என் காதலர் தினம்…

யார் அழைத்தாலும்
சீக்கிரம் துண்டித்து
"செல் போனை"
பார்த்திருந்தேன்
அவள் அழைப்புக்காக…

ஏதோ கிடைக்காதது போல
ஏக்கமாய் கண்களிலிருந்து
சொட்டிய கண்ணீர்
சன்னல் கம்பிகளில்
காதல் கறை பூசி
சென்றது..

அர்த்தமற்ற கோபத்தின்
அடியில் மாட்டிக்கொண்டேன்
ஏனோ சட்டென்று
எதுவும் பிடிக்கவில்லை..

பருவமடைந்தவள்
மஞ்சள் குளித்து
காத்திருந்தது போல் தெரு..
ரசிக்காமல் நடந்தேன்..

"எத்தனை முறை சொன்னாலும்
இங்க தான் வந்து நிக்கிறான்
டேய் அறிவில்ல.. போடா.. போ"

என்னைத்தானோ என்று
திரும்பிப் பார்த்தேன்..
கிழிந்த அரை நிஜார்
அதை இடுப்போடு இறுக்கி
மானம் காக்கும்
நட்பாய் நாடா..
தெருக்குப்பைகள் எல்லாம்
அவன் உடம்பிலிருந்து
உதிர்ந்தது போலும்..
கடையின் ஓரமாய்
ஒதுங்கி ஏதோ கேட்டு
நீண்ட நேரம் நின்றவனின்
கால்களில் வலி தெரிந்தது..

எலும்புகளின் எண்ணிக்கையை
உறுதி செய்தது
சட்டை இல்லாத
அவன் உடம்பு

அவன் வேண்டுவது
காதலும் இல்லை
அன்பும் இல்லை
வேளை உணவு..
ஏக்கத்தின் பரிமாணம்..

காதல் வேண்டுமெனில்
அதிர்ஷ்டமாய் இருக்கட்டும்
உணவு அடிப்படைதானே?
”எல்லோர்க்கும் உணவு” என்ற நாள்
என்று வரும்?

உலகின் மறுப்பக்கம் –
தெளிவாக்கியது
வீடு திரும்பினேன்
கோபம் போய்,
விடைகள் வேண்டிய
வினாக்களுடன் ..

About The Author

4 Comments

  1. priya

    உங்கல் கவிதை அருமை நேன்கல் இன்னும் நேரய எழுத வென்டும்.

Comments are closed.