எந்தத் தேதி?

வேர்வையின்
மேன்மை நாள் மே நாள்!
மானுட மகத்துவத்துக்கு
வரலாறு
மரியாதை செலுத்தும் நாள்!

பாடுபடுபவன்
பாதங்களை
முத்தமிட்டே நிலமகள்
முறுவலிக்கிறாள்.

உழைப்பவன் முகம் பார்க்கவே
ஒவ்வொரு நாளும்
ஓடோடி வருகிறான் சூரியன்.

அவன்
உருக்கும் வியர்வைத் துளிகளுக்கு
ஆகாயம்
நட்சத்திரங்களில்
கணக்கு வைக்கிறது.

தொழிலாளிகளின் தோள்களைவிட
எந்தக்
கைலாயம் உயர்ந்தது?
எந்தத்
திருப்பதி புனிதமானது?

மடங்களும் தத்துவங்களும்
மண்டைகள் உடைபட
விவாதம் செய்யலாம்!

ஒரு
நெல்மணியை
விளைவிக்க முடியாது!

ஆதீனங்களும் மடங்களும்
சுலோகங்கள் ஓதலாம்!
ஆனால் அவர்களின்
காமக் கிழத்தியர் கவர்ச்சி மாளிகைகள்
மந்திரத்தால் வந்தவையல்ல!

பாட்டாளிகளின்
கனவுகளை நனவுகளைக்
கரைத்து எழுப்பியவை அந்தக்
கட்டடங்கள்!

கச்சேரி செய்தால்
மழை பெய்யுமாம்!
கச்சேரி செய்பவன் மச்சினிமார்கள்
நாட்டியம் ஆடினால்
உடுக்க ஆடைகள் உற்பத்தியாகுமா?

ஆலையில்
இரத்தம் கொட்டும் தோழன்
ஊடும் பாவுமாய்த் தன்
உடலின் நரம்புகளைப் போட்டு
நெய்கிறான்.

ஆனால்
அவன் அம்மணப்பட்டுப் போக
அவன் வாழ்க்கையை
உருவிக் கொண்டவர் உலாப் போகிறார்!

தனது
வைகறைகளை விதைத்துப்
பகல்களை
அறுவடை செய்கிறான் உழவன்.

பசி
பயிரிட்டுக் கொடுக்கும் இருட்டைத் தவிர
அவன் பங்குக்கு
என்ன கிடைக்கிறது?

உழைக்க ஒரு சாதி!
உறிஞ்சிப் பிழைக்க ஒரு சாதி!
இந்தக்
கிழட்டு நீதி
கிழிபடப் போவது எந்தத் தேதி?

About The Author