கலெக்டா் ஆபீஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆளுக்கொரு மனுவோடு அதிகாரிகளைப் பார்க்கக் காத்திருந்தார்கள். கலெக்டரிடமே நேரில் மனு கொடுக்க வேண்டும் என்று பரிதவித்த சிலரை அறைக்கு வெளியில் சிகப்புப் பட்டையும் தொப்பியுமாய் நின்றிருந்த டவாலி சிடுசிடுத்த முகத்தோடு விரட்டியடித்தான்.
"ஐயா மீட்டிங்ல இருக்காரு. நீங்க போய் பி.ஏ.வைப் பாருங்க. போங்க."
"ஒரு நிமிஷம் விடுங்க சாமி."
"போய்யான்னா! தமிழ்லதானே சொல்றேன்."
அவா்களில் பலா் முகம் சுருங்க நகா்ந்தார்கள். அதன் பிறகும் அங்கேயே நின்றிருந்த அந்த மனிதனை டவாலி விழித்துப் பார்த்தான்.
"ஏய்யா… உனக்கென்ன தனியா ஒரு தரம் சொல்லணுமா?"
"ரொம்ப முக்கியமான விஷயம்ங்க. கலெக்டரய்யாவைப் பார்த்தே ஆகணும்."
"இவரு பெரிய ஆளு! அய்யாவோட உக்காந்து முக்கியமான விஷயம் பேச வந்துட்டாரு. அய்யாவைப் பார்க்க முடியாது.
போய்ட்டு வா. இல்லாட்டி யாராவது அதிகாரியப் போய்ப் பாரு."
"இல்லிங்க. எனக்கு அய்யாவைத்தான் பார்க்கணும். நா காத்திருக்கேன்."
"நீ காத்திருந்தா உள்ள விட்ருவமா? எங்கோ்ந்துய்யா வர நீ?"
"மீனவக் குப்பத்திலோ்ந்து."
"அய்யா இன்னிக்கு யாரையும் பார்க்க மாட்டார். போ.. போ.."
அவன் சற்று நகா்ந்து சென்று ஒரு ஓரமாய்ப் பரிதாபமாய் நின்றான். கையில் அழுக்கேறிய ஒரு துணிக்கடைப் பை. பரட்டைத் தலை. அழுக்கு வேட்டி. மேல் சட்டையில் ஆயிரம் பொத்தல்கள். காலில் பலமுறை தைக்கப்பட்டுத் தேய்ந்து போன அழுக்குச் செருப்பு.
"போன்னா அங்க போய் நிக்கற? என்ன நெனைச்சுட்ருக்க… அதான் சொல்றேன் இல்ல. உள்ளாற விட முடியாதுன்னு."
"நீங்க உள்ளாற விட வேண்டாம்ய்யா. அவரு வெளிய வரும்போது பாத்துக்கிறேன்."
"அப்டின்னா போய்த் தெருப்பக்கம் நில்லு. இது ஆபீசு. இங்க நிக்கறதுக்கு அனுமதியில்ல."
"இந்த ஆபீஸே எங்கள மாதிரி ஆளுக்கு நல்லது செய்யத்தானே? நா ஓரமாத்தான் நிக்கிறேன். யாருக்கும் தொந்தரவில்லாம.."
அவன் அடமாக நிற்க, அதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. டவாலி உள்ளே ஓடினான்.
"ஏம்பா, ஒரு பத்து இருபது அந்தாளுக்குக் கொடுத்தா உள்ளே விட்ருப்பான் இல்ல?" சற்றுத் தள்ளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பியூன் அந்த மனிதனிடம் வந்து கிசுகிசுத்தான்.
"அதெல்லாம் தப்புங்க."
அவன் பெருமூச்சு விட்டான். தன் குலதெய்வத்திடம் மன்றாடினான். தாயே! மண்டைக்காட்டம்மா! பிள்ளைக்கு என்னை அடையாளம் தெரிஞ்சா போதும். அப்பான்னு அவன் வாய் திறந்து கூப்ட்டா அதைவிட சந்தோசம் எனக்கு வேறென்ன வேணும் தாயி? அவன் சித்தப் பிரமையைச் சரி செய்துவிடு தாயே. உனக்குப் பொங்க வெச்சு கும்பிடறேன்.
"ஏன்யா, இன்னுமா நீ நின்னுட்ருக்க. உனக்கென்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருக்கா. இது குறை கேக்கற நாளு கூடஇல்ல. அய்யாவைப் பார்க்கணும்னா போய்ட்டு திங்கக் கிழமை வா." டவாலி மீண்டும் கத்தினான்.
"எனக்கு அய்யாவைப் பார்த்தே ஆகணும்ங்க. ரொம்ப முக்கியமான விசயம்."
"அப்டி என்ன முக்கியமான விஷயமா இருந்தாலும் இன்னிக்கு நீ அவரைப் பார்க்க முடியாது. அதும் நா சொல்லச் சொல்ல அடமா நிக்கிற பார். அதனாலேயே உன்னை உள்ளே விடறதா இல்ல."
"நாந்தான் அவா் வீட்டுக்குப் போகையில் பாத்துக்கறேன்னு சொன்னேனே."
"நா சொல்லச் சொல்ல எதிர்த்தா பேசற நீயி..? எனக்கென்னமோ சந்தேகமா இருக்கே. அதென்னய்யா பையில.. குண்டு கிண்டு ஏதாவது வெச்சிருக்கியா… எங்கே காட்டு, பார்ப்பம்…!"
"மாட்டேன்." அவன் பையை இறுக்கமாக மார்போடு அணைத்துக் கொண்டான்.
"சரிதான். உன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு. எனக்கென்ன? கால் ஒடிய நிக்கணும்னு இன்னிக்கு உன் ராசி பலன் சொல்லுது. நில்லு."
அவன் நின்றிருந்தான். நேரம் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது.
(மீதி அடுத்த வாரம்)