நம்பிக்கை ஏற்படுத்தும் தலைப்புடன் தனது முதல் தயாரிப்பைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, தற்போது திரை நடிப்பிலும் கால் பதித்திருக்கும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் தனுஷின் அபிமான இசைஞரான அனிருத் ரவிச்சந்திரன்.
நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண் ஒருத்தியால் தன் வாழ்வில் எல்லாம் மாறிவிட்டதாக ஒருவன் சொல்வதுதான் பாடல். அனிருத் – தனுஷ் இணைந்து பாடியுள்ளனர். வாத்தியங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நல்ல மெல்லிசைப் பாடல்.
"பார்க்காமல் பார்க்காதே பெண்ணே போதும்!
பாரங்கள் தாங்காது பெண்ணே! போதும் பெண்ணே!" – ஒரு பருக்கை.
பூமி என்ன சுத்துதே
தாழ்வு மனப்பான்மையில் உள்ள நாயகனின் குரலாக ஒலிக்கும் பாடல். காதலால்தான் மீண்டதாகவும் பாடல் தொடர்கிறது. தனுஷின் குரல் பாடலுக்குச் சரியாகப் பொருந்துகிறது. வரிகள் கேட்கும்போதே நகைக்க வைக்கின்றன.
"எங்கேயோ போகும் காத்து என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூடப் பொறந்த சாபம் இப்ப தன்னாலயே தீரும்" – இதமான வரிகள்.
உன் பார்வையில்
அனிருத், விவேக் சிவாவின் கூட்டுப் படைப்பு. காதலில் விழுந்த தறுவாய்தான் பாட்டின் பாடுபொருள். ஒன்றரை நிமிடங்களே இடம் பெற்றாலும் ரசிக்க வைக்கும் பாடல். ஆனால், ஹாரிஸின் வெற்றிப் பாடல் ஒன்றை நினைவுபடுத்துவது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
வெளிச்சப் பூவே வா!
ரம்யமான டூயட்! மொஹித் செளஹான் – ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளார்கள். இருவரின் குரலும் நம்மைக் கட்டி போடுகின்றன. கவிஞர் வாலி வழக்கம்போல் அனுபவத்தின் முதிர்ச்சியும் இளமையின் குளிர்ச்சியும் கலக்கிப் பாடலை அலங்கரித்திருக்கிறார்.
"உயிர் தீட்டும் உயிலே வா!
குளிர் நீக்கும் வெயிலே வா!
அழைத்தேன் வா அன்பே!" – அசர வைக்கும் வரிகள்!
லோக்கல் பாய்ஸ்
வேல்முருகன் – தனுஷ் இணைந்து பாடியிருக்கும் ஒரு குத்துப் பாடல். காதலே வேண்டாம் எனக் குத்து தத்துவம் சொல்கிறது. ஆம்! ‘கொலவெறி’ யின் அடுத்த படி போல்தான் தெரிகிறது. நல்லவேளையாக, இதில் தமிழை அந்த அளவு கொலை செய்யவில்லை.
எதிர் நீச்சல்
மூவர் இணைந்து பாடியிருக்கும் கருத்துப் பாடல். தலைப்புக்கு ஏற்ப நம்பிக்கை தூவும் வரிகள். பாடலில் வரும் ஆங்கில வரிகளைத் தவிர்த்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பாடல் இன்னும் பரவலாகப் பேசப்பட்டிருக்கும்.
"நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கைப் பொம்மைகளே!" – எடுத்துக்காட்டு வரிகள்.
"மூன்று" படத்தின் சாயல்கள் தெரிந்தாலும் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. இனி வரும் படங்களிலாவது அனிருத் இந்தச் சாயல்களைத் தவிர்த்தல் நல்லது.
எதிர் நீச்சல் – சீக்கிரமே இலக்கை அடையும்.
“