கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்க ஆரம்பித்தன. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்!
இப்படி மொட்டையாய் சொன்னால் யாருக்குத்தான் புரியும்? அன்று நடந்த சம்பவங்கள் திடுக்கிடும் திருப்பங்களுடன் இருந்தன.
உள்ளே அலறல் கேட்டதும் ஓடினோம்.
அம்மா என்னிடம் சொன்னதற்கு நேர்மாறாக கணேசனை சம்மதிக்க வைக்க வழி இல்லாமல் பண்ணி விட்டான்.
"எனக்கு இந்தப் பொண்ணு வேணாம்."
பெண்ணின் அப்பாவுக்கு ஷுகர், பிபி எல்லாம் உண்டு என்று யாரோ உரக்கக் கிசுகிசுத்தார்கள்.
"வேணாம்.. அமைதியா இரு.." என்று திரும்பத் திரும்ப சொல்லி அவர் பிபியை அதிகப் படுத்தினார்கள். சொம்புத் தண்ணீருடன் ஒருவர் வந்து நின்றார், மயக்கம் போட்டால் அடித்து எழுப்புவதற்காக.
இந்த முஸ்தீபுகளைப் பார்த்து கணேசன் அம்மா மயக்கம் போட, சொம்பை அவர் மேல் ஊற்றினோம். "நான் இந்தப் பொண்ணுன்னு நினைச்சிட்டேன். இப்ப என்னால வேற ஒருத்திக்கு சம்மதம் சொல்ல முடியாது" என்று கீறல் விழுந்த ரிகார்டாய் கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.
பார்க்க வந்த பெண் முகத்தில் அசாதாரண நிம்மதி தெரிந்தது. ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று குல தெய்வ பிரார்த்தனை மனசுக்குள் ஓடுவது தொண்டை நரம்பு அசைவில் புலப்பட்டது.
கணேசன் அப்பா பெண்ணின் அப்பா காலைப் பிடிக்கிற பாவனையில் நின்று மன்னிப்பு கேட்டார். "ஊர் முழுக்க சொல்லிட்டோம். இன்னிக்கு நிச்சயம் ஆவுதுன்னு.. இப்ப எந்த மூஞ்சியை வச்சுகிட்டு நான் வெளியே போவேன்" பெண்ணின் அப்பா சகிக்காத மூஞ்சியுடன் கேட்டார்.
பெண்ணின் மாமா தோற்றத்தில் ரிடையர்ட் போலீஸ் மாதிரி பலசாலியாய், பெரிய தொப்பையாய் ஒருவர் ஹூங்காரம் செய்தார். டிபன் காப்பி உண்டா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவர் செய்த உறுமல் கணேசன் அப்பாவை மிரட்டிவிட்டது.
"தம்பி கொஞ்சம் வெளியே வா" என்றார் என்னிடம்.
நான் எதற்கு என்று புரியாமல் வெளியே போனேன்.
"தம்பி.. இந்த நிமிஷம் எங்க மானம் உன் கையில இருக்குப்பா.."
"வந்து.. நான்"
"இந்தப் பெண்ணை நீ கட்டிக்க சம்மதம் சொல்லு.. நான் வந்து உங்கப்பா, அம்மா கால்ல விழுந்து பர்மிஷன் வாங்கறேன்.."
அடப் பாவி மனுஷா.. நானா.. என்று மிரள்வதற்குள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே என்று மனப் பிசாசு சொன்னது.
"நான்.. நான்.." என்றேன் குழறலாக.
"நீ வா.. மத்ததை நான் பார்த்துக்கறேன்"
அடுத்த நிமிடம் சீன் மாறி விட்டது. கணேசன் ஓரம் தள்ளப்பட்டு நான் நடுநாயகமானேன். கேசரி பஜ்ஜி சுடச் சுட என் முன் வைக்கப் பட்டது.
"அவளை வரச் சொல்லுப்பா"
என் கனவுக் கன்னி வந்தாள்.
"அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க" என்றேன் பெரிய மனிதத் தோரணையுடன்.
காப்பி டம்ளரைத் தரும் போது விரலால் கிள்ளி விட்டுப் போனாள். ஒரு சிறுமி ஓடி வந்து ரகசியமாய் வீட்டு ஃபோன் நம்பரை துண்டு சீட்டில் எழுதித் தந்துவிட்டுப் போனது.
"அப்புறம் என்ன.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சே.. "
யாரோ உரக்கச் சிரித்தார்கள். பெண்ணின் அப்பா (ஷுகர்?) கேசரியை இன்னொரு தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். பஜ்ஜி பொன்முறுவலாய் ஒரு ஃபுல் பிளேட்டைக் காலி செய்து சர்க்கரை தூக்கலாய் ஸ்ட்ராங்க் காப்பியும் இறங்கியது.
"புவனி கல்யாணம் முடிஞ்சாச்சு. இனிமே எனக்கு என்ன ஆனாலும் சரி" என்று கத்தினார் மகிழ்ச்சியாய். கணேசன் தான் பாவம். அவன் ரசித்த பெண்ணை மறுபடி பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தான். எனக்கு அவன் பக்கம் திரும்ப நேரமில்லை. புவனி.. புவனேஸ்வரி.. என்று ஜபித்தபடி குத்து மதிப்பாய் அவள் வரக் கூடிய திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கிளம்புமுன் ஒரு தடவை தரிசனம் கிடைத்தது. காரில் வரும் போதுதான் பயம் பீரிட்டுக் கிளம்பியது. என் வீட்டில் என்னை வெட்டிப் போடப் போகிறார்கள்.
‘அந்தாள்தான் சொன்னா உனக்கு அறிவு எங்கே போச்சு..’ சரமாரியாய் சாடப் போகிறார்கள். பயந்து கொண்டே போனால் ஊரில் எதிர்பாராத திருப்பம்.
‘நம்ம வீட்டுக்கு ஒருத்தி வர வேளை.. உந்தங்கச்சிக்கு உடனே முடிஞ்சிருமாம்.. பூசாரி சொன்னார்டா’ வாழ்க பூசாரி.
"என்னால எதுவும் பேச முடியலம்மா"
"போவுதுரா.. எப்படியோ நல்லது நடந்தா சரி"
அப்புறம் நான் இல்லாத நேரம் அப்பாவிடம் சொன்னார்களாம்.
‘இவன் சரியான திருடன்.. லேட் ஆவும்னு இப்படி ஏற்பாடு செஞ்சிருப்பான்.. உங்க புள்ளை அப்படியே குணத்துல உங்க சில்மிஷத்தோட பொறந்திருக்கான்’
அப்பா பாவம் எதுவும் பேச முடியாமல் எனக்காக வாங்கிக் கட்டிக் கொண்டாராம். இங்கே ஒரு பக்கம் என் கல்யாண வேலைகள் நடக்க, இன்னொரு பக்கம் கணேசனின் போராட்டம்
(தொடரும்)