அவன் யார், தெரியாது. எங்கிருந்து வந்தான், தெரியாது. எப்போது வந்தான், என்பதே கூட அநேகருக்குத் தெரியாது. கந்தல் உடை. ஒருவேளை ஜனங்களின் இப்படி அநேகக் கேள்விக் கொக்கிகளால் அவன் உடைகள் கிழிந்திருக்கலாம்.
பஸ் நிலையமா, அது நிறுத்தமா தெரியாது. சின்ன ஊரின் சின்ன பஸ் நிலையம். இரவுப் பத்துமணிக் கடைசி பஸ் அங்கிருந்து கிளம்பும். காலையில் நாலே முக்காலுக்குத் திரும்ப அங்கே பஸ்கள் நடமாட ஆரம்பிக்கும். ஒரு காலை, பஸ் ஸ்டாண்டில் அவன் சுயம்புவாய் முளைத்தாப் போலிருந்தது. நிழற்குடை எனச் சிறு கட்டடம். அறை அல்ல; நாலு சுவரில் ரெண்டு மாத்திரமே கட்டிய இடம். அதன் ஒரு ஓரம் அவன் படுத்துக் கிடந்தான்.
நாடோடி. சதா அலைவதும் திரிவதுமாய் நாய் வாழ்க்கை. ஆனால், நாய்கள் சிறு எல்லைகளோடு நிறுத்திக் கொள்கின்றன. அவற்றைத் தாண்டி அவை பாதுகாப்பில்லாமல் உணர்கின்றன ஏனோ. அவன் மனிதன்… எல்லைகள் அவனை ஆயாசப்படுத்துகின்றன. பொங்கும் கடல் அலை போல அவன் தன் எல்லையை மீண்டும் மீண்டும் விரித்தபடியே இருக்க ஆசைப்பட்டிருக்கலாம். அகாடின் வாத்தியம் விரிய விரிய இசை விகசிக்கிறது. ஆனால் அலை என்றால் இரைச்சல் இருக்கும். இவன் பொதுவாக அமைதியாகவே இருந்தான். திடீர் திடீரென்று தனக்குள் சிரித்துக் கொள்வான். சில சமயம் விழுந்து விழுந்து சிரித்தபடி எங்கோ ஓடுவான்…
பயமோ, வாழ்க்கை சார்ந்து அழுகையோ, அலுப்போ அவனிடம் தெரியவில்லை. வீடு, வாசல், குடும்பம்… எல்லாம் உதறி ஏன் இப்படி வந்தான்? இங்கே எப்படி, எதற்கு வந்தான்? அவன் சட்டையில் மேலும் கிழிசல்கள்… எத்தனையோ ஊர் சுற்றித் திரிந்திருப்பான். இங்கே அவனுக்கு என்ன பிடிப்பு, ஈர்ப்பு கிடைத்ததோ? ஊர் ஜனங்களுக்கே பிடிபடாத என்ன சுவாரஸ்ய ரகசியம் அவனுக்குக் கிட்டியதோ? பதில்களை ரகசியம்போல அவன் தன் மூட்டையில் வைத்திருக்கிறான். ரகசியம் பூரணமானால் மௌனம் கொழுக்கட்டையாகிறது. அவன் சுமந்து செல்லும் மூட்டை, அதுவே கொழுக்கட்டை. முக்குறுணிப் பிள்ளையார்க் கொழுக்கட்டை.
யாரிடமும் அவன் கைநீட்டிப் பார்க்க முடியாது. பசிக்குமா அவனுக்கு? வயிறே அற்று நடமாடுகிறானா அவன்! என்ன சாப்பிடுகிறான்? எப்படி, எப்போது அவனுக்குச் சாப்பிடக் கிடைக்கிறது? கவலைச் சுருக்கம் காட்டாத முகம். எதையும் உள்ளே போட்டுக்கொள்ளாத அளவில் அவன் முகம் தெளிந்து கிடந்தது. அதனால் அவன் கண்கள் விளக்கேற்றிக் கொண்டாப்போல அவன் சிரிக்கையில் ஜொலித்தன. அழுக்கானவன். அழுக்-கனவான்! கயிற்றுப் பிரிகள் போல முடிகள் சிதறித் தெரியும் தலை, மீசை, தாடி. ஆனால், அவன் மகா அழகனாய்த் தெரிந்தான். அடர்த்தியான இமைகள். கண்கள் மைதீட்டினாற்போலப் பெரிசாய், கருமையாய், வசீகரமாய் இருந்தன.
பகலில் இஷ்டம் போலச் சுற்றித் திரிந்தான். சினிமாத் தியேட்டர் பக்கம், மில் பக்கம், ஆஸ்பத்திரி, பஞ்சாயத்துப் பூங்கா என்று ஒரு சக்கரம் போய்வருவான். ஆனால், ஜாகை என்று பஸ் நிறுத்தத்தை வரித்துக் கொண்டிருந்தான். நல்ல மழை என்றால் கூட, அவசரம் அவசரமாய் வீடு திரும்புகிறாப் போல பஸ் நிலையம் திரும்பி விடுவான். இதைவிட நிழல்பாங்கான, மேல்கூரைப் பாதுகாப்பான இடங்கள் இருந்தாலும், ஆ, அது அவன் இடம்… என நினைத்தான் போலும்.
கல்யாண வீடுகள் போனால் வாசலில் நின்றான். பார்க்கிறவர்கள், சாப்பிட எதுவும் கிடைக்குமா என அவன் காத்திருப்பதாய் நினைத்தால், அவன் நாதசுர இசையை ரசித்தான். ஒருமுறை. கடும் மழை. எல்லாரும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையடியில் ஒதுங்கினார்கள். எங்கிருந்தோ அவனும் ஓடி வந்தான். அவர்கள் பதறி வழிவிட்டார்கள். மழை எல்லாரையும் எரிச்சல்படுத்தியிருந்தது. அவன் ஒருபக்கமாய் ஒதுங்கிக் கொண்டபடி முடங்கினான். உள்ளேயே சிறு சிறு சொட்டுகளாய் ஒழுகியது கூரை. பைக்குள்ளிருந்து சிறு டப்பா ஒன்றை எடுத்து ஒழுகும் வாட்டத்தில் வைத்தான் அவன். மழைச் சத்தம் தவிர வேறு சத்தம் இல்லை. திடீரென்று டப்பாத் தகரத்தில் ஒரு சொட். க்ளுக் எனச் சிரித்தான் அவன். எல்லாரும் அவனைப் பார்த்தார்கள். இன்னொரு முறை சொட். அவன் கலகலவென்று ரொம்ப சந்தோஷமாய்ச் சிரித்தான். மழைக்கு ஒதுங்கிய எல்லாருமே புன்னகை செய்தார்கள்.
ஊரில் எல்லாருக்கும் அவனைப் பிடித்து விட்டது. எல்லாரிடமும் முகம் பார்த்துப் பேச, புன்னகைக்க அவன் ஆசைப்பட்டாற் போலிருந்தது. வார்த்தைகள் அவன் தொண்டைவரை அலையெழுச்சி போல வந்து, சட்டெனத் திரும்ப வெட்கத்தில் உள்வாங்கின. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் அவனுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தார்கள். அவர்கள் என்ன கேட்டாலும் எதுவும் பேசத் தோன்றாமல் புன்னகை காட்டி நின்றான் அவன். அலுவலகத்தில் இருந்து பஸ்சில் வீடு திரும்புகிறவர்கள், காய்கறி விற்கிற பெண்கள், பூக்காரிகள் எல்லாருக்கும் அவன் பரிச்சயமாகிப் போனான். என்றாலும் அவனைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதுதான் வேடிக்கை. அவனைப் பைத்தியம் என்று அழைக்க அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை என்பதுதான் விஷயம்.
அவனுக்கு என்ன பேர் வைப்பது என எல்லாருமே தங்களுக்குள் யோசித்தபடியிருந்தார்கள். அது தன்னைப்போல அமையவும் செய்தது.
(தொடரும்)
கேள்வி கொக்கிகளால் கிழிந்த சட்டை ….அபாரமான கற்பனை ஐயா. என்ன பெயர் வைக்கப் பட்டிருக்குமோ என்று எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. நல்ல எழுத்து. சுவாரஸ்யத்தை கூட்டும் நடை. வாழ்த்துகள்.
மடிப்பாக்கம் ரவி