எல்லைச்சாமி(1)

எப்படியும் குழந்தை பிறக்குமுன் ஊருக்கு வந்துவிட மாடசாமி முயற்சி செய்தான். பங்குனி மாசம் கொடை இருக்கும் ஊரில். தவறாமல் கொடைக்கு ஊரில் இருக்கும்படி ராசாத்தி அவனுக்கு எழுதுவாள். தப்பும் தவறுமான அவளது கடிதங்கள்தாம் எத்தனை அழகானவை…அவனுக்கும் வர ஆசைதான். கேட்ட நேரம் விடுப்பு கிடைக்காது. இம்முறை குழந்தை பிறப்பதைக் காரணம் காட்டி, அவன் கிளம்பி வர முடிந்தது.

இந்தியா ஒரு வித்தியாசமான தேசம். வடக்கே மண்சரிவும் பனியுமாய் இமயமலை. நடுவாந்தரமாய்ப் பாலைவனம். பஞ்சாபில் அமோகமாய் கோதுமை விளையும் பூமி. தெற்கே வறட்சி. கடும் வெப்பம் – என்று கலவையான சீதோஷ்ண நிலை.

தேவலாலி எங்கே, கம்மாய்க்கரை எங்கே? வந்து சேர்வதற்குள் அலுத்துப் போகும். குறைந்தது ஒருமாத விடுப்பு என்றால் பரவாயில்லை. பத்து நாள் விடுப்பு என்றால் பாதி நாள் பயணத்திலேயே கழிந்து விடுகிறது.

வரும்போது அவனுக்குக் குழந்தை பிறந்திருந்தது. பஸ் ஊரெல்லையில் அவனை இறக்கி விட்டுவிட்டு புழுதி பறக்க கிளம்பிப்போனது. மாமா அவனுக்குக் காத்திருந்தவர் சிரிப்புடன் தகவல் சொன்னார். ஆண் குழந்தை. உள்ளே சிலிர்ப்பாய் ஒரு குறுகுறுப்பு ஓடியது.

"பயபுள்ள உங்கய்யாவ அப்படியே உரிச்சு வெச்சிருக்காப்ல மாப்ளோய்…" என்றதும் அசட்டுச் சிரிப்பு வந்தது. ரொம்ப சந்தோசம் வந்தால் மாடசாமி இப்படி அசட்டுத்தனமாய் உணர்வதுண்டு. சிரிக்க ஆசையும் தயக்கமுமாய் முகம் விகாரமாய்க் கோணிக்கொள்ளும்.

கித்தான் பையை மாமா எடுத்துக்கொள்ள வீட்டைப் பார்க்க நடந்தார்கள். காலைநேர சீதளக் காற்று ஆளைத் தழுவியது. இத்தனை தூரத்துக்கும் காவல் தெய்வம் மாடசாமி தெரிந்தது. சிறிய ஆளுயரக் கோவில் சுவர் தாண்டி தூர தூரத்துக்கும் சாமி தெரியும். தூக்கிய வீச்சரிவாளுடன் உக்கிரக் காவல்.

பங்குனிக் கோடையின் போது நாற்புறத்திலிருந்தும் சனங்க வந்து குழுமும். அந்தப் பகுதி பூராவும் சனக்காடாய்ப் போகும். பாட்டும் கூத்தும் கும்மாளமும், கொண்டாட்டமும். பவானி சமுக்காளம் விரித்து ஜமா சேத்துக்கிட்டு சீட்டாட்டம், கோவில்ப் பக்கம் கரியால் வரைந்து கொண்டு தாயக்கட்டம், ஆடுபுலியாட்டம், என்று அமர்க்களப்படும்.

மாமா இன்னும் குழந்தையைப் பற்றிப் பேச மாட்டாரா என்றிருந்தது. இறக்கை முளைத்து நேரே வீட்டு வாசலில் போய் இறங்கிவிடத் துடிப்பாய் இருந்தது. மனசெல்லாம் பூத்துச் சிரித்தது. ஆம்பிளைப் பிள்ளை. ஊஹூய் என்று விசிலடிக்க ஆவேசமாய் இருந்தது. அடக்கிக் கொண்டான். பிரசவத்தின் போது கூட இருக்கலாம் என்று வேகவேகமாய் பரபரப்பாய் வந்தான்.

வலிஎடுத்து ஆசுபத்திரி வரை போகவில்லை. பாதிவழியில் ஊரெல்லையை வண்டி தாண்டும் போதே, வண்டியிலேயே சுகப்பிரசவம். "சாமி பார்வையிலேயே…நல்ல விசயந்தானே" என்று மாமா சிரிக்கிறார்.

மாமாவை நிற்கச் சொல்லிவிட்டு கோவிலுக்குள்ளே போயிக் கும்பிட்டுவிட்டு வந்தான். சாமி கழுத்தில் எப்போதோ போட்ட மாலை சருகாய்க் காற்றில் எழும்பி ஆடிக் கொண்டிருந்தது.

"ஒரு மாலை வாங்கி போடணும் மாமா."

தெருவை எட்டவே கோமதிமயினி பல் தேய்ச்சிட்டிருந்தது. "வாருமைய்யா மிலிட்டரி மைனரு" என்கிற வரவேற்பு கூச்சத்தைத் தந்தது. பெண்களில் எவ வாயிலும் விழலாம். கோமதிமயினி கிண்டலைத் தாக்குப் பிடிக்க ஏலாது. "ஆமா மயினி" என்று சிரிக்கிறான்.

"ஆம்பளைப் பிள்ளையா ஜமாய்ச்சிட்டாப்ல இருக்குது?"

"ஆமா மயினி" என்று மீண்டும் சிரித்தான். வேறென்ன பேச தெரியவில்லை.

தங்கச்சி லெட்சுமியும் வீட்டு நாயும் ஓடி வந்தார்கள். டைகருக்குத்தான் அவனைக் கண்டதில் என்ன குஷி. "கீச் கீச்" என்றபடி மேலே தாவ முயன்றது. உடலெங்கும் உற்சாகமாய் நெளிந்து குலைந்தது அது.

உள்ளே போய் முதல் காரியமாகக் குழந்தையைப் பார்த்தான். நல்ல தேக்குக் கட்டையாட்டம் பளபளப்பாய்க் கிடந்தது. மனம் குதூகலித்தது. அள்ளித் தூக்கப்போனபோது அம்மா "ஏல பாத்து கோளாறாத் தூக்கனுண்டா. இரு நான் தூக்கித் தாரேன்" என்று வந்து, அவனை உட்காரச் சொல்லி மடியில் போட்டாள்.

உலகத்தில் இந்தக் கணத்துக்கு ஈடேது, என்றிருந்தது. கடந்த முறை ஊருக்குப் புறப்பட்டுப் போனபோது ஒரு சேதியுமில்லை. ஊருக்குப் போயி ரெண்டு மாசத்தில் ராசாத்தி கடிதம் எழுதியிருந்தாள். கதவு பின்னாலிருந்து அவளே பேசுவது போல ஒரு மயக்கம். அப்போதே வந்து ராசாத்தியைப் பார்க்க ஆவேசம் வந்தது.

இன்றுவரை அவன் முகத்தைப் பார்த்து நேரே அவள் பேசியதே கிடையாது. அவனை பார்க்கவே அந்த மஞ்சள் பூசிய முகம் வெட்கம் பூசி குடைசாய்ந்து விடும். அவன்தான் அவள் முகத்தை நிமிர்த்தி நிமிர்த்திப் பேசுவான். இரவுகளில் விளக்கணைத்த பின்தான் அவன் அருகில் வருவாள். "விளக்கைப் போட்றவா, போட்றவா?" என்று பாதி ஆசையும் பாதி கேலியுமாய்க் கேட்பான். "ஐய வேணாம் மாமா" என்று பதறுவாள். அவனுக்கு வேடிக்கையாயும் வருத்தமாயும் இருக்கும்.

கிராமத்து சிநேகிதர்களுடன் கம்மாயக்குக் குளிக்கப் போகையில் ஊர்ச் சிறுவர்கள் கோவில் பக்கம் ஆலமரத்தடியில் கிளியந்தட்டு விளையாடுவதைப் பார்த்தான். கால காலத்துக்கும் மரத்தடியில் விளையாட்டு ஓயாது என்றிருந்தது. சிறு வயதில் படிக்காமல் வெயில் மழை பாராமல் அவன் இங்கேயே கிடப்பான்.

(மீதி அடுத்த வாரம் )

About The Author