அந்தப் பையனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். அந்த வயதிலேயே அவனுடைய அருமைத் தந்தையார் இறந்துவிட்டார்!
அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் சிரமப்பட்டுப் படிக்க வைத்தார்.
ஆனால் பாவம், அவன் சிறுவனாக இருக்கும்போதே அவர் இறந்து விட்டார்!
"அப்பா இறந்து விட்டார். இனி, நம் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதுதான். ஏதேனும் ஒரு வேலையில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை" என்று எண்ணினான் அந்தப் பையன். பல இடங்களில் வேலைக்கு முயன்றான்.
இதைப் பார்த்தார். அந்தப் பையனுடைய அண்ணா. அவருடைய மனம் கலங்கியது.
"தம்பிக்கு நல்ல அறிவு இருக்கிறது. நன்றாகப் படிப்பு வருகிறது. அவன் இந்தச் சிறிய வயதிலேயே வேலையில் சேர்ந்தால் படிப்புப் பாழாகிவிடும். எப்படியும் அவனைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்" என்று எண்ணினார்.
ஆனால், அப்போது அவரும் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். எங்கெங்கோ அலைந்தார். கடைசியாகப் பதினைந்து ரூபாயில் ஒரு சிறு உத்தியோகம் அவருக்குக் கிடைத்தது. உடனே, தம்பியை மேல் படிப்புக்கு அனுப்பினார். தமக்குக் கிடைக்கும் பதினைந்து ரூபாயில் தம்பியின் படிப்புக்காக மாதா மாதம் எட்டு ரூபாய் அனுப்பி வைத்தார்.
நமக்கு ஒரு சட்டை தைப்பதென்றாலே எட்டு ரூபாய் போதாது! ஆனால், அவன் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டுவதும் அந்த எட்டு ரூபாயில்தான்! சாப்பாடு சாப்பிடுவதும் அந்த எட்டு ரூபாயில்தான்! சட்டை, வேட்டி வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில்தான்! புத்தகங்கள் வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில்தான்!
தானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தான். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவான். மற்ற வேளைகளிலெல்லாம் பட்டினிதான்!
இரவில் படிப்பதற்கு எண்ணெய் வாங்க முடியாது. ஆகையால், தெரு விளக்கின் அடியிலே உட்கார்ந்து பாடம் படிப்பான். தெரு விளக்கிலே படித்தாலும் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே பி.ஏ பட்டம் பெற்று விட்டான்! தெரு விளக்கில் படிப்பதைப் பற்றிச் சொன்னதும், உங்களுக்கு, சர்.டி.முத்துசாமி ஐயர் ஞாபகம் வருகிறதல்லவா? வரும்; வரும்.
இந்தப் பையனும் பிற்காலத்தில் சாதாரண மனிதனாக இருக்கவில்லை. சிறந்த அறிஞர்; உயர்ந்த தலைவர்; பெரிய இராஜதந்திரி; நல்ல பரோபகாரி என்றெல்லாம் புகழப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலேதான் தெரு விளக்கில் படித்த அந்த ஏழைப் பையன்!
* * *
அன்று கோகலேயின் பள்ளி ஆசிரியர் ஒரு கணக்கைக் கொடுத்து, "பிள்ளைகளே, நாளை வரும்போது இந்தக் கணக்கைப் போட்டுக்கொண்டு வர வேண்டும். சரியாகப் போட்டுக்கொண்டு வர வேண்டும். இல்லையேல் உங்களை நன்றாகத் தண்டிப்பேன், தெரியுமா?" என்று எச்சரித்திருந்தார்.
மறுநாள் மாணவர்கள் எல்லோரும் கணக்கைப் போட்டுக்கொண்டு வந்தார்கள்.ஆனால், அவர்களில் கோகலே ஒருவர்தான் சரியாகப் போட்டுக் கொண்டு வந்திருந்தார். மற்றவர்கள் எல்லோருமே தவறாகப் போட்டிருந்தார்கள்.
உடனே ஆசிரியர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் எல்லோருமே சுத்த மண்டுகள். கோகலே ஒருவன்தான் இந்த வகுப்பிலே கெட்டிக்காரன்" என்று கூறினார்.
இதைக் கேட்டதும் கோகலே ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தாரா? இல்லை. அவரது முகத்தில் ஆனந்தத்தின் அறிகுறியாவது தோன்றியதா? அதுவும் இல்லை. அப்படியானால், அவர் என்னதான் செய்தார்? அழ ஆரம்பித்து விட்டார். தேம்பித் தேம்பி அழுதார். கண்களிலே கண்ணீர் மளமளவென்று பொங்கி வழிந்தது.
–நிகழ்ச்சிகள் தொடரும்…
படம்: நன்றி தமிழ் இணையக் கல்விக்கழகம்
“