3) ஒரு கிரைம் நாவலுக்கான அடிப்படைத் தேவைகள் என்ன? கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்ன?
ஒரு நல்ல நாவல் என்பது கண்டிப்பாகச் சமூகத்திற்குச் செய்தி சொல்லும் வகையில் எழுதப்பட வேண்டும். அந்தச் செய்தியின் மூலமாக வாசகர்கள் பயனடைய வேண்டும். அந்தக் கதையை ஒரு இளைஞனோ, இல்லத்தரசியோ படிக்கும்போது அதில் இருக்கும் நல்ல விஷயங்கள் அவர்களைச் சென்று சேர வேண்டும். என்னுடைய கதைகளில் பெண்களை மிகவும் தைரியசாலிகளாகச் சித்தரிக்க விரும்புவேன். அவர்கள் எவ்வாறு தங்களுக்கேற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், அதை எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்கிற வகையில் கதைகள் எழுதி வருகிறேன். என்னுடைய ‘மூடுபனி’ என்கிற நாவலில், காதல் திருமணம் செய்து தன்னுடைய கணவனுடன் அவனுடைய வீட்டிற்குச் செல்லும் வெகுளியான ஒரு பெண், அந்த வீட்டில் இருக்கும் மனிதர்கள் எல்லோருமே சமூகத்தில் பெரிய மனிதர்களாக இருப்பதைத் தெரிந்து கொள்கிறாள். அவளுடைய கடந்த கால வாழ்க்கையின் காரணமாக அவளுக்கு ஏற்படும் பிரச்சினையைத் தன்னுடைய கணவன் வீட்டிற்குத் தெரியாமல் அவள் எதிர்கொண்டு வென்றது எப்படி என்று எழுதியிருப்பேன். கதைகள் இதுபோல் தைரியத்தைக் கொடுப்பவையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
4) உங்களுடைய முதல் நாவல் வெளிவந்தபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
அதை ஒரு மிகப்பெரிய சாதனையாக நான் உணர்ந்தேன். சுமார் 8 வருட காலம் குமுதம், ஆனந்த விகடன், சாவி, குங்குமம், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, கல்கி, கல்கண்டு போன்ற வார மற்றும் தினப் பத்திரிக்கைகளில் என்னுடைய கதைகள் வெளிவந்திருந்தன. 600க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருந்த அந்தக் காலக்கட்டத்தில் நாவல் எழுதும் முதல் வாய்ப்பு ‘மாலைமதி’ பத்திரிக்கையின் மூலமாக எனக்குக் கிடைத்தது. லட்சுமி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் 12 பேருக்கு மட்டுமே அதில் நாவல்கள் எழுதும் வாய்ப்பு கொடுக்கப்படும். அதுபோன்ற நிலையில் குமுதம் பத்திரிக்கையின் ஒரு பிரிவான இந்த மாலைமதியில் எழுதும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. எனக்குச் சிறுகதை மட்டுமே எழுதத் தெரியும் என்று நான் மறுத்தபோது “அது ஒன்றும் கஷ்டமான விஷயம் கிடையாது. ‘யானைக்குத் தன்னுடைய பலம் தெரியாது’ என்பது போல உங்களுடைய திறமை உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லி எனக்கு ஊக்கமளித்தவர் அப்போதைய குமுதத்தின் துணை ஆசிரியராக இருந்த திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள். நாவல்களில், நிறைய சம்பவங்கள் இருக்கவேண்டும், எங்கேயும் சலிப்பு தட்டிவிடக்கூடாது, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு திருப்பம் இருக்குமாறு செய்து இறுதியில் திருப்பங்களுக்கான விடைகளைச் சொல்லி முடித்தால் ஒரு அருமையான நாவல் கிடைக்கும் என்று எனக்கு ஃபார்முலாவைக் கற்றுக்கொடுத்தார். இந்த ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டு என்னுடைய முதல் நாவல் ‘வாடகைக்கு ஒரு உயிரை’ எழுதினேன். அறிவியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. மாலைமதியில் என்னுடைய நாவல் புத்தக வடிவில் கடைகளில் விற்கப்படுவதைக் கண்டபோது எனக்குப் பெருமையாக இருந்தது. எப்பொழுதுமே என்னுடைய முதல் நாவலும் அதை எழுதிய அனுபவமும் மறக்க முடியாதது.
5) உங்களுடைய எழுத்துக்களுக்கு உங்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடம் கிடைத்த ஆதரவைப் பற்றிச் சொல்ல முடியுமா?
1968இல் இருந்து 1970 வரை பத்திரிக்கைகளில் நான் எழுதிக் கொண்டிருந்தபோது எனக்கு நிலையான வேலை கிடையாது. அந்த நிலையிலும், என்னுடைய பெற்றோர் நான் எழுதுவதை ஆட்சேபிக்கவில்லை. அக்கம்பக்கத்தார் என்னுடைய தாயிடம், என்னைப் பற்றியும் நான் எழுதுவதைப் பற்றியும் விமர்சித்தபோதும் கொஞ்சமும் கவலைப்படாமல் “என்னுடைய மகனுக்கு எழுதுவது பிடித்திருக்கிறது, அதனால் அவன் எழுதுகிறான். யாருக்குத் தெரியும், ஒருநாள் என்னுடைய மகன் மிகப் பெரிய எழுத்தாளனாக வரக்கூடும்” என்று அவர்களுக்குப் பதிலைத் தந்து எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். என்னால் எழுத முடியுமா என்று சந்தேகித்துக் கேலி செய்யாமல், என்மேல் நம்பிக்கை வைத்து எனக்கு விருப்பமானதைச் செய்யும் சுதந்திரத்தைத் தந்து ஊக்குவித்தார்கள் என் பெற்றோர். அதே விதமான ஆதரவும் ஊக்குவிப்பும் என்னுடைய மனைவியிடமும் எனக்குக் கிடைத்தது. பொதுவாக, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஓர் எழுத்தாளரின் மனைவி என்கிற வகையில், எனக்கு எந்தவித இறுக்கமும் ஏற்படாத வகையில், மன அமைதியுடன் எழுதும்போதுதான் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து மிகவும் உறுதுணையாக இருப்பவர் என்னுடைய மனைவி. என்னுடைய கதைகளைப் படிக்கும் முதல் வாசகி என் மனைவி, கதையைப் பற்றிய தன்னுடைய அபிப்பிராயங்கள், குறைகளை எடுத்துச் சொல்லும் முழு உரிமை உடையவர். நானும் அவருடைய கருத்துக்களுக்கேற்ப மாற்றங்களைக் கதைகளில் செய்வதுண்டு.
6) உங்களுடைய எழுத்துக்களில் உங்களை மிகவும் கவர்ந்த / பாதித்த கதாபாத்திரம் எது?
நிறைய கதாபாத்திரங்கள் உண்டு! குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், ‘தேவி’ இதழில் தொடர்கதையாக எழுதிய ‘முதல் பகல்’ நாவலில் வரும் கதாநாயகி என்னை மிகவும் பாதித்தவர். 6 வயதில் கண் பார்வையை இழக்கும் ஒரு சிறுமிக்கு, அவளுடைய வாழ்நாளில் எப்போதெல்லாம் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போது அவளுக்குக் கண் பார்வை வரலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். தன்னுடைய முதல் பகலுக்காகக் காத்திருக்கும் அவளுக்கு எப்போது பார்வை கிடைத்தது, பார்வை கிடைத்தபோது அவள் பார்த்தது என்ன என்பதைச் சொல்லும் விதமாகக் கதையை எழுதியிருந்தேன்.
7) உங்களுடைய கதைகளில், அறிவியல் விவரங்கள் தனித்து நில்லாமல் கதையோட்டத்தோடு ஒட்டிக் கையாளப்படுகின்றன. இது எப்படி, இதன் ரகசியம் என்ன?
பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை மட்டும்தான் கிரைம் என்கிற ஒரு தவறான அபிப்பிராயம் நம்மிடையே உள்ளது. இவற்றைக் கொண்டு மட்டுமே எழுதுவது என்பது கிணற்றில் நீச்சலடிப்பது போன்றது. இவை மட்டுமில்லாது, அறிவியல் விஷயங்களும் கிரைமில் உள்ளன. ஆனால், அறிவியல் என்பது ஒரு மிகப்பெரிய சமுத்திரம் போன்றது. அதில் நம்முடைய விருப்பத்திற்கேற்ப நீச்சலடிக்க முடியும். முதலில், அறிவியல் சார்ந்த நிகழ்வு ஒன்றைத் தேர்வு செய்து, அதற்கேற்பக் கதையை உருவாக்குவதால் அறிவியல் விவரங்கள் தனித்து நில்லாமல் கதையோடு கலந்துவிடுகின்றன. உதாரணமாக, அல்செய்மர் என்பது 65 வயது மற்றும் அதற்கும்மேல் உள்ளவர்களுக்கு வரக்கூடிய ஒரு நோய். அந்த நோயை முந்திய வயதிலேயே வரவழைத்தால் என்ன நடக்கும்? இம்மாதிரி நிகழ்வதால் நம்முடைய அண்டை நாடுகளுக்கு லாபம் ஏற்பட வாய்ப்புள்ளதா? இதனால் நாட்டிற்கு எவ்வாறு அழிவு ஏற்படுகிறது? இதுபோன்ற மெகா கிரைம்கள் பிற்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது என்பதை என்னுடைய கதைகளின் மூலமாகச் சொல்லி வருகிறேன். தற்போது மிகப் பரவலாகப் பேசப்படும் ‘Hidden Camera’வைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன். நான் முன்பு எழுதியது எல்லாம் இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய அறிவியல் சார்ந்த கதைகள் எல்லாம், நடந்த மற்றும் நடக்கவிருக்க நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்படுகின்றன.
8) 1000த்திற்கும் மேற்பட்ட நாவல்கள், 2000த்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள், இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒருமுறை எழுதிய கதையின் சாயல் மற்ற கதைகளில் தோன்றாதவாறு எழுதுகிறீர்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?
— வளரும் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் கொண்ட இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளத் தவறாமல் படியுங்கள் அடுத்த வாரம்…
“