எஸ்.. எம்…எஸ்!” (8)”

மணிக்கு இன்னும் எதுவும் நான் சொல்லவில்லை. இப்போது எடிட் செய்து சொன்னேன். ஆள் யாருன்னு தெரியலே. டார்ச்சர். என் பொம்பளைக் குரலைக் கேட்டு நிஜம் லேடின்னு நினைச்சுகிட்டு மெசேஜ் அனுப்பறான்.. போன் பேசறான்.. மணிக்கு சுவாரசியம் போய் விட்டது.

"ப்பூ.. இவ்வளவுதானா.. இதுக்கு போயி ஏன் இத்தனை பிளானு.. வூடு பூந்து நாலு தட்டு தட்டி விட்டா சரியாப் போச்சு"

"சரி. வா" என்றேன்.

விலாசம் ஒரு சந்துக்குள் இருந்தது. அழைப்பு மணியை அடித்தேன். மணியை நான்கு வீடுகள் தள்ளி நிற்கச் சொன்னேன். சூழ்நிலை பார்த்து அழைப்பதாய் சொன்னேன்.

"யாரு"

"நான் தான்" என் பெண்குரலின் கடைசி பிரயோகம்!

"கதவு திறந்துதான் இருக்கு செல்லம்.. உள்ளே வா"

கதவைத் திறந்தேன்.

"உள்ளே வா" ஹாலில் யாரும் இல்லை. "இங்கே.. பெட் ரூமில்"

ராஸ்கல்! போனேன். சின்ன அறை. மூலையாக ஒரு கட்டில். பக்கத்தில் ஒரு வீல் சேர். என்னைப் பார்த்ததும் அவன் திகைத்ததை விட என் திடுக்கிடல்தான் அதிகம்.

"நீ.."

"நீங்க"

"மெசேஜ் கொடுத்தது.. பேசினது?"

"லேடி வாய்ஸ்?"

கட்டிலில் அமர்ந்து விட்டேன். இதற்குள் மணிக்குப் பொறுக்க முடியாமல் அவனும் உள்ளே வந்து விட்டான்.

"என்ன தட்டிரலாமா"

அவனுக்கும் ஷாக். "அட.. நாக்காலிப் பய.. இவனா?"

"ஸ்ஸ்.. மணி. கொஞ்சம் பேசாம இரு."

எனக்கு திடீரென ஏனோ ஒரு பொறுமை. விவரித்தேன். என் மனைவி எனக்குக் கொடுத்த மெசேஜ் தவறுதலாய் அவனுக்கு வந்து விட்டதை. என் இரு குரல் திறமையை.

"உங்களால ரெண்டு வாய்ஸ்ல பேச முடியுமா"

"பாடவும் முடியும்"

செருமிக் கொண்டான்.

"எ..னக்கு என்ன சொல்றதுன்னு புரியலே. கடவுள் என்னை இப்படி படைச்சிட்டாரேன்னு நொந்து போயிருந்தப்ப.. அந்த மெசேஜ்.. எனக்கு யார் அன்பாச்சும் கிடைச்சா தேவலை மாதிரி. எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. டிவோர்ஸி. ஆபீஸ் போயிருக்காங்க. என்னைக் கவனிக்க ஒரு அம்மா வருவாங்க. இப்ப அவங்களை நாதான் நீங்க வரதுனால வெளியே அனுப்பிட்டேன். புக்ல படிச்சிருக்கேன். இப்பல்லாம் மெசேஜ் அனுப்பி அதனால வர வம்பு பத்தி எல்லாம். இருந்தும் எனக்குள்ளே ஒரு தைரியம்.. நான் மாட்டிக்க மாட்டேன்னு.. என்னால எதுவும் முடியாது.."

அழுதான். "அதனால பைக் ஓட்டுவேன்.. அதைப் பண்ணுவேன்னு பீலா விட்டேன்..என்னை மன்னிச்சுருங்கன்னு சொல்ல மாட்டேன். நான் செஞ்சது தப்புதான். இந்த கொஞ்ச நாள் நிச்சயமா எனக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சுது.. நான் ஒரு முழு மனுஷன் போல.."

மணி அதட்டினான். "ஏண்டா.. மாட்டிகிட்ட உடனே ஏதாச்சும் மழுப்பறியா.." "மணி பேசாம இரேன்"

"அவரு சொல்றது கரெக்ட் தான். எம்மேல தப்புதான்."

நான் எழுந்தேன்.

"தம்பி.. உன்னை என்ன செய்யறதுன்னு எனக்குப் புரியலை. நீ செஞ்சது விளையாட்டுத்தனமா இருக்கலாம். பட் இதைக் கண்டின்யூ பண்ணா நிச்சயம் பிரச்னையில மாட்டிப்பே. பீ கேர்புல்"

வெளியே வந்து விட்டோம். எதிரில் ஒரு வயதான அம்மா வந்தார். எங்களைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் போனார். மணி கேட்டான்.

"என்ன சும்மா வுட்டுட்டே"

"ஏற்கெனவே அவனை இயற்கையே தண்டிச்சு வச்சிருக்கு. அதுவே போதும்" மணியை விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். செல் சிணுங்கியது. அவன் தான்.

"ஸாரி ஸார்.. இனிமேல் நான் மெசேஜ் எதுவும் அனுப்பமாட்டேன். உங்க நம்பரை இப்பவே டிலீட் செஞ்சிருவேன்"

"சரிப்பா"

"ஸார்.."

"என்ன"

"எனக்காக.. உங்க லேடி வாய்ஸ்ல ஒரே ஒரு பாட்டு பிளீஸ்"

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’ "தேங்க்ஸ் ஸார்"

புனிதா ஹாலில் அமர்ந்திருந்தாள். டிவி திரையில் அவள் கவனம் முழுமையாய் இல்லை என்று புரிந்தது. அருகில் போய் அமர்ந்தேன். நானும் தப்புதான் செய்து விட்டேன். என்னை அவள் மன்னிப்பாளா.. "புனி.. ஸாரிடா செல்லம்"

செல் ஸ்விட்ச்டு ஆப்!

(முற்றும்)

About The Author

1 Comment

Comments are closed.