"சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர்” என ஒரு பாடல் உண்டு. மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்திக் காட்டும் சிரிப்பை கணினி வழியே குறிப்பிட ஸ்மைலி (Smiley) என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். அந்த ஸ்மைலி தோன்றிய வரலாற்றைக் காண்போமா?
முறையாக வரையப்பட்ட மஞ்சள் வட்டத்துக்குள் கறுப்பு வளைபரப்பு கண்கள், பிறைநிலவு போன்ற வாய், உடம்பின்றி முகம் மட்டுமே கொண்ட இந்த உருவம் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?
அமெரிக்காவின் மாசாசூட்ஸ் நகரில் விளம்பர நிறுவனம் நடத்தி வந்த ஹார்வே பால் என்பவர் 1964ஆம் ஆண்டில் ஸ்மைலியை உருவாக்கினார்.
அறுபதுகளின் தொடக்கத்தில் State Mutual Life Assurance of Worcester நிறுவனம் தன் ஊழியர்கள் எப்போதும் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குறியீட்டை நட்பு ரீதியில் பயன்படுத்த முடிவு எடுத்தது. அந்தக் குறியீட்டை வடிவமைக்கும் வாய்ப்பு பாலுக்குக் கிடைத்தது.
ஸ்மைலியை வடிவமைக்க பால் எடுத்துக் கொண்டதோ 10 நிமிடங்கள். அதற்காக அவர் பெற்ற சம்பளம் $45. இதற்கான காப்புரிமையைக் கூட அவர் பெறவில்லை. 1970லிருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த அமெரிக்கர்கள் ஸ்மைலியைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஸ்மைலியை மேலும் பிரபலப்படுத்திய பெருமை பெர்னார்ட், முர்ரய் என்ற இரு சகோதரர்களைச் சேரும். அவர்கள் 1970-ல் ஸ்மைலியுடன் "Have a nice day " என இணைத்துக் காப்புரிமையும் பெற்றனர். அதன்பின் ஸ்மைலியை இணைத்து பட்டன்கள், கடிகாரங்கள், வாழ்த்து அட்டைகள், உணவுப் பொருட்கள், தோடுகள், வளையல்கள், சாவிக் கொத்துக்கள், டி-சர்ட்டுகள் என பல பொருட்கள் வெளி வந்தன. ஏறத்தாழ 50 மில்லியன் ஸ்மைலி பட்டன்கள் 1972-ல் மட்டும் வந்துள்ளன.
உங்களின் செல்லிடபேசியின் உறை, தொப்பி, ஆடைகள், ஏன் உங்கள் உடம்பில் கூட ஸ்மைலியை வரைந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். தற்போது கோபம், காத்திருத்தல், அழைக்கச் சொல்லுதல், டாட்டா சொல்ல என உங்கள் அனைத்து எண்ணங்களையும் இதன் மூலம் வெளிப்படுத்தலாம். வரும் காலத்தில் பேசும் ஸ்மைலியும் வர இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள உதவும் ஸ்மைலியைப் பயன்படுத்தி நீங்களும் மகிழுங்கள்.
க்க்க்க்
கேள்விப்பட்டிராத, சுவையான தகவல். நன்றி!