நடனக் கலைஞர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சினிஷ் ஸ்ரீதரன் இயக்கியிருக்கிறார். தரண் குமார் இசையில் பாடல்கள் எப்படி இருக்கின்றன எனப் பார்க்கலாம் வாருங்கள்!
தொடத் தொட
பியானோவின் மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலை ஹரிசரண், ரனைனா ரெட்டி இணைந்து பாடியிருக்கிறார்கள். காதலனும் காதலியும், ஒருவர் அடுத்தவரது இருப்பைச் சொல்லும் இந்தப் பாடலுக்குக் கூடுதல் உயிர்ப்பைச் சேர்க்கிறது இடையில் வரும் வயலின் இசை.
பாடலிலிருந்து ஒரு துளி:
என் மேலே ஆகாயம் நீயே, பறவை ஆகிறேன்
என் கீழே பூலோகம் நீயே, அன்பே! அன்பே!
தித்திக்கும் சந்தோஷம் நீயே! மனதில் தொலையுதே!
நெஞ்சுக்குள் சங்கீதம் நீயே நித்தம் நித்தம்!
என்றென்றும்
சற்றே டெக்னோ சாயலில் ஒலிக்கும் இதை நிகில் மேத்யூ பாடியிருக்கிறார். காதலியைப் பற்றி விவரிப்பதுதான் மொத்தப் பாடலும். அவ்வப்போது ஆங்கிலமும் சேர்ந்து கொள்கிறது. டெக்னோ குரல்கள் கூடுதல் குதூகலம்!
பாடலிலிருந்து ஒரு துளி:
கற்பனை உருவம், அற்புத வடிவம்!
சொல்வது சிரமம், நியாயம்தானா?
இப்படி ஒருத்தி இருந்ததும் இல்லை
அழகிய தொல்லை ஒரு எல்லை இல்லை!
கண்ணீரே
காதலின் பிரிவு சொல்லும் பாடல். பிரிவு பற்றிய பாடல் என்றாலே இசை அமைப்பாளர்தான் பாடவேண்டும் எனும் பன்னெடுங்காலத் தமிழ்த் திரைமரபுக்கேற்பத் தரணே இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். உருகித்தான் பாடியிருக்கிறார் மனிதர். சிற்சில இடங்களில் குரல் இவரது முந்தைய படத்தை ஞாபகப்படுத்துகிறது. மற்றபடி, பாடல் தன் பக்கம் நம்மை இழுக்கத் தவறவில்லை.
பாடலிலிருந்து ஒரு துளி:
ஏதோ என் தீதோ! நானோ இனி வீணோ!
ரத்தமின்றிக் கொல்லாதே! சத்தமின்றிச் செல்லாதே!
தாங்காதே, நீ நீங்காதே!
கண்ணே! கண்ணே!
மென் தாலாட்டுப் பாடலாகக் காற்றில் சிறகடிக்கும் இதைப் பாடியிருக்கிறார் ரனைனா ரெட்டி. இசையின் ஆதிக்கம் அதிகம் இல்லை, குரல்தான் மொத்தப் பாடலிலும் மேலோங்கி நிற்கிறது. பின் பாதியில் வரும் ஹம்மிங் கவனம் ஈர்க்கிறது.
மொத்த ஆல்பத்திற்கும் வரிகள் வரைந்திருக்கும் நிரஞ்சன் பாரதி நன்றாக எழுதியிருக்கிறார்!
என்றென்றும் – சுகம் என்றென்றும்!