எப்போது அவன் தூங்குவான் தெரியாது. எந்நேரமும் பஸ் ஸ்டாண்டுப் பக்கம் மாப்பிள்ளை நடமாடித் திரிவது தெரியும். மாப்பிள்ளையைக் காணவில்லை… சிவசண்முகத்துக்குக் கவலையாகி விட்டது. தனியே தேநீர் குடிக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது கிளம்பிப் போய்விட்டானா, தெரியவில்லை. நிழற்குடை அடியில் காணவில்லை. பஸ் வேறு வந்துவிட்டது. டிரைவர் நாகு, "என்னப்பா… தேநீர் அருந்தியாச்சா?" என்று வேடிக்கைபோல நல்ல தமிழ் பேசினான்.
”அட நம்ம மாப்ளையைக் காணம் அப்பா!…” என்றான் சிவசண்முகம்.
”எங்கயாச்சும் கால்கழுவப் போயிருப்பான்” என்றான் நாகு.
”எங்க போனாலும் பத்து நிமிஷம்தான்… திரும்பிருவான். அவன் மூட்டையையும் காணம் பாரு!”
”அட அதானே!” என்றான் நாகு. அவனுக்கும் யோசனை தொற்றிக்கொண்டது.
”பக்கத்தில் எங்கயாவது இருக்கானா பாப்பம் வா!…”
இருவருமாய்ச் சிறு நடையில் மாப்பிள்ளையைத் தேடினார்கள். கடைசியில் பார்த்தால், உடல் நடுங்கும் ஜுரத்துடன் பூங்காவில் படுத்துக் கிடக்கிறான். கண்ணையே திறக்க முடியாத ஜுரம். ”மாப்பிள்ளை!” என்று சிவசண்முகம் கூப்பிட்டான். கண்ணைத் திறக்கவில்லை அவன். ”ஏ! என்னாச்சி மாப்பிள்ளை?” என்று முன்னே குனிந்து நாகு கூப்பிட்டுப் பார்த்தான். அப்பவும் அவன் கண்ணைத் திறக்கவில்லை.
”இப்ப கண்ணைத் திறப்பான் பார்!” என்று சிவசண்முகம் ஓர் உபாயம் செய்தான். சட்டெனத் தன் கண்டக்டர் விசிலை எடுத்தான். அவன் காதருகே ‘பீய்ங்’கென ஊதினான்.
மாப்பிள்ளை சிரமப்பட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தான். அவர்கள் ஹோவெனச் சிரித்தார்கள். ”ஒரு கம்பளி கொண்டாந்து தரேன். போர்த்திக்க… சரியாயிரும் மாப்பிள்ளை!” என்றபடி அவசரமாய் ஓடிப்போய்த் தன் வீட்டில் இருந்து சிவசண்முகம் ஒரு கம்பளி கொண்டுவந்து அவனுக்குப் போர்த்திவிட்டான்.
”நாங்க கிளம்பட்டா?”
அவர்கள் வந்து பார்த்ததே மாப்பிள்ளைக்கு உற்சாகமாய் ஆகியிருக்கவேண்டும். கையை உயர்த்தி சல்யூட் வைக்க ஆசைப்பட்டான். முடியவில்லை. அவன் கண்கள் அழுது கொதிநீர் வழிந்தது. சிவசண்முகம் தன் விசிலை எடுத்து அவன் வாயில் வைத்தான். மாப்பிள்ளை ‘பீய்ங்’கென உற்சாகமாய் ஊதினான்.
அவர்கள் கிளம்பினார்கள்.
ரெண்டொரு நாளில், திரும்ப அந்த பஸ் நிறுத்தமே அழகுபடுத்திக் கொண்டது. மாப்பிள்ளையின் விசில் சத்தம் நாலு திசைகளிலும் பீரிட்டுத் தெறித்தது. காலை எட்டு மணி முதல் அவன் பரபரப்பானால் பகல் ஒருமணி போல சற்று ஆசுவாசப்படுவான். வெயில் உக்கிரப்பட்ட வேளைகளில் சற்று உள் நிழலில் ஒடுங்குவானே தவிர, பஸ் சத்தம் கேட்டால் துள்ளியெழுவான்.
யானைக்கு அங்குசம் என்றால் பஸ்சுக்கு விசில். அவன் விசிலுக்குக் கட்டுப்பட்டது பஸ். அது பின்வாங்க வேண்டுமானால், அவன் வசம் பார்த்து டபுள் விசில் தருவான். கடைசி எல்லையை பஸ் தொட்டதும் சிங்கிள் விசில். நீண்ட ஊளை. பஸ் அப்படியே நின்று, பின் முன்னொடித்துப் போகும். யானை சர்க்கஸ் போல இது பஸ் சர்க்கஸ்.
எந்த பஸ்சுக்கும் அவனுக்குப் பேதம் கிடையாது. எழுதப் படிக்கத் தெரிந்தவனா அவன்? அதுவே யாரும் அறியார். ஒருத்தி, அவன் இப்படி விசில் ஊதிக் கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்துக் கேட்டாள். ”ஏம்ப்பா! இந்த பஸ் செம்மஞ்சேரி போகுமா?”
மாப்பிள்ளைக்குத் திகைப்பாய் இருந்தது. அதுவரை எந்த பஸ் எங்கே போகும் என்று அவன் யோசித்ததே கிடையாது. தெரியா… என வந்த வார்த்தைகள் தொண்டைக்குள்ளே சுருண்டன. அதற்குள் அருகில் இருந்த இன்னொருத்தி ”போகும் ஏறுங்க!” என அவளுக்குப் பதில் தந்து விட்டாள். மாப்பிள்ளை நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
சிவசண்முகம் அவனுக்கு ரொம்ப நெருக்கமாகி விட்டான். ஓர் அதிகாலையில், அவனுடன் தேநீர் அருந்தியபடியே அவன் பேச்சுக் கொடுத்தான். ”எல்லாரையும் பஸ்ல ஏத்தி விடறியே… நீ எப்ப நம்ம பஸ்ல ஏறப்போற?” என்று கேட்டான் சிவசண்முகம். மாப்பிள்ளைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. எல்லாத்தையும் ரசிக்கத் தெரிகிறது. ஆனால், என்ன பதில் சொல்ல என்று மாத்திரம் அவனுக்குத் தெரியவில்லை.
”அவரு நம்ம ஊர் மாப்பிள்ளையப்பா! அவர் ஏன் நம்மகூட வர்றாரு? என்ன நாஞ்சொல்றது மாப்பிள்ளை?” என்றான் டிரைவர் நாகு. "எல்லாரும் பல்லக்குல ஏறிட்டா, அப்பறம் தூக்கறது யாரு, சொல்லு சண்முகம்…” என்றான் நாகு. அவன் சொன்னதைக் கேட்டு ”அது சரி!” என்று சிவசண்முகம் சிரித்தான்.
மாப்பிள்ளைக்கு அவர்கள் பேச்சு புரியவில்லை.
பள்ளிக்கூடம் பக்கம் போனால் டிரில் மாஸ்டரின் விசில் கேட்கலாம். ஆனால், அந்தச் சததம் வேறு மாதிரியானது. அவர் ஊதினால் பையன்கள் காலை ஒன்று சேர்த்துச் சளப்பென்று அடித்து விரைத்து நிற்கிறார்கள். பிறகு, அடுத்த விசிலுக்குக் கப்பையை விரித்து நிற்கிறார்கள். எல்லாரும் ஒருசேரச் செய்துகாட்டுவது நன்றாய்த்தான் இருந்தது. ஓர் ஓட்டப் பந்தயப் போட்டி கூட மாப்பிள்ளை பார்த்தான். எல்லாரும் தயாராய் நின்றார்கள். மாஸ்டர் விசில் ஊதிய கணம், சட்டென வேகமெடுத்து எல்லாரும் ஓடினார்கள்.
பஸ் ஸ்டாண்டில் அவன் படுத்திருந்தபோது, காகம் ஒன்று அவன் பக்கமாய் வந்து நின்று பார்த்தது. அவன் அதையே பார்த்தபடி, விசில் எடுத்து, அது எதிர்பாராமல் திடீரென்று ‘பீய்ங்’கென்று ஊதினான். ஓட்டப் பந்தயம்… காகம் விருட்டென்று பறந்தது. அவன் கடகடவென்று சிரித்தான்.
அவன் கேள்விப்ட்டிருக்கவில்லை. யார் அவனிடம் சொல்லப் போகிறார்கள். முழு பந்த் நாள் அது. இரவு பத்து மணி பஸ் கிளம்பிப் போனபின் வழக்கம் போல அவன் படுக்கப் போய்விட்டான். காலை விடிய, தன்னைப்போல விழிப்பு வந்தது. மணி என்ன தெரியவில்லை. ஆனால், நேரமாகி விட்டது என்று உள்ளே பட்சி சொன்னது. அடாடா என்று எழுந்து உட்கார்ந்தான். முதல் பஸ் போயிருக்குமோ? சிவசண்முகம் போயிருப்பானா?
நேற்றே அவன் சாப்பிட்டிருக்கவில்லை. ஒரு சூடான தேநீருடன் காலைகளைத் துவங்க உற்சாகமாய்த்தான் இருக்கும். இன்னும் இருட்டு பிரியவில்லை. மெல்ல நிழற்குடையை விட்டு வெளியே வந்தான். யாருமே இல்லை. ஓரமாய் ஒண்ணுக்கடித்தான். தொடையைச் சொறிந்துகொண்டான். பார்த்தால் தேநீர்க்கடையே மூடிக் கிடந்தது. ஆச்சர்யமாய் இருந்தது…
தெருவில் நடமாட்டமேயில்லை. நாலைந்து பேர் அந்த முதல் பஸ்சுக்கு வருவார்கள். யாரையுமே காணவில்லை. முதல் பஸ் போயிருக்கலாம் என நினைத்தான். ஏன் கடை திறக்கவில்லை என்பது குழப்பமாய் இருந்தது. தெருவில் ஈ, காக்காய் கிடையாது. மெல்ல அந்த வெறுமையில் தனியே நடந்து போனான். சட்டைப் பையில் அந்த விசில். மகா மௌனத்தின் பிடியில் கிடந்தது உலகு. அதைக் கறைப்படுத்த முடியாது. விசில் அப்படியே தொண்டை விக்கிக் கிடந்தது. என்ன மௌனம் இது! நியதிகளே மரங்கள் போல இப்படி அசையா நிலை கண்டன. இந்தப் பிரம்மாண்ட உலகில் அவன் மாத்திரம் இப்போது. இருக்கிறான். விழித்திருக்கிறான். காத்திருக்கிறான்… எதற்கு? யாருக்கு?
அவனுக்கு ஏனோ அழவேண்டுமாய் இருந்தது.
–தொடரும்…