"என்னடா! இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?"
வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
என் கண்கள் இன்னும் ஈரமாக, அவன் கைவிரல்கள் முதன் முறையாக என்னைத் தீண்டின அந்த நீர்த்துளிகளைத் துடைக்க! தன் கைகளால் என் இடையைச் சுற்றி வளைத்து, என்னை அவன் பக்கமாக இழுத்து அமர வைத்துக்கொண்டான்.
ஏதோ சிறு பிள்ளை போல அவனிடம் கேட்டேன், "இதுக்கு என்ன அர்த்தம், உனக்கும் என்னை பிடிச்சுருக்குன்னு எடுத்துக்கட்டுமா, இல்லேன்னு எடுத்துக்கட்டுமா?!"
"குழந்தை மாதிரி பேசறடீ! அழாதே! கண்ண துடைச்சுக்கோ!" முதல் முறை ‘டீ’.
"இல்ல, என் மனசுல ஓடின போராட்டம் உனக்குத் தெரியாது!"
"எனக்கு எல்லாம் தெரியும்!"
"இல்ல, இந்தா … இந்த ரெண்டாவது பேப்பரையும் படிச்சுப்பாரு!"
"நான்தான் எனக்கு எல்லாம் தெரியும்னு சொன்னேனே" என்று சொல்லிக் கொண்டே, அந்தக் காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, என் நெற்றியில் முத்தமிட்டான். எனக்கு எதுவும் புரியவில்லை.
ஃபோனை எடுத்தான்; யாரையோ அழைத்தான். ஏதோ சொன்னான்; நானோ விழித்தேன்.
ஐந்து நிமிடங்களில் நாங்கள் இருந்த இடத்திற்கு என்னுடைய டாக்டரும், ‘தம்மாதூண்டும்’ வந்து சேர்ந்தார்கள். இரண்டாமவள் அவனிடம் சொன்னாள், "கங்ராட்ஸ், சாதிச்சுட்டீங்க!"
அவனோ என்னைப் பார்த்தான், "கண்ணு, இன்னும் ஒரு தடவை என்னை நீ மன்னிக்கணும்! எங்க எல்லாரையும் மன்னிக்கணும்!"
"எனக்குப் புரியலை!"
அவன் பேச ஆரம்பித்தான், என் தலையில் செல்லமாகக் குட்டியவாறே, "நீ சரியான ட்யூப்லைட்றீ! ஃபர்ஸ்ட் டைம் நாம மீட் பண்ணினோமே ஞாபகம் இருக்கா? கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்க வந்தேன்னு சொன்னேனே. அந்தப் பொண்ணே வேற யாரும் இல்லை, நீ தான்! உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்! இன்னும் கரெக்டா சொல்லணும்னா, நீ என்னைப் பார்க்கணும்னுட்டுதான் வந்தேன். அதுக்கு முன்னாடியே உன்னை நிறைய தரவ பார்த்துருக்கேன். உங்க டாக்டரை உனக்கு பழக்கமாகறத்துக்கு முன்னாடியே, எனக்கு உன்னைத் தெரியும்!"
டாக்டரும் பேசினாள், "அந்த ஆக்ஸிடெண்ட்டுக்கு முன்னாடியே இவன் உன்னை… " என்று பேசி முடித்தாள்.
பிறகு அவன், "என் மனசுக்குள்ள உனக்கே உனக்குன்னு ஒரு இடம் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு! நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினபோதே, நான் இதை சொல்லியிருக்கலாம். ஆனா, நீ என்ன சொல்லிருப்ப.. ஏதோ நான் உன் மேல பரிதாபப்பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு பேசுவ! அது என் காதலை இன்ஸல்ட் பண்ற மாதிரி இருக்கும். உனக்கு உன் மேல யாரும் பரிதாபப்பட கூடாது. வீட்டுக்குப் போனா, எல்லாரும் அழறாங்கன்னு, போகறதையே நிறுத்திட்ட. ஸோ, அதுக்குத்தான் இவ்வளோ ட்ராமா பண்ணினோம். நீயா என்னை காதலிக்கணும்! நீயா என்கிட்ட வந்து சொல்லணும்! உனக்கு என்னை கண்டிப்பா பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதனால, உன் கூட பழக ஆசைப்பட்டேன். நாம மீட் பண்றது யதார்த்தமா இருக்கணும்னுட்டு, நாங்க மூணு பேரும் ரொம்ப மெனெக்கெட்டோம். நினைச்சபடியே எல்லாம் நடந்தது. நீ, என்னை வெறுக்கற மாதிரி நடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும், எப்போதாவது நீயாவே விஷயத்தை உடைப்பேனு. அதுக்காகவே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நேத்து உன்னோட லெட்டர் பார்த்தப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடுவேன்னு எனக்கு தெரியும். அதான் இவங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னேன்!"
மூவரும் என்னையே பார்த்தார்கள். ஆனால், அவன் கண்களைத் தவிர அவ்வுலகில் வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை. அதைப் பார்க்கப் பார்க்க என் கண்களில் நீர் பெருகியது.
"என்னால உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க முடியாதேடா!"
"அடச்சீ பைத்தியம்!"
வாய்விட்டு அழ ஆரம்பித்தேன், "ஒரு வைஃப் செய்ய வேண்டியதெல்லாம் என்னால முடியாதுடா! ஐயம் ஃபிஸிகலி அன்ஃபிட்! யாருக்குடா குழந்த பெத்துக்கணும்னு ஆசை இருக்காது! அதெல்லாம் உனக்கு என்னால தர முடியாதேடா!"
"பைத்தியம், திருமண பந்தத்துல அதையும் தாண்டி பல விஷயம் இருக்கு!"
அவன் கண்களை இன்னும் ஏக்கத்துடன் பார்த்தேன்.
ஒரே ஒரு வாக்கியம்தான் அவன் சொன்னான், "ஐ லவ் யூ!"
இன்னும் ஒரு முறை நீர் பொங்க, அவன் தோள்களில் சாய்ந்தேன்.
this story realy nice! i like also
ரொம்ப நல்ல இருக்கு
எனக்கு பிடிச்சிருக்குடா பட்டு