பட்டுத் துணியில் தூளி கட்டி,
தங்கக் காப்பு, வெள்ளிக் காப்புடன் வேப்பங் காப்புமிட்டு,
ஊரையழைத்து, உபசரித்து,
உள்ள சடங்குகள், சம்பிரதாயங்கள் அத்தனையும் செய்து,
மாமன் தந்த புதுச்சட்டையிட்டு,
மடியிலே கிடத்தி,
பாலாடையில் தேன் புகட்டி,
என் பாட்டன் எனக்கிட்ட
அந்த நீளமான பெயரை,
விமர்சிக்காத ஆளில்லையென்ற காரணத்தாலும்,
விண்ணப்பப் பத்திரங்களிலும், பதிவேட்டிலும்,
பெயருக்கானக் கட்டங்களை நிரப்பிய பின்னும்,
மீதமிருக்கும் என் பெயரின் மிச்ச சொச்சங்களை
என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்ததாலும்,
ஏற்பட்ட எரிச்சலில் எடுத்த முடிவுதான்,
என் முழு நீளப் பெயரின் மூன்றில் இரண்டு பங்கை,
முழுவதுமாய்க் கத்தரித்து,
அரசாங்கப் பதிவேட்டில் அழகாய் சுருக்கியது!
என் பெயரையெழுதுவதற்கான கால அவகாசம்
மூன்றில் ஒன்றாய்க் குறைந்தாலும்,
எழுதும் ஒவ்வொரு முறையும்,
நானிழந்ததோ, எனையிழந்ததோ, ஏதோவொன்று
ஏக்கத்துடன் கடந்து போகிறது, என்னை!
எதற்கித்தனை புலம்பல்?
இப்போது எல்லாம் மிகச் சரியாகத்தானே உள்ளதென்று
என்னை நானே தேற்றியவேளை,
எதிர்ப்பட்ட என் பள்ளித்தோழியொருத்தி,
சாலையில் நின்றவண்ணம்,
உரக்க என் முழுப் பெயரை உச்சரித்து அழைக்க,
திடுக்கிட்டுத் திரும்பிய எனக்கு,
அவளோடும், அந்த என் பெயரோடும்
நான் வாழ்ந்த பள்ளி வாழ்க்கை நினைவிலாட,
என் பால்ய கால அடையாளத்தை இழந்த உண்மை
மெல்லப் பிடிபட,
வெட்டுப்பட்ட என் மீதத்தையெண்ணி
வேதனையுடன் தவிக்கிறது மனது!