எப்படிக் கேட்பது?

‘என்னது?’

ஒரு வினாடி அதிர்ச்சியே வந்துவிட்டது சிவசைலத்திற்கு.

"ஆமாம்பா..உன் பையன்கிட்டத் தான் கொடுத்தேன்.. கடைத்தெருவில பார்த்தேன்.."

‘சொல்லு’ என்பது போலத் தலையசைத்தார் சிவசைலம்.

"உன்கிட்ட கடன் வாங்கி எத்தனை நாளாச்சு.. நீயும் பொறுத்துக்கிட்டே.. கையில பணம் கொஞ்சம் தேறிச்சு.. சரி.. நம்ம கஷ்டம் நம்மோட. உன்னோட ஐந்நூறு ரூபாயைத் திருப்பிரலாம்னு வந்தேன்."

நண்பர் பேசியதை சிவசைலம் கவனித்தாலும் உள்ளூர பதற்றம் பரவிக் கொண்டிருந்தது.

"எனக்கு வேற ஒரு அர்ஜென்ட் வேலையும் இருந்திச்சு.. சரி.. உன் பையன் தானேன்னு சுகுமாரைப் பார்த்ததும்.. அப்பாக்கிட்டே சேர்த்திருன்னு கொடுத்திட்டேன்… ஏன்.. என்ன ஆச்சு…?"

நண்பன் பணத்தைத் திருப்பி முழுசாக மூன்று நாட்கள் ஆகியிருக்கிறது. இந்த வினாடி வரை சுகுமார் வாயையே திறக்கவில்லை. இப்போது தான் கல்லூரியிலேயே அடியெடுத்து வைத்திருக்கிறான். அதற்குள் இப்படியொரு வழக்கம் கற்றுக் கொண்டானா?

சிவசைலத்தின் இடுங்கிய முகம் நண்பனுக்குக் கவலையைத் தூண்டியது.

"என்னப்பா… பேசாம நிக்கிற…"

"இ..ல்லே… ஒண்ணுமில்லே.."

"அப்பா… உன் பாக்கி … சரியாயிருச்சுதானே…"

"ம்…"

சிவசைலம் ஆயாசமாய் வீட்டுக்குத் திரும்பினார்.

‘இவனை எப்படிக் கேட்பது…’. சட்டென்று கவலை சூழ்ந்து கொண்டது.

சின்ன வயசிலிருந்தே ரொம்ப சென்சிட்டிவ் டைப். ஏதாவது சொல்லி விட்டால் சுருக்கென்று தைத்து விடும்.

ஏழாவதோ… எட்டாவதோ படிக்கும்போது ஒரு நாள்… வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே வந்தான். திரும்பிப் போனால் காணோம். அதற்குள் யார் எடுத்துப் போனார்களோ…
 
இரவு சிவசைலம் வீடு திரும்பியதும் புகார் பட்டியல் வாசிக்கப்பட்டது.

"அப்படி என்னடா விளையாட்டு… செருப்பு தொலையற அளவுக்கு… வாங்கிப் பத்து நாள் கூட ஆகலே… அவனவன் பிளாட்பாரக் கடையில பத்து ரூபா ஸ்லிப்பர் வாங்கித் தரான். நான் அம்பது ரூபா போட்டு கடையில வாங்கினேன்…"

அவரையும் மீறி அலுப்பு வெளிப்பட்டது வார்த்தைகளில்.

சுகுமார் எதுவும் பேசவில்லை. உதடுகளை இறுகக் கடித்துக் கொண்டு நின்றான்.

மறுநாள் காலையில் தான் அவன் எடுத்த முடிவு தெரிய வந்தது.

"என்னங்க… இந்த ஒரு மாசம் பூரா ரெண்டு வேளை பாலை நிறுத்தறானாம். குடிக்க மாட்டானாம்."

"எ..ன்னடா?"

"ஆமாம்… என்னால தானே அம்பது ரூபா நஷ்டம். பால் குடிக்கலேன்னா வாங்கற செலவு மிச்சம்தானே."

"இப்ப… என்ன சொல்றே. உன்னை எதுவுமே கேட்கக் கூடாதா?"

ஊஹும். அழுத்தக்காரன். இதுவே தப்பே செய்யாமல் ஒரு தடவை அவனைப் புகார் சொன்னவர்களை நம்பி விசாரிக்கப் போக, ஒரு வாரம் பேசவே இல்லை. வளர்ந்தும் அந்தப் பிடிவாதம் மாறவில்லை. இப்போது என்ன செய்யலாம்? ஒன்றா… இரண்டா… ஐந்நூறு ரூபாய்.

பாவி… இவன் எதற்கு சுகுமாரிடம் கொடுக்கிறான்? இது கணக்கில் வராமல், சுகுணாவிற்கும் சொல்லாமல் செலவழித்திருக்கலாம், கெடுத்தானே.

சுகுணா எதிரில் வந்து நின்றாள்.

"என்ன… என்னவோ போல உட்கார்ந்து இருக்கீங்க?"

"ம்"

சொல்ல வேண்டியது தான். வேறு வழி அப்புறம் முதலுக்கே மோசம் என்றாகி விடும். ஒரு வேளை சுகுமாரிடம் இவள் கேட்கிற விதத்தில் கேட்டு வாங்கி விடலாம். வயசுப் பையனிடம் எதற்கு இத்தனை பணம்?

சொன்னார். "பாரேன். இவ்வளவு பணத்தை வாங்கிவிட்டு அமுக்கமா இருக்கான். இவனை என்ன செய்யறது?"

சுகுணாவிடம் எந்தப் பதற்றமும் இல்லை.

"ப்ச். இவ்வளவு தானா?"

"என்ன நீ கொஞ்சம் கூடப் பதறாமே!"

"எல்லாம் என்கிட்டத் தான் கொடுத்தான். அப்பாகிட்டே சொல்லிடறேன்னான். வேணாம். அப்புறம் நான் சொல்லிக்கிறேன்னு தடுத்தேன். வெட்டியா செலவழியும் உங்ககிட்டே போனா. ஆச்சு… வருஷாந்திர சாமான் வாங்க உதவுமேன்னு…"

இப்படியொரு கோணம் இருக்குமென்று ஏன் நான் எதிர்பார்க்கவில்லை?

About The Author