1970களில் ‘மாலை முரசு’ பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்த சிறுகதைப் போட்டியில், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுகதைக்குப் பத்து ரூபாய் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். அப்பொழுது, நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில், கிரைமை அடிப்படையாகக் கொண்டு ‘உன்னை விடமாட்டேன்’ என்ற தலைப்பில் ராஜேஷ்குமார் அவர்கள் விளையாட்டாக எழுதிய சிறுகதை மறுவாரமே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பத்திரிக்கையில் வெளிவந்தது.
அப்பொழுது தொடங்கி, வித்தியாசமான கதைக்களங்களுடன் அறிவியல் சேர்த்துக் கதைகள் எழுதித் தனக்கென ஒரு தனிப் பாதையை ஏற்படுத்திக் கொண்டவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள்! 1000க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய கதைகள் வெளிவராத பத்திரிக்கைகள் தமிழில் இல்லை என்றே சொல்லலாம்! ஒரு காலத்தில் இவருடைய கதைகள் குமுதம், ஆனந்த விகடன், கல்கண்டு, சத்யா, ஜூபிலீ, ராஜா ராணி, ராணி, கல்கி, மதுரம், உஷா, இதயம் பேசுகிறது, சாவி என்று தினமும் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருந்தன. கோயமுத்தூரிலிருந்து தினமும் டிக்கெட் கலெக்டர் மூலமாக இவருடைய கதைகள் சென்னை சென்ற காலங்களும் உண்டு! அந்தக் காலகட்டத்தை ‘ராஜேஷ்குமார் யுகம்’ என்று வழங்கியதில் அதிசயம் எதுவுமில்லை.
1986இல் இருந்து, பதிப்பாளர் திரு.அசோகனின் பதிப்பகத்திற்காக மாதம் ஒரு நாவல் எழுத ஆரம்பித்தார் ராஜேஷ்குமார். ஒவ்வொரு புத்தகமும் 50,000 பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன. பல கதைகள் மறுபதிப்பும் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் பாக்கெட் நாவல்களாக மிகவும் பிரபலமடைந்தன. இவருடைய கிரைம் கதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது மட்டுமல்லாமல் அவை இரண்டு தொகுதிகளாகவும் சென்னையைச் சேர்ந்த பிளாஃப்ட் (Blaft) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஊர் என்றால் அது சென்னை, புது தில்லி, மும்பை, கொல்கத்தா மட்டும் கிடையாது எனச் சொல்லிப் பல ஊர்களை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதுவதன் மூலம் வாசகர்களுக்குப் பல இடங்களை அறிமுகம் செய்து வைக்கிறார். வெளிநாடு சென்றுவரும் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் மற்ற நாடுகளையும் கதைக்களமாகக் கொண்டு கதைகளை எழுதியுள்ளார்.
ஒருமுறை, இவர் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றிருந்தபோது வாகனம் பழுதடைந்துவிட்டது. அருகில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் தான் மெக்கானிக்கை அழைத்து வரும்வரை வாகனத்தைப் பார்த்து கொள்ள முடியுமா என்று கேட்டதற்கு ஒப்புக் கொண்ட பையன், தன்னிடமிருந்த இவருடைய புத்தகத்துடன் வாகனத்தின் அருகில் வந்து அமர்ந்திருக்கிறான். இவர்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது சாகித்ய அகாடமி விருது பெறுவதைப் போன்று உணர்வதாகச் சொல்கிறார். தனக்கு மிகவும் பிடித்த தலைவர் விவேகானந்தரின் பெயரைக் கொண்டு தன் கதாநாயகனுக்கு ‘விவேக்’ என்று பெயர் வைத்திருக்கிறார். வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்தாலும், சில நேரங்களில் வித்தியாசமான கடிதங்களும் வருவதுண்டு. ‘அது எப்படி, தலைவர் கதைகளில் மட்டும் வில்லன் கடைசியில் மாட்டிக் கொள்கிறான்?’ என்று கேட்டு வந்த கடிதத்தை எழுதியது தொடர் கொலைகளைச் செய்த ஆட்டோ ஷங்கர்!
இயக்குநர் விஜய.டி.ராஜேந்தர் அவர்களால் ‘கிரைம் மன்னன்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டவர். கடந்த வருடம், தமிழக அரசு இவருக்குக் ‘கலைமாமணி’ பட்டம் வழங்கியும் சிறப்பித்தது. தற்போது, கலைஞர் தொலைக்காட்சியில் இவருடைய நாவல்கள் ‘சின்னத்திரை சினிமா’க்களாக உருவம் பெற்றுச் சனிக்கிழமைதோறும் ஒளிபரப்பப்படுகின்றன. இன்றும் சிறுகதைகள், தொடர்கதைகள் என அவருடைய எழுத்துப்பணி தொடர்கிறது.
அவருடைய எழுத்துப் பணிக்கிடையே நிலாச்சாரலுக்காக நேரத்தை ஒதுக்கி நேர்காணல் தந்து சிறப்பித்ததற்கு எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிலாச்சாரலின் 600ஆவது இதழின் மற்றொரு சிறப்பாகத் தொடங்கியுள்ள அவருடைய ‘நீலநிற நிழல்கள்’ நாவலைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
https://www.nilacharal.com/ocms/log/12101209.asp
1) முதன்முதலாக, எப்படி எழுத ஆரம்பித்தீர்கள்?
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, எங்களுடைய கல்லூரியின் ஆண்டு மலருக்கான பங்களிப்புகளை எங்களுடைய லெக்சரர் பதிவு செய்து கொண்டிருந்தபோது சக மாணவன் பிரபாகரன் குறும்புத்தனமாக என்னுடைய பெயரைக் கதைக்கான பங்களிப்பில் சேர்த்துவிட்டான். கல்லூரிப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைப் படித்தறியாத எனக்கு எழுதத் தெரியாது என்று எவ்வளவோ வாதாடியும் லெக்சரர் ஒப்புக்கொள்ளாததால் என்னுடைய முதல் கதை ‘வாழ்ந்து காட்டுவோம்’ பிறந்தது.
மனிதர்களுக்கிடையே ஏழை – பணக்காரன், மேல் ஜாதி – கீழ் ஜாதி போன்ற வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தக் கதை.
ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு டீக் கடைகளில், முறையே ஒரு ஆணும் (ரங்கன்) பெண்ணும் (விஜயா) இருந்தனர். நாளடைவில் அவர்களிடையே காதல் மலர்கிறது. ரங்கன் ஏழை, அனாதை என்பதால் அவர்களுடைய காதலை அனைவரும் எதிர்க்கின்றனர். எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்யும்போது ஊர்ப் பெரிய மனிதர்களால் அவர்கள் ஊரிலிருந்து தள்ளி வைக்கப்படுகிறார்கள். மறுநாள் காலை, அந்த ஊரின் எல்லையைத் தாண்டி ஒரு குடிசை அமைக்கப்பட்டு அதன் வாயிலில் இருவர் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு ‘ரவி’ டீ ஸ்டாலைத் திறக்கிறார்கள். வெட்டு, குத்து என்று ரத்தம் சிந்தாமல் தங்களுடைய வாழ்வைத் தொடங்குகிறார்கள் என்று கதையை முடித்திருந்தேன். மாணவர்களிடையே இந்தக் கதை நல்ல வரவேற்பைப் பெற்றது.
2) கதைகளில் பல விதங்கள் இருக்கும்போது கிரைமைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை வாசகர்கள் விரும்புவார்கள் என்று எனக்குத் தோன்றியது. அது மட்டுமில்லாமல், அந்தக் காலகட்டத்தில் சமூக நாவல்களை எழுதிய ஜெயகாந்தன், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, கோவை மணிசேகர் போன்றவர்களே ஜாம்பவான்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் எழுதாத கதைக்களத்தில் எழுதினால்தான் மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று தோன்றியது. அதனாலேயே, அவர்கள் யாரும் உபயோகிக்காத கிரைமை அடிப்படையாகக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். அதனாலேயே என்னால் வெற்றி பெறவும் முடிந்தது என்று நான் நினைக்கிறேன்.
3) ஒரு கிரைம் நாவலுக்கான அடிப்படைத் தேவைகள் என்ன? கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்ன?
–வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டக்கூடிய இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளத் தவறாமல் படியுங்கள்
அடுத்த வாரம்…
“