என்.எஸ்.கே என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் திரு. என்.எஸ்.கிருஷ்ணனை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரைப் பற்றி, அவர் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றி அறிந்து கொள்ள விரும்பி சென்னையில் வசிக்கும் அவரது பெண்கள் திருமதி வடிவா வரதராஜனையும், திருமதி பத்மினி அவர்களையும் சந்தித்தோம். பெருமகிழ்ச்சியோடு தங்களின் மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
இனி அவர்களுடன்….
ஒரு தந்தையாக
உங்கள் அப்பா ஒரு பெரிய நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தமிழக மக்கள் மனதில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் ஒரு தந்தையாக உங்கள் பார்வையில் எப்படி இருந்தார்?
அப்பா பெரிய நடிகர் என்பதனால் எங்கள் வீட்டில எப்பவும் கூட்டம் இருக்கும். எங்களுக்கு அப்பாங்கறதை விட ஒரு ஹீரோவாகத்தான் தெரிவார். பெரிய பெரிய தலைவர்கள் பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர், முத்தையச் செட்டியார், கருணாநிதின்னு எல்லாப் பெரிய தலைவர்களும் வருவாங்க. நடிகர்கள் வருவாங்க. அண்ணா அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஒரு திருவிழா போலத்தான் வீடே இருக்கும். அதைத் தவிர நாடகங்கள், பட ஷூட்டிங் என்று வெளியிடங்களுக்குப் பலநாட்கள் சென்று விடுவார். அதனால் எங்க அப்பா ஆசைப்பட்டாலும் கூட எங்களுடன் செலவழிக்க நேரம் கிடைக்காது. ஆனாலும் கொஞ்ச நேரமே கிடைச்சாலும் எங்ககிட்ட ரொம்ப ஆசையாப் பேசுவார், விளையாடுவார், சேர்ந்து சாப்பிடுவார். குழந்தைகள்னா அவருக்கு ரொம்பப் பிரியம்.
குடும்பம் பற்றி….
அப்பாவுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி நாகம்மா. அவங்களுக்குப் பிறந்த குழந்தைகள்ல ஒரு பெண் மட்டும்தான் இப்போது இருக்கிறார். அடுத்து டி.ஏ.மதுரம். அவங்களுக்கு குழந்தை கிடையாது. ஒரே குழந்தை பிறந்து இறந்துடுச்சு. பின்னால் அவங்க தங்கையைக் கல்யாணம் பண்ணிட்டார். அவங்க குழந்தைகள்தான் நாங்க. மூணு சகோதரிகளும், நான்கு சகோதரர்களும். ஒருத்தி அமெரிக்காவில் இருக்கிறாள். மூணு சகோதரர்கள் இருக்காங்க, ஒருத்தர் இறந்துட்டார்.
மதுரம் எங்க பெரியம்மா. ஆனாலும் அவங்க எங்களைத்தான் பெத்த பெண்களாகத்தான் நினைப்பாங்க. நாங்க அவங்களை எங்க அம்மாவாத்தான் பார்த்தோம். மதுரம்மா, அப்பா தன்னைக் கல்யாணம் பண்ணிக்கறப்போ தனக்கு நாகம்மான்னு மனைவி இருக்கறதைச் சொல்லாமலே கல்யாணம் பண்ணிட்டார்னு சொல்லுவாங்க.
என்.எஸ்.கே நினைவுகள்
எம்.கே.தியாகராஜ பாகவதர், சிவாஜி, எம்.ஜிஆர். ஜெமினின்னு எல்லோரோடும் நடிச்சுருக்கார். ஆரம்பத்தில நாடக நடிகராத்தான் இருந்தார். காந்தி பற்றி வில்லுப் பாட்டு பாடியிருக்கார்.
அவருக்கு ஜாதி வித்தியாசமே கிடையாது. மனோண்மணிங்கற படத்தில பிராமணனா வருவார். மனைவியா நடிக்கும் டி.ஏ.மதுரத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புல்லுக்கட்டுக்காரி ஒருத்தியை வீட்டுக்கு வரச் சொல்லுவார். அவரது பையன் ‘பசிக்குதுப்பா’ ன்னு சொல்றப்போ, அவனை வெளியே அனுப்புவதற்காக ஓரணா குடுத்து ஹோட்டலுக்குப் போய் சாப்பிடச் சொல்லுவார். அப்போது "டேய்! பிராமணா ஓட்டலா பாத்துச் சாப்பிடுடா"ன்னு சொல்லுவார். அந்தக் காலத்தில் அப்படிப் பேசுவதற்குத் தைரியம் வேண்டும். அவர் மனசுல பட்டதை தைரியமா சொல்லுவார். தி.மு.க.வுக்காகப் பிரச்சாரம் செய்வார். தின. முனா. கனா (திருக்குறள் முன்னேற்றக் கழகம்)னு பாட்டுப் பாடுவார்.
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்
எங்கள் வீட்டில் நடந்த திருட்டைப் பற்றிச் சொல்கிறேன். ஒன்று அப்பா இருந்தபோது நடந்தது. இன்னொன்று அப்பா இறந்த பிறகு.
அப்பா இருந்தபோது ஒரு நாள் திருடன் உள்ளே வந்து மாட்டியிருக்கும் அப்பா சட்டை பாக்கெட்டில் கைவிட்டிருக்கிறான். அதைப் பார்த்துவிட்ட அப்பா அவன் முதுகில் தட்டினார். திருடன் திடுக்கிட்டு அவரிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பசியால்தான் திருட வந்ததாகச் சொன்னான். உடனே அப்பா அவனை இருக்கச் சொல்லிவிட்டு மதுரம் அம்மாவை மாடியிலிருந்து கீழே கூப்பிட்டு தனது “உறவுக்காரர் ஊரிலிருந்து வந்திருக்கிறார். சாப்பாடு போடு” என்று சொல்லி அவனைச் சாப்பிட வைத்தார். பின்னர் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினார். அடுத்தநாள் மதுரம்மாவிடம் ‘வந்தவன் திருடன்’ என்று சொன்னபோது அவங்க அலற “அதனால்தான் நேத்திக்கு இதை உன்கிட்ட சொல்லவில்லை. சொன்னா ஊரைக் கூட்டிப் போலிசை வரவழைத்திருப்பாய்” என்றார்.
அவர் இறந்தபிறகு ஒருதரம் எங்கள் வீட்டுக்குத் திருட வந்தவன் திருடியதை எடுத்துக் கொண்டு செல்லும்போது அப்பா போட்டோவைப் பார்த்திருக்கிறான். அப்படியே திருடியதை எல்லாம் போட்டுவிட்டு ‘இந்த வீட்டில் திருடியதற்கு கடவுள் கூட மன்னிக்கமாட்டார்’ என்று எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான்.
யார் வீட்டுக்கு வந்து கேட்டாலும் இல்லைனு சொல்ல மாட்டார். வருகிறவன் ஏமாற்றுபவனாக இருந்தாலும் ‘அவனுக்கு ஏதோ கஷ்டம் – அதனாலதானே கேட்கிறான்’ என்பார்.
ழைக்கூத்தாடிகள் தெருவில் வந்து வித்தை காட்டுவார்கள். அப்போது யார் தன்னைப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாசலில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு அவர்கள் ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பார். பிறகு அவர்கள் எல்லாரையும் வீட்டிற்குள் அழைத்து சாப்பிடச் சொல்லி பணமும் கொடுத்து அனுப்புவார்.
வீட்டிற்குப் பின்னால் நாடகக் கம்பெனி ஆட்கள் தினமும் சாப்பிடுவார்கள். ஒரு வெளியூர் ஆள் தினமும் அங்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவான். ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் மானேஜரிடம், "சார்! இது என்ன சத்திரம்? இப்படி சாப்பாடு போடறாங்களே.." என்று மானேஜரிடம் கேட்டான். அப்படிப்பட்ட சத்திரமாக இருந்தது வீடு.
பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது கூட பழங்களையெல்லாம் ஜூஸாகப் பிழியச் சொல்லி தர்ம வைத்தியம் பார்த்துக் கொள்ளுபவர்களுக்குக் கொடுக்கச் சொல்வார். கூடை கூடையாகப் பழங்கள் வரும். அதையெல்லாம் அங்கே உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்து விடுவார்.
மாதங்கின்னு ஒரு டாக்டர். அவங்கதான் இவருக்கு ஏற்றும் டிரிப்ஸ் பாட்டிலை அவ்வப்போது மாற்றுவாங்க. ஒருநாள் அவரைக் கூப்பிட்டு அப்பா சொன்னாராம். "இந்த டிரிப்சுக்கு பதிலா இதுல ஒரு பாட்டில் விஸ்கியைப் போட்டு ஏத்தினா நல்லா இருக்குமே" என்று. அந்த டாக்டர் எங்ககிட்ட சொல்லுவாங்க. "இந்த மோசமான நிலையில கூட அவர் எவ்வளவு சிரிப்பாப் பேசறார் பாருங்க"
ஆஸ்பத்திரியில் இருக்கும்போது தினமும் வதந்தி கிளம்பும், அப்பா இறந்துட்டார்னு. உடனே, மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமா ஆஸ்பத்திரிக்கு இவரைப் பார்க்க ஓடிவருவாங்க, ‘அண்ணா, போயிட்டீங்களா? ‘ என்று அலறிக்கொண்டு. அப்போ அப்பா மதுரம் அம்மாகிட்ட சொல்லுவாங்களாம், "இவங்களுக்காகவானும் நான் சீக்கிரம் செத்துப்போனால் பரவாயில்லை போலிருக்கிறது” என்று.
எப்போதும் சிரித்தபடி ஜாலியாகத்தான் இருப்பார்
சிறை வாசம்
அப்பாவின் ஜெயில் வாசம்போது நீங்கள் போய் அவரைச் சந்திருத்திருக்கிறீர்களா?
அனுமதி வாங்கிப் போய்ப் பார்த்திருக்கிறேன். ஜெயில்லயும் கவலைப்படாமல் சந்தோஷமாகத்தான் இருந்தார். ஜெயில்ல பிரிண்டிங் பகுதில வேலை பார்த்தார். நான் போனவுடனே என்னைத் தூக்கிட்டு ஜெயில் பூரா சுத்திக் காண்பிப்பார். அப்புறம் சென்ட்ரல் ஜெயிலைப் பார்க்கறப்போ எல்லாம் எங்க அப்பா அங்க இருந்த ஞாபகம் வரும். ஜெயிலை இடிச்சப்போகூட நான் ரொம்ப வருத்தப்பட்டேன். செய்யாத குற்றத்திற்காக ஜெயில்ல இருக்க வேண்டிய நிலைமை
ஜெயிலில் எம்.கே.டி.பாகவதரை சந்தித்திருக்கிறோம். அவர் எங்ககிட்ட நல்லாப் பழகுவார். ஆனால் அவர்தான் ரொம்பக் கவலையாய் இருந்தார். கடைசி காலத்தில கண் தெரியாம ரொம்பக் கஷ்டப்பட்டார். அப்போ எங்க வீட்டுக்கெல்லாம் வருவார்.
ஜெயிலிலிருந்து வந்த பிறகுதான் அப்பா ‘பைத்தியக்காரன்’ படம் எடுத்தார். பத்து வருஷம் நல்லா இருந்தார். நிறையப் படங்களில் நடிச்சார்.
(மீதி அடுத்த இதழில்)
“
இனிய நினைவுகள்
பல சிரிப்பு நடிகர்களின் வாழ்க்கையின் பின்னால் பற்பல சுவையான சோகமான சம்பவங்களுக்கு என்.ச்.கேவும் நடிகர் நாகேஷும் உதாரணம்.