எது தேசபக்தி?

பூமி மங்கையின்
பூங்கன்னத்தில் முத்தம் போடும்
புலவன் நான்…
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
சொந்தக்காரன்…
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம் இந்த
வெளிச்சத்தின் புதல்வனை
விமர்சிக்கிறது.
என் தமிழ்மேல்
தமிழ் நாட்டின் மேல்
அன்பு வைப்பது என் பிறப்புரிமை.
இந்தியத் திருநாட்டின்மேல்
இதயத்தில் போடும்
பாசப் பதியம் என் சிறப்புரிமை.
புத்தரும் பெரியாரும்
என்
அறிவு நரம்புகளில்!
மகாவீரரும் இராமானுசரும்
என்
இரத்த அணுக்களில்!
என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பே.
உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும் அவன் என்
தோழன்!
அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த்தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.
கொடியை உயர்த்திவிட்டுப்
பாரத தேவியின் பாதச் சிலம்பைத்
திருடுவதுதான் தேச பக்தியா?
அவளை
அடகு வைத்துத்
தங்கள் வீட்டுக்குத்
தங்கச் சாளரம் போடுவதுதான்
தேச பக்தி என்றால் – அந்தத்
தேச பக்தி,
எனக்குத் தேவையில்லை!
கள்ள வாக்குகளால்
ஜனநாயகத்தைக் கற்பழிக்கும்
பதவிக் காமம்தான் தேச பக்தி என்றால்
ஒப்புக் கொள்கிறேன்.. அந்தத்
தேச பக்தியில்லாக் குற்றவாளி நான்!
தேச பக்தியின் முன்னோடிகள்
நரிகளின் மூதாதையர் ஆனது
எப்போது?

(நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

About The Author

3 Comments

  1. kavignar. neerai. athippu

    செம்மொழிச் சிகரம் சிறப்புறு ழ”கரம்
    சிந்தையில் தொடங்கிடும் “அ”கரம்
    எம்மொழிக் கீடாய் புகழினில் உயரம்
    எதுவுமே இல்லை உலகமே நன்றாய் அறியும்.
    கவிஞர். நீரை. அத்திப்பூ செல்: 9444446350”

  2. kavipperoli. neerai athippu

    ஆகா ஆகா கவிதை அனைத்தும் அகத்துள் சென்று இனிக்கிறது – இவை
    பாகா தேனா பைங்கனிச் சாறா பதிலோ அனைத்தும் கணிக்கிறது!
    தோகை மயிலாய் மனமும் ஆட கவிதை மேகம் சூழ்கிறது- அந்த
    தூய நினைவில் என்னை மறந்தேன் இன்ப உணர்வே வாழ்கிறது!
    கவிப்பேரொளி. நீரை.அத்திப்பூ செல்: 9444446350

  3. kavipperoli. neerai . athippu

    கார்மேகம் வந்தென்னைக் கைதொட்டு விளையாட
    காலையிலும் மாலையிலும் அழைக்கும் – அந்தக்
    காட்சியினைக் கண்டவுடன் களிப்பாகி என் சொற்கள்
    கவியெழுத வேண்டுமெனத் துடிக்கும்!

    வான் தேரில் பறவையினம் வலம் வந்து வலம் வந்து
    வாசல்வரை வந்து சிறகடிக்கும் – அதை
    வரவேற்று சிறப்பாக்கி வழியனுப்ப என் வீட்டு
    வாசல் திற்ந்தென்னாளும் இருக்கும்!

    இயற்கையுடன் ஒன்றாகி இன்பமதைக் கண்டால்தான்
    இதயம் கனம் இல்லாமல் சிரிக்கும் – நாம்
    செயற்கையிலே கண்மூடி செயலிழந்து நின்றாலோ
    சிறைக்கதவு அடிக்கடிதான் திறக்கும்!

    கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ செல்: 9444446350

Comments are closed.