறையிருந்தால் இவனே செய்யவேண்டும். அதைவிட்டு என்னை வேலை வாங்குவானேன்?
"இங்க பாருங்க, எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல, உங்களுக்கு சேவை செய்யறதுக்காக எங்கவீட்டுல கல்யாணம் பண்ணிக்குடுக்கல…"
போனை வைத்துவிட்டாளே தவிர, மனம் என்னவோ தப்பு செய்ததுபோல் துடித்தது. அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன்? இவர் செய்யவேண்டிய வேலையை எல்லாம் என் தலையில் சுமத்திவிட்டு இவர் சொகுசாக இருப்பாராம். நான் கிடந்து அல்லல்படணுமாம்.
வந்ததும் வராததுமாய் எகிறினான்.
"ஏய், உனக்கென்ன மனசுக்குள்ள மகாராணின்னு நினைப்பா? ஒரு வேலையும் செய்யமாட்டேங்கிற? தின்னுறதும், தூங்குறதும்தான் வாழ்க்கையா?"
வீசிய வார்த்தைகள் சுருக்கென்று தைத்தன.
"வர வர என்னைக் கண்டாலே உங்களுக்கு ஆகலை. சட்டாம்பிள்ளையாட்டம் அதிகாரம் பண்றீங்க, கேக்கலைன்னா காட்டுக்கத்தல் கத்தறீங்க… பிடிக்கலைன்னா சொல்லிடுங்க… நானும் குழந்தையும் எங்கயாச்சும் தொலைஞ்சுபோயிடறோம்…"
"ஆமா…. வீட்டு வேலையைக் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோன்னு சொன்னா நான் கெட்டவனாயிடறேனா?"
"எனக்கு இஷ்டமில்லாததையும் பழக்கமில்லாததையும் செய் செய்னு வற்புறுத்துறது எனக்குப் பிடிக்கல."
"இங்க பார், நீ செஞ்சுதான் ஆகணும்.. எத்தன நாளைக்கு பச்சப்புள்ள மாதிரி எனக்கு ஒண்ணும் தெரியாது எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லி என்னை ஏமாத்திகிட்டே இருக்கப்போறே…?"
"ஓ! கட்டாயப்படுத்துறீங்களா? ஒரு கடைக்குக் கூட நான் போனதில்ல தெரியுமா? என்னை அங்க போ.. இங்க போ.. அந்த வேல செய்… இந்த வேல செய்யின்னு அதிகாரம் பண்ணுறீங்களா? புரிஞ்சுபோச்சு, உங்களுக்கு நான் அலுத்துப்போயிட்டேன், அதான்…. எதையாவது சொல்லி என்னை வீட்டை விட்டுத் தொரத்தப்பாக்கிறீங்க… நான் போறேன்… நான் ஒண்ணும் அநாதையில்ல, தெருவில நிக்க…"
"சரி, போ.."
சொல்லிவிட்டு மனோஜைத் தூக்கிக்கொண்டு படுக்கையறை நுழைந்துவிட…அவமானப்பட்டவளாய் ஹாலிலேயே படுத்துறங்கினாள்.
காலையில் எழுந்ததும் முதல்வேலையாக அவனிடம் ஊருக்குச் செல்ல டிக்கட் முன்பதிவு செய்யச் சொல்ல… மீண்டும் அவளை அழவைத்து அலுவலகம் கிளம்பிச்சென்றான்.
அவன் போனதும் ஊருக்குப் பேசினாள்.
"அப்பா வெளியில போயிருக்காரு… என்னம்மா… ஏன் அழுவுற? என்ன ரம்யா… சொல்லும்மா…"
அம்மா பதறினாள். இவள் அழுகையினூடே விவரம் சொன்னாள். எல்லாவற்றையும் அமைதியாய்க் கேட்டுமுடித்த அம்மா கலகலவென்று சிரித்தாள்.
"பைத்தியம்… இப்படி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ கோயில் கட்டிக் கும்புடணும்டி… உங்களுக்கு ஒண்ணும் தெரியாது… உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு வீட்டுப் பொம்பளைங்களை அடக்கிவைக்கிற உங்க அப்பா, சித்தப்பா மாதிரி ஆம்பளைகளுக்கு மத்தியில் உன்னையும் தன்னிச்சையா செயல்படத் தூண்டுற உன் புருஷனோட பெரிய மனசைப் பாராட்டணும்… நாங்க வாழுறது கிராமம். அதுவுமில்லாமல் கூட்டுக்குடும்பம். ஒருத்தரால் முடியலைன்னா… இன்னொருத்தர் உதவுவாங்க… உங்க நிலைமை அப்படி இல்ல… நீங்க ரெண்டுபேரும்தான் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும்… அதைப் புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்கோ… காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏத்த மாதிரி உன்னை மாத்திக்கோ… எங்களை மாதிரி நீயும் உலகமே தெரியாம வாழ்ந்து நாலு சுவத்துக்குள்ளயே உன் வாழ்க்கையை முடிச்சுக்காதே…. என்ன ரம்யா… நான் சொல்றது புரியுதா…?"
அம்மாவின் வார்த்தைகளில் மறைந்திருந்த ஏக்கத்தை அவளால் கண்டுணர முடிந்தது. அம்மா இன்னும் என்னென்னவோ பேசினாள். அம்மாவா இப்படிப் பேசுகிறாள் என்று வியப்பாக இருந்தது. இதுவரை அம்மா இப்படிக் கோர்வையாகப் பேசிக் கேட்டதேயில்லை… அம்மாவிடமிருந்து ஆலோசனையோ.. அறிவுரையோ… ஏன் சேர்ந்தாற்போல் நாலு வார்த்தையோ இதுவரை வெளிப்பட்டதேயில்லை என்பதை நினைக்கையில்தான் அதற்கான சந்தர்ப்பங்களே அவளுக்குத் தரப்படவில்லையென்னும் உண்மை உறைத்தது…
அணை கடந்த வெள்ளமென அம்மா பேசினாள்… பேசினாள்…. பேசிக்கொண்டேயிருந்தாள்…. அதில் தாய்மையை மீறிய பெண்மை பிரதிபலித்தது. அடக்கப்பட்ட பெண்ணினத்துக்கு ஆதரவாக அம்மா வாதாடுவதுபோல் தோன்றியது. ஒரு வழக்கறிஞருக்கு இணையாக அம்மா இவளின் மறுப்புகளுக்கும் புலம்பல்களுக்கும் எதிராய் வாதங்களை முன்வைத்தாள். இறுதியில் இவளது பலவீனத்தை வெற்றி கண்டாள்.
ரம்யா யோசிக்கத் தொடங்கியபோது தொலைபேசியில் சுந்தர் அழைத்துக் கேட்டான்..
"ரம்யா… ஊருக்குப் போகணும்னு சொன்னியே… பஸ்ஸா, ட்ரெயினா…."
"என்னை ஊருக்கு அனுப்பிட்டு ஐயா இங்க ஜாலியா இருக்கலாம்னு நினைச்சீங்களா… அதான் முடியாது.. நான் போறதா இல்ல…."
"ஏய்… என்னாச்சு…. ரம்யா… உடம்பு முடியலையா?"
"கிண்டல்தானே வேண்டாங்கிறது… சரி, இன்னைக்கு பேங்க் போய் டிடி எடுத்து மாமாவுக்கு அனுப்பிடறேன். அப்புறம்… அப்படியே மனோஜோட ஸ்கூலுக்குப் போய் அப்ளிகேஷனைக் குடுத்திட்டு வரேன்… வேற ஏதாவது வேல இருக்கா?"
"ரம்யா… ஏய்.. என்ன திடீர்னு? என் பயந்தாங்கொள்ளி ரம்யாவா இது? எனக்கு மயக்கமே வரும்போல இருக்கே…"
"இதுக்கே மயக்கம் வந்தா எப்படி? இன்னும் ஒரு விஷயம் இருக்கு…. எனக்கு ஸ்கூட்டி வாங்கித் தரேன்னு சொன்னீங்கல்ல… அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க…."
சுந்தர் அந்தப்பக்கம் மயங்கியே விழுந்திருந்தான்.
Romba Alagana nadai, nalla karuthu. Nice one!
ஊக்கத்துக்கு நன்றி மினி.
Nalla Karuthu ulla kathai. Simple and super story
NICE!
நல்ல குடும்ப உறவை மிக அழகாகச் சித்திரித்திருக்கிறீர்கள். நம் பெண்கள் இதைப் படித்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும்.
மில்ட்டன்
சிங்கப்பூர்
பல வீடுகளில் சகஜமாக நடக்கும் பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதைக் கதையாக வடித்த விதம் அருமை.
”ஒனக்கு ஒன்னும் தெரியாது; கம்முனு வாயை மூடிக்கிட்டு கிட,” எனச் சொல்லி கணவன்மார்களில் பலர் மனைவியரின் திறமையை வீட்டுக்குள்ளேயே முடக்கி விடுகின்றனர். இப்படி அடிமைப்பட்டுக் கிடந்த தம் தாயார் பேசக்கேட்டு இக்கதை நாயகி எழுச்சி பெறுகின்றாள்.
நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்து தொலைக்காட்சி சீரியல்களில் தம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கும் நம் பெண்கள் இக்கதையைப் படிக்க வேண்டும். பாராட்டுக்களுடன் வாழ்த்துகிறேன் கீதா!
உங்கள் அனைவரின் ஊக்கமிகு பாராட்டுக்கு நன்றி சங்கீதா, கண்மணி, மில்ட்டன்.
aha. Superb
விமர்சித்துப் பாராட்டிய கலையரசி அவர்களுக்கும், சிலாகித்துப் பாராட்டிய பத்ரா அவர்களுக்கும் நன்றி.
னானும் ஒரு காலத்தில் ரம்யா மாதிரி இருன்தேன். நல்ல கதை கீதா
நன்றி ரேணு.
hi
i like this storry.this is verry nice.write like family storry. thanks
hi
superb story ; ramya mathiri irukkanumnu aasappatten, ana unga story read pannathilirunthu maranumnu aasaippadugiren
very beautiful story !
very nice story very interesting. my life story is also same but my dear adjust in most of the time