எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்” அண்ணா கண்ணன் – நேர்முகம் (2)”

தங்களின் படைப்பால் இதுவரை ஏதாவது சர்ச்சை அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

கவிதையைப் பரிசோதனைக்கு உரிய ஒன்றாக நான் பார்த்து வருகிறேன். என் பள்ளி நாள்களில் என் பள்ளி ஆசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் ஏற்பாட்டில் நடந்த கவிதைப் பட்டிமன்றம் ஒன்றுக்கு நடுவராக இருந்தேன். 1995-ல் கின்னஸ் சாதனைக்காகக் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை 48 மணிநேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் சுமார் 30 கவிஞர்கள், ஒருவர் மாற்றி ஒருவர் கவிதை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதில் நானும் கலந்துகொண்டேன்.

கவிதையை வடிவ ரீதியாகப் பல சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளேன். சித்திரக் கவிதைகள் எழுதியது அப்படித்தான். தலைகீழாகப் படித்தால் அதே பாடல் வரும் மாலை மாற்று, உதடு ஒட்டாமல் பாடும் நீரோட்டகம், உதடு ஒட்டிப் பாடும் ஒட்டியம், வரிகள் வளைந்து வளைந்து செல்லும் கோமூத்திரி எனப் பல சித்திரக் கவிகள் படைத்துள்ளேன். பலராலும் அவற்றை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. நானே விளக்கம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. பிறகு, அத்தகைய கவிதைகளைப் படைப்பதில்லை.

பெண் கவிஞர்களின் படைப்புகள் பற்றிய என் பார்வையைக் ‘கவிதாயினி’ என்ற தலைப்பில் அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அப்போது, யோனி, முலை எனப் பாலியல் சொற்களைப் பயன்படுத்திக் கவிதை புனைவது குறித்துக் கடும் விமர்சனம் இருந்தது. ஆனால், அது, படைப்பாளியின் உரிமை. அது, படைப்புக்குத் தேவையாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் என அந்தப் போக்கை நான் ஆதரித்து எழுதினேன். அது குறித்துச் சிலர், குறைப்பட்டுக் கொண்டார்கள்.
இதயம் பேசுகிறது வார இதழில் வயது வந்தவர்களுக்கு மட்டுமான உள்ளடக்கத்தோடு, ஓர் இலவச இணைப்பு அளித்து வந்த நேரம். அதில் நான் சில கவிதைகள் எழுதினேன். ‘இல்லை, ஆனால் இருக்கு!’ என்ற கவிதைக்கு அமோக வரவேற்பு கிட்டியது. அது, கிளாசிக்கலாக இருந்தது என்று சிலர், வெகு காலத்திற்குப் பிறகும் பாராட்டினார்கள். ஆனால், ‘அந்த’ மாதிரி கவிதைகளை எப்படி எழுதலாம்…. எனக் கண்டனங்களும் எழுந்தன.

எழுத்தாளர் மாலனின் திசைகள் மின்னிதழில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் எப்படி இருக்கும்? என்ற கருவில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்ததோடு சாதகமாகவும் பாதகமாகவும் சில கருத்துகளை வைத்தேன். ‘அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்’ என்று முடித்திருந்தேன். கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆயினும் சிலர், நான், எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததற்கு வருந்தினார்கள். அந்தக் கட்டுரையில் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெறும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படியே தமிழ், செம்மொழி ஆகிவிட்டது.

தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழகத்தில் ஆங்கிலத் தாக்கம் அதிகம் என்பது ஊரறிந்த உண்மை. தாங்கள் கலப்புத் தமிழில் பேசுவதோடு மட்டுமின்றி, யாரேனும் நல்ல தமிழில் பேசினால், அவரைக் கேலி செய்து, பிழைக்கத் தெரியாத ஆள் என முத்திரை குத்தும் குணம் பலரிடமும் உள்ளது. இது, இரட்டைக் குற்றம். மிகவும் போலித்தனமான ஒரு வாழ்வை இங்கே பலரும் வாழ்கிறார்கள். ஆங்கிலத்திலோ, தமிழிலோ தனித்துப் பேசும் வல்லமை இல்லாமல், இரண்டையும் கலந்து பேசித் திரிகிறார்கள். இது, தமிழனின் மொழியாற்றல் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றைய சிறுவர்களிடம் பெற்றோர் –
ஆசிரியர் – ஊடகங்கள் – சமூகம் என ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறார்கள். இது, அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழுக்குப் பெரும் இழப்பை அளிக்கும். இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியிருப்பதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்கள் பிரபலமாகும் போது ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகிவிடுகிற வாய்ப்புகள் ஏற்படுகின்றனவே? இன்றைய சூழலில் அண்ணாகண்ணன் எப்படி?

அரசியல் என்பதை நேரிய நிர்வாகம், சீரிய வழிநடத்தல், ஒளிவு மறைவற்ற மக்களாட்சி என உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் நான் காண்கிறேன். அத்தகைய அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் போலித்தனம், இலஞ்சம், ஊழல், ஊதாரித்தனம், ஏமாற்றுதல், சுரண்டல், இரட்டை நாக்கையும் மிஞ்சி, 20 நாக்குகளுடன் பேசுதல், அதிகார துஷ்பிரயோகம், பாரபட்ச அணுகுமுறை, தீர்க்க தரிசனமற்ற திட்டங்கள், மக்களை மழுங்கடித்து, சாதி – மத – இன உணர்வுகளைத் தூண்டி வாக்கு வேட்டை ஆடுவது என எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலோர் உலவுகிறார்கள். இது குறித்துப் பெரும் கவலையும் துக்கமும் உண்டாகிறது. இதற்கான தீர்வுகள் குறித்துச் சிந்தித்து வருகிறேன். மக்களிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி, நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். ஓரளவுக்கு என்னைத் தற்காத்துக்கொண்ட பின், பொதுநல ஊழியனாகி, இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. என் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதன் மூலம் வெளிப்படையான, விரைவான, சிக்கனமான ஆட்சி நடத்த வாய்ப்பு உண்டு.

தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு வித்திட்டது எது?

தினமணி கதிர் இதழுக்காக, உலக மகளிர் தினத்தை ஒட்டி அந்தப் பேட்டிக் கட்டுரையை எழுதினேன். இல்லத்தரசி, பேராசிரியை, மாணவி, சேரிப் பகுதியில் வசிப்பவர்… எனச் சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள பெண்களைச் சந்தித்து, தமிழ்ப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டு எழுதினேன். அதில் என் கருத்து ஏதுமில்லை. பேட்டி எடுத்துத் தொகுத்து அளித்ததோடு சரி. ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளை ஒன்று திரட்டும்போது, ஒரே கருவின் பல கோணங்கள் நமக்குக் கிடைக்கும்.

இது போல் ஆசிரியர் தினம் ஒன்றின் போது, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7 வகைப் பெண்களையும் சந்தித்து, அவர்களின் ஆசிரியர்களைப் பற்றிக் கருத்துகளைத் திரட்டினேன். பெண்கள் அடிக்கடி ஆடையைச் சரி செய்வது ஏன்? என்று சேலை, சுடிதார், தாவணி, ஜீன்ஸ் – சட்டை அணிந்த பெண்களைச் சந்தித்துக் கேட்டேன். அழகான பெண்கள் ஆபத்தானவர்களா? எனப் பலரிடமும் கேட்டேன். இப்படிப் பலவும் உண்டு. பத்திரிகைகள், பெண்கள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் இது. அதனால் என்னென்ன வகைகளில் அவர்களை உள்ளே கொண்டு வரலாம் என நானும் சிந்திப்பதுண்டு. பத்திரிகைகளின் ஆசிரியர்களும் இன்னின்ன தலைப்பில் இன்னின்னாரைப் பேட்டி எடுக்கலாம் என ஆலோசனை கூறி அனுப்புவதுண்டு.

தாங்கள் எடுத்த எத்தனையோ நேர்காணலில் தங்களை மிகவும் கவர்ந்தது?

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்பதைப் போல் இதுவரை ஆயிரத்திற்கும் மேலான பேட்டிகள் எடுத்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவைகளின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலும் எடுக்கப்படும் பேட்டி, அப்படியே வெளிவருவதில்லை. இடப் பற்றாக்குறை உள்பட பல காரணங்களால் சிறிதளவு மட்டுமே அச்சேறுவது உண்டு. அப்படி வெளிவந்தவற்றுள் சுரதா, அப்துல் ரகுமான், தேனுகா ஆகியோரது செவ்விகள் ஓரளவு நன்றாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் பாலியல் தொழிலாளர்களை ஓரிடத்தில் சந்தித்துப் பேட்டி எடுத்தது, மிக முக்கியமான பதிவு. சென்னையில் உள்ள பிச்சைக்காரர்களைப் பேட்டி எடுத்தேன். சுதந்திர தினம் ஒன்றின் போது, தலைவர்கள் சுதந்திர தினச் செய்தி வெளியிடுவதற்கு மாற்றாக, அடித்தட்டு சேரி மக்களின் சுதந்திர தினச் செய்திகளைக் கேட்டு வெளியிட்டேன்.

பேய்கள் உண்டா, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களில் எப்படி பேய் ஓட்டுகிறார்கள், பேய் பிடித்தவர்கள், அவர்களின் குடும்பத்தார், மருத்துவ ரீதியில் பேய் குறித்து மனநல மருத்துவரின் கருத்தும் மருத்துவமும் எனப் பல்வேறு கோணங்களில் பலரையும் சந்தித்தேன். பேய் ஓட்டும்போது ஓட்டுபவர்கள், ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தார்கள். அவற்றை எல்லாம் பதிவுக் கருவியில் பதிந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஓடவிட்டு அவற்றை எழுத்தில் பதிந்தேன். பேய் ஓட்டச் சிலர் மை ஒன்றைக் கொடுப்பது வழக்கம். அந்த மையில் என்ன உண்டு என்று ரசாயனக் கூடத்தில் கொடுத்துக் கண்டறிய முயன்றேன். பின்னர் பேய்கள் குறித்து மிகப் பெரிய, விரிவான ஒரு கட்டுரை எழுதினேன். பிரதி வைத்துக்கொள்ளாமல் அதை ஒரு பத்திரிகையில் கொடுத்தேன். நான் கொடுத்த நபர், விடுப்பில் சென்று திரும்புவதற்குள் இந்தக் கட்டுரை தொலைந்து போயிற்று. மிகுந்த சிரத்தையுடன் நான் எடுத்து வெளிவராத இந்தப் பேட்டிக் கட்டுரை, மிக முக்கியமானது. அதை இழந்த வருத்தம் இன்னும் எனக்குண்டு.

மிதிவண்டி உதிரி பாகங்களைத் தமிழ்ப்படுத்தியதற்கு வரவேற்பு எப்படி இருந்தது? அதைத் தவிர மொழிபெயர்ப்பில் வேறு ஏதாவது செய்திருக்கிறீர்களா?

2005 தொடக்கத்தில் அப்போது முதல்வராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் ‘சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?’ எனக் கோ.க.மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கேள்வியின் தூண்டுதலால் உடனே எனக்குத் தெரிந்த அளவில் மிதிவண்டி உதிரி பாகங்களைத் தமிழ்ப்படுத்தினேன். என் வலைப்பதிவிலும் வெளியிட்டேன். சிறப்பான முயற்சி எனச் சிலர் பாராட்டினார்கள். பின்னர், அதே போன்று வேறு சிலரும் முயன்றதை அறிந்தேன்.

மகாவம்சம் என்ற சிங்கள வரலாற்று நூலை வில்ஹெம் கெய்கர் என்ற ஜெர்மானியர், ஜெர்மன் மொழிக்குப் பெயர்த்தார். அதை மபெல் ஹேனெஸ் பொடே என்பவர், ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இந்த நூலுக்கு வில்ஹெம் கெய்கர், அருமையான முன்னுரை ஒன்றை வழங்கியிருந்தார். நீண்ட அந்த முன்னுரையை மட்டும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நானும் மறவன்புலவு க.சச்சிதானந்தனும் இணைந்து மொழிபெயர்த்தோம். சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை என்ற தலைப்பில் இந்த நூல், காந்தளம் சார்பாக வெளியானது. துலிகா புத்தக நிறுவனம், சிறுவர்களுக்கான சிறப்பு மிக்க பல நூல்களை வெளியிட்டுள்ளது. அதன் சில நூல்களை மலேசிய – சிங்கப்பூர் நாடுகளில் பதிப்பித்து வெளியிட உமா பதிப்பகம் விரும்பியது. அதற்காக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 12 சிறு நூல்களை மொழிபெயர்த்தேன். விகடன் வெளியிட்டுள்ள பிரிட்டானியா கலைக் களஞ்சியத்தில் சிறு பகுதியை மொழிபெயர்த்து வழங்கியுள்ளேன்.

வலம்புரி ஜான் அவர்களுடனான தங்களின் நாட்கள் எப்படி இருந்தன?

என் கவிதை நூல் ஒன்றுக்கு அணிந்துரை பெறுவது தொடர்பாக அவரைச் சந்தித்தேன். என் கையெழுத்து, ஓரளவு அழகாக இருக்கும். அந்நேரத்தில் அவருக்கு எழுத்து உதவியாளர் ஒருவர் தேவையாய் இருந்தார். என்னிடம் வந்துவிடுங்கள் என அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரிடம் சில மாதங்கள் பணிபுரிந்தேன். அவர் சொல்லச் சொல்ல எழுதினேன். அவருக்கு வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதினேன். அவருடன் கூட்டங்களுக்குச் சென்றேன். அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் ஒரே நேரத்தில் இயங்கிய அவருடன் குறுகிய காலமே இருந்தேன். அதற்குள் அவரின் சில குணங்களையும் செயல்பாடுகளையும் அறிந்தேன். தனிப்பட்ட முறையில் என் இயக்கம் பாதிக்கப்பட்டதால் அவரிடமிருந்து விலகினேன். பின்னர் அவர் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போதும் சென்று பார்த்தேன். இறுதியில் அவர் மரணச் செய்தி கேட்டு, அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். எதுகையும் மோனையும் அடுக்குத் தொடரும் நிறைந்த மொழி விளையாட்டுடன் அவரது படைப்புகளும் பேச்சுகளும் அமைந்திருந்தன. அவற்றுக்குள் சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியது, அவரைத் தனித்துக் காட்டியது. சிறந்த மனிதநேயம் மிக்கவர். எளிய குடும்பத்திலிருந்து வந்து, இந்தச் சமுதாயத்தில் இவ்வளவு பேரைப் பாதிக்கும் சக்தியாக அவர் வளர்ந்தது, ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனையே!

இன்றைய சிறுகதைகள், கவிதைகள், படைப்பாளிகள் பற்றிய தங்களின் எண்ணம்?

என் படிப்பு, குறைவானதே. ஆனாலும் படித்த வரை தமிழ்ப் படைப்புலகம், ஆக்கபூர்வமான பாதையில் செல்வதாகவே கருதுகிறேன். எண்ணிக்கை அளவில் படைப்புகள் பெருகியுள்ளன. பத்திரிகைகள், புத்தகங்களை மட்டுமே நம்பாமல் தொலைக்காட்சித் தொடர்கள், இணைய தளங்கள் என எழுத்தாளர்களுக்குப் புதிய வாசல்கள் திறந்துள்ளன. வெங்கட் சாமிநாதன் போன்ற மூத்த எழுத்தாளர்கள், 70 வயதுக்கு மேல் தமிழ்த் தட்டச்சு கற்று, கணினியில் நேரடியாக எழுதப் பழகிவிட்டார்கள். எழுத்தாளர்கள், கணினி – இணையம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கிவிட்டார்கள். மொழிபெயர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

நூல்களைச் சிறந்த தயாரிப்புத் தரத்துடன் புத்தகமாக்கப் பதிப்பாளர்கள் கிடைக்கிறார்கள். அந்த வகையில் பதிப்புலகில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் நூல்களுக்கு உலகளாவிய சந்தை உருவாகியுள்ளது. இணையம் வழியாகப் புத்தகம் வாங்க முடிகிறது. மிந்நூல்கள், குரல் நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மறைந்த படைப்பாளிகளின் நூல்கள், அதிக அளவில் நாட்டுடைமை ஆகி வருகின்றன. நம்பிக்கை அளிக்கக்கூடிய புதிய படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள். தமிழுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய என்று மட்டுமில்லை, எழுத்தாளர்கள் தங்கள் அளவிலேயே தன்னம்பிக்கை மிக்கவர்களாக மிளிர்கிறார்கள். இந்த நம்பிக்கை, அவர்களின் படைப்புக்கு வலிமை சேர்க்கும் என்று நம்புகிறேன்.

பழைய குற்றச்சாற்றுகள் சில, இன்னும் காலாவதியாகாமல் உள்ளன. படைப்புக்கும் படைப்பாளிக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. மக்களுக்கு மட்டுமில்லை, படைப்பாளிகளுக்கும் வாசிப்பு போதாது, வேற்று மொழிக் கலப்பு கூடியுள்ளது, சாதிய மனோபாவம் மிகுந்துள்ளது. நல்ல எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் வாழ்ந்துவிடும் சூழல் உருவாகவில்லை. ஆயினும் இந்தக் குறைகளைக் களைந்து மேலும் மேம்பாடு அடைய நம்மால் முடியும். நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்!

***

மாலை மயங்குகின்ற வேளைகளில் கையில் தேநீர்க் கோப்பையோடு உணவு விடுதியில் உரையாடிக் கொண்ட உணர்வுகள் என்று சொல்வதைவிட எங்கள் கிராமத்து வீடுகளில், மரத்தடியில், கயிற்றுக் கட்டிலில் கைலியோடு அமர்ந்துகொண்டு, உச்சி வெயிலுக்கு இதமாக, பழைய சோற்றில் இருந்து பக்குவமாய் எடுக்கப்பட்டு, கொஞ்சம் மோர் கலந்து உள்ளன்போடு பரிமாறப்பட்ட நீராகாரத்தைப் பருகிபடியே ஒரு பக்கத்துக் கிராமத்து நண்பனிடம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட உணர்வுகளோடு விடைபெறுகிறோம்.

About The Author

1 Comment

  1. K.V.Pathy

    சிறப்பான நேர்காணல்.
    அண்ணா கண்ணன் மின் அஞ்சல் முகவரி தெரிவிக்கவும்.

Comments are closed.