ஒன்பது மைல் நடை (3)

"ஏ நிக்கி, நீ சொன்னது சரி" என்று தோள்ப்பக்கம் இருந்து வரைபடத்தைப் பார்த்துப் பேசினேன். "இங்க ஃபேர்ஃபீல்டில் இருந்து எந்த ஊரும் ஒன்பது மைல் தாண்டிய சுற்றளவில் இல்லை. அதற்கு முன்பே வந்திருது. மத்த சின்னச் சின்ன நகரத்திற்கு ஃபேர்ஃபீல்ட் வலப்பக்கமா அமைந்திருக்கிறது."

அவனும் வந்து வரைபடத்தை மேய்ந்தான். "அட.. அவன் நடந்து வந்த ஊர் ஃபேர்ஃபீல்ட் தான்னு இருக்க வேண்டியதில்லையே…" என்றான். "அடுத்தடுத்து இருக்கிற எதும் நகரமாக்கூட அவன் போயிருக்கலாம். ஹட்லி எப்பிடி?"

"ஏன் ஹட்லின்றே? அந்த அதிகாலை அஞ்சி மணிக்கு அங்க யாருக்கு என்ன சோலி இருக்கும்?"

"வாஷிங்டன் ஃப்ளையர் ரயில் அங்கதான் காலை அஞ்சு மணிக்கு நீராவிக்குத் தண்ணீர் பிடித்துக்கொள்ளும்…" என்றான் அவன் அமைதியாக.

"அது சரிதான்…" என்றேன். "பல ராத்திரிகளில் இந்த ரயில்கள் தஸ்.. புஸ்சென்று அது போடும் சத்தத்தில் என் தூக்கமே கெட்டுப்போயிருக்கு. ரயில் சத்தம் அடங்க ஒன்றிரண்டு நிமிஷத்தில் மெதடிஸ்ட் சர்ச் கடிகாரம் அஞ்சு தரம் அடிக்கும்." என் மேசைக்குப் போய் ரயில் கால அட்டவணை தேடியெடுத்தேன். "அந்த ஃப்ளையர் வாஷிங்டனில் 12.47க்குக் கிளம்புகிறது. பாஸ்டனுக்கு எட்டு மணிக்குப் போய்ச் சேர்கிறது."

நிக்கி இன்னும் வரைபடத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை. ஒரு பென்சிலை எடுத்து நகரங்களின் தூரத்தை அளவிட்டுக் கொண்டிருந்தான். "பழைய சம்தர் சத்திரத்தில் இருந்து ஹட்லி பார், சரியா ஒன்பது மைல்."

"பழைய சம்தர் சத்திரமா?" என்று நான் திரும்பிச் சொன்னேன். "இதுவரை நாம பேசிட்டிருந்த அத்தனையையும் இது உல்ட்டாவா அடிச்சிருதேய்யா. அந்த ஊரில் சரளமா டாக்சி கீக்சி கிடைச்சிரும். பாதி பட்டணம் அது…"

நிக்கி தலையை உதறிகொண்டான். "அங்க கார் எல்லாமே பார்க்கிங்குக்கு உள்ள இருக்கும். வாசல் செக்யூரிட்டி வந்து, அவனுக்குத் தெரிய வெளிய வரணும். ரொம்ப சின்ன பழைய ஊர். பளிச்னு அவன் வெளிய போறது தெரிஞ்சிறக் கூடாதுன்னு பாத்திருக்கலாம். அத்தோட… அட அவன் தனக்கான தகவல் வரும் வரை அறையில் காத்திருக்க வேண்டியிருந் திருக்கலாமில்லே? ஃப்ளையர் பத்தின செய்தியா அது இருக்கலாம். எந்தப் பெட்டியில் எந்த பெர்த்தில் யார் வர்றாங்கன்ற தகவலை அவன் தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா கிளம்ப வேண்டியிருந்தால்?…"

"ஏய் நிக்கி…." என்றேன் நான் அதிர்வுடன். "இங்க நான்தான் ரிஃபார்ம் டிஸிடிரிக்ட் அட்டார்னி. பொதுப்பணத்தை விரயம் பண்றேனா தெரியல்ல. இன்னாலும் உடனே ஒரு டிரங்க் கால் பாஸ்டனுக்கு அடிச்சிப் பேசப் போறேன். அசட்டுத்தனமா தெரியலாம், ஆனால் நான் செய்யப் போறேன்."

நிக்கியின் சின்ன நீலக் கண்கள் மிளிர்ந்தன. நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான்.

"செய்யி" என்றான் இறுக்கமாய்.

பேசிவிட்டு தொலைபேசியைத் திரும்ப தாங்கியில் வைத்தேன்.

"நிக்கி…" என்றேன். "ஒரு குற்றக் கண்டுபிடிப்பில் இத்தனை அதிசயமான தற்செயல் நடந்திருக்குமான்னே தெரியல்லியேப்பா… நேற்றைய 12.47 வாஷிங்டன் ரயிலில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டிருக்கிறான்! அவன் செத்து மூணுமணி நேரம் ஆயிருக்கிறது. ஹட்லி கணக்கும் இதுவும் எத்தனை கச்சிதமா பொருந்தி வருது!"

"இதுமாதிரிதான் நான் நினைச்சேன்" என்றான் நிக்கி. "ஆனால் இது தற்செயல்னு சொல்றியே, அதுதான் தப்பு. அப்பிடி இருக்க முடியாது. இந்த வாக்கியத்தை எங்க பிடிச்சே?"

"அட! அது ஒரு வாக்கியம், அவ்வளவே. தன்னைப்போல என் தலைல உதிச்சது அது."

"அப்பிடி இருக்க முடியாது! இட்டுக்கட்டி இப்பிடி ஒரு வாக்கியத்தை யாரும் அமைக்க மாட்டார்கள். கட்டுரை எழுதுதல் மாதிரி நான் நிறையப் பசங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். யாரையாவது ஒரு பத்து வார்த்தை அளவில் ஒரு வாக்கியம் சொல்லச் சொன்னால் சவசவ செய்தியா அது இருக்கும் – எனக்கு பால் பிடிக்கும், இப்பிடி. அதைக் காரண காரியத்தோட சொல்ல முயற்சித்தால், முன் வாக்கியத்துடன், ஏன்னா அது உடம்புக்கு நல்லது, என்று சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் பாரு, நீ கொடுத்த வாக்கியம், அது ஒரு குறிப்பிட்ட சூழலை வெளிப்படுத்தியிருக்கு."

"இன்னிக்குக் காலைலயிருந்தே நான் யாராண்டயும் எதுவும் பேச கீச இல்லை. உன்னோடு நீல நிலவு விடுதியில் நான் தனியாகவேதானே இருந்தேன்?"

"அட.. நான் பணங் கட்டிட்டு வரும் வரை நீ என் கூட இல்லியே," அவன் குரலில் அழுத்தம் கொடுத்துப் பேசினான். "வழிநடையில் நீ காத்திருக்கையில் யாரையாவது சந்தித்தாயா? நான் உன் பக்கத்துக்கு வருகிற வரையில்…?"

நான் மறுத்துத் தலையாட்டினேன். "நான் உன்னைவிட்டுத் தனியா அதிகபட்சம் ஒரு நிமிடம் கூட இல்லையே. ஒரு ரெண்டு பேர் அங்க வந்தார்கள், நீ பர்சில் சில்லரையைத் தேடிக் கொண்டிருந்தாய். அதில் ஒராள் என்னை இடித்தான். அதான் நான் அவர்களுக்கு வழிகொடுத்து ஒதுங்கி நிற்கலாம் என நின்றேன்."

"அவங்களை அதற்கு முன் எங்கியாச்சும் பார்த்திருக்கிறாயா?"

"யாரை?"

"அப்ப உள்ள வந்தாங்களே, அவங்களை?" நிக்கி பரபரப்பாய் இருந்தான்.

"ஏன்? ம்ஹும். நான் அவங்களை அதற்கு முன் பார்த்தது கிடையாது…"

"அவங்க பேசிட்டிருந்தாங்களா?"

"ம்? ஆமாம்னுதான் நினைக்கிறேன். அவங்களுக்குள்ள ரொம்ப இதுவா பேசிட்டிருந்தார்கள். இல்லாட்டி அவர்கள் என்னை கவனித்திருப்பார்கள். என்மீது இடிச்சிக்கிட்டிருக்க மாட்டார்கள்…"

"நம்ம நீல நிலவு விடுதிக்கு அத்தனைக்குப் புது ஆள் யாரும் வர்றது கிடையாது" என்று அவன் குறிப்பிட்டான்.

"நாம வியூகப்படுத்திய அந்த ஹட்லி நபர்கள்… இவர்கள்னா நினைக்கிறே?" என்றேன் ஆர்வத்துடன். "அவங்களை இன்னொரு வாட்டி பார்த்தால் என்னால் அவர்களை அடையாளம் காட்ட முடியும்னு தோணுது."

நிக்கி கண்ணைச் சுருக்கிப் பார்த்தான். "இவங்க அவங்களா இருக்கலாம். அவர்கள் ரெண்டு பேர். ஒருத்தன் வாஷிங்டனில் அந்தக் கொலையுண்ட ஆளைப் பின்தொடர்ந்து கவனித்திருக்கலாம். அவன்தான் புள்ளி வரும் பெர்த் எண்ணை இவனுக்குச் சொல்லியிருக்கலாம். மற்றவன் இங்கே காத்திருந்து காரியத்தை முடித்திருக்கலாம். அந்த வாஷிங்டன் நபர் பிற்பாடு இங்க வருகிறதாக அவர்கள் பேசிக்கொண்டார்களோ என்னவோ. அதில் திருட்டும் கொலையும், என்று ரெண்டும் இருந்தால் அது கிடைத்ததை பங்கு போட்டுக்கொள்ள என்று சொல்லலாம். அது கொலை மாத்திரம் என்றால், அந்த முதல் ஆள் செய்கூலி தர வந்திருக்கலாம்."

நான் திரும்ப தொலைபேசிக்குப் போனேன்.

"நாம விடுதியை விட்டு வந்து ஒரு அரைமணி ஆயிட்டது" என்று மேலே தொடர்ந்தான் நிக்கி. "அப்போதான் அவங்க உள்ளே நுழையறாங்க. நம்ம நீல நிலவில் அத்தனை வேகமா பரிமாறிவிட மாட்டார்கள். ஹட்லிக்கு நடந்து போன அந்த நபர், அவன் நல்ல பசியாய் இருப்பான். அந்த அடுத்த ஆள் ராத்திரி பூராவுமாக வாஷிங்டனில் இருந்து காரோட்டி வந்திருக்கலாம்."

"யாரையும் கைது செய்தீர்களானால் உடனே என்னிடம் தகவல் தாருங்கள்" என்றபடி நான் தொலைபேசியை வைத்தேன்.

காத்திருக்கையில் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. என்னவோ அசட்டுத்தனம் செய்துவிட்டாப்போல சங்கோஜமாய்த் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினேன். "சரி." நிக்கியிடம் திரும்பினேன்.

"ஒருத்தன் சமையல்கூடம் வழியாக தப்பியோட முயற்சி செய்தான். ஆனால் விடுதியின் பின்கட்டில் தயாராய் ஆள் நிறுத்தியிருந்தார்… அவனையும் பிடித்தாகி விட்டது!"

"அப்ப நம்ம வியூகம் பலிச்சிருக்கு இல்லியா?" என்றான் நிக்கி ஒரு நிதானமான புன்னகையுடன். நான் தலையசைத்தேன்.

அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். "அடடா!" என்றான். "இன்னிக்குக் காலைல சீக்கிரமே ஒரு வேலையை ஆரம்பிக்கறதா இருந்தேன். இங்கயே உன்கூடவே இத்தனை நாழியாயிட்டது எனக்கு…"

அவன்கூட வாசல்வரை போனேன். "ஆ நிக்கி" என்று அன்போடு அழைத்தேன் அவனை. "நீ இந்த விஷயத்துல என்ன சொல்ல வந்தே, ஞாபகம் இருக்கா உனக்கு?"

"ம். இருக்கு – ஒரு வாக்கியம் காரணபூர்வமா விளக்கப்பட்ட பின்னாலும் அது உண்மை இல்லைன்னு ஆகிப்போக வாய்ப்பு இருக்குது!"

"அப்டின்றே?"

"எதுக்கு சிரிக்கறே நீயி?" என்றான் அவன் கொஞ்சம் கடுப்புடன். ஆனால் அப்புறம் அவனும் வாய்விட்டுச் சிரித்தான்.

*******

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

விளையாட்டாய்த் துவங்கி ஒரு தர்க்க ரீதியான துப்பு துலக்கும் கதையாக பரிணமிக்கிற கதையில், தற்செயல் என்று எதுவும் இல்லை என்று முடிவு வாய்த்தாலும், அவர் முற்றும் தர்க்க ரீதியாக சிந்திக்கிறதாகச் சொல்வதாலேயே இதன் ஓட்டைகள் கண்ணில் படுகின்றன. அந்த இரு குற்றவாளிகளும் நேரே இவர்கள் சந்திக்கும் ஓட்டலுக்கே, சாவகாசமாய்ச் சாப்பிட வருகிறது தற்செயல் இல்லையா என்ன? கதையில் காவல்துறை அதிகாரி தப்பு தப்பாய் தர்க்கம் பண்ண, கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் தர்க்கம் பேசுவது இன்னொரு ஆச்சர்யம். கல்லூரிப் பேராசிரியரை இந்த காவல்துறை அதிகாரி ஒரு வாக்கியம் சொல்லச் சொல்லி இப்படி மடக்கியிருந்தால் கதை நல்ல உரம் பெற்றிருக்கக் கூடும். அத்தோடு விளையாட்டாய் இவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தாலும் ஒரு கொலையின் தடங்களைக் கண்டுபிடித்ததில் ரெண்டு பேருமே ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடையவில்லை. சரி, கைது பண்ணியாச்சில்லியா, நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன், என்று பேராசிரியர் கிளம்புகிறார். தங்கள் வெட்டி அரட்டை உண்மையில் ஒரு குற்றத்தைக் கண்டுபிடிப்பதில் முடிந்ததை இவரும் சிரிப்புடன் கொண்டாடுகிறார்கள் என்று கதை முடிகிறது. பிடிபட்டவர்களை குறைந்தபட்சம் போய்ப் பார்க்கக் கூட இவர்கள் அக்கறை காட்டாதது, என்ன தர்க்கத்தில் சேர்த்தி மிஸ்டர் கதாசிரியர்? படித்தபோது சுவாரஸ்யமாய் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும். ‘யாம் பெற்ற இவ்வனுபவம் பெறுக இவ்வையம்’, என மொழிபெயர்த்திருக்கிறேன்.

About The Author