என்கவுன்ட்டர்

”நான் பொறுக்கியும் இல்லை, போலீசும் இல்லை. கடவுள்!” என்ற பஞ்ச் டயலாக்கோடு வெளியில் வந்தான் வினோத்.

அசிஸ்டன்ட் கமிஷனர் உத்யோகம். பதவியேற்ற இரண்டே வருடத்தில் தமிழகம் முழுக்க ரவுடிகளை ஓட ஓட விரட்டினான். டிபார்ட்மென்ட்டில் சிம்ம சொப்பனமாக இருந்தான்.

”நல்லாக் கேட்டுக்கங்க. கேங்ஸ்டர் அலெக்ஸ் நாளைக்கு சிட்டி சென்டர் பக்கத்துல காலைல பதினோரு மணிக்கு வர்றான். நாம சுத்தி வளைச்சி என்கவுன்ட்டர் பண்றோம்” என்றான். வரைபடம் வைத்து விவரித்தான்.

மறுபடியும் ”நான் பொறுக்கியும் இல்லை, போலீசும் இல்லை. கடவுள்!” என்று உறுமினான்.

மறுநாள்.

என்கவுன்ட்டருக்காக உற்சாகமாக வந்திருந்தான் வினோத். தொலைவில் வெளிநாட்டு கேரவனில் கேங்க்ஸ்டர் அலெக்ஸ் வந்து கொண்டிருக்க.. அலர்ட் ஆனான். அலெக்ஸ் வேனிலிருந்து இறங்க, ”ஷூட்” என்றான் வினோத்.

துப்பாக்கித் தோட்டாக்கள் உடலைத் துளைத்தெடுக்க இரத்த வழியலுடன் செத்துப் போனான் வினோத்.

நாலைந்து காவலர்கள் கை கொடுத்துக் கொண்டனர். வயர்லஸை எடுத்து தொடர்பு கொண்டனர். ”ஆமா சார்! நீங்க சொன்ன மாதிரியே நம்ம ஏசியையே சுட்டுட்டோம். ரொம்ப ஆடினான் சார். கடவுளாம்! அதான் கடவுளை மேலே அனுப்பிட்டோம்.”

About The Author

1 Comment

Comments are closed.