அயோத்தி மாநகரே கொண்டாட்டமாய் இருந்தது. வனவாசம் முடிந்து, ராவண வதம் முடிந்து இன்றுதான் ராமனும் சீதையும் அயோத்தி திரும்பி இருக்கிறார்கள். அரண்மனையிலும் அதே உல்லாசம்.
பரதனின் மனைவி மாண்டவி, சத்ருக்கனின் மனைவி ஸ்ருதகீர்த்தி இருவரும் கொஞ்சம் அவசரமாகவே அருகில் ஓடிப் போய் அக்காவைக் கட்டிக் கொண்டார்கள். சீதா மெலிந்திருந்தாள். கண்களில் முன்பிருந்த பிரகாசம் மங்கி இருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பின் இன்று பார்த்துக் கொள்கிறார்கள்! "அக்கா!…" இருவருக்குமே அழுகை பீறிட்டது.
"ஏய் அசடு! அதான் திரும்ப வந்துட்டேனே!"
"உனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைக்கா?"
சீதா சிரித்தாள்.
"எல்லோரும்தான் கஷ்டப்படறாங்க. உங்களுக்கு என் கஷ்டம் மட்டும் தெரியுது."
"தலைமுடி எல்லாம் கொட்டிப்போச்சு!"
மாண்டவி அக்காவின் தலையைக் கோதி வருத்தப்பட்டாள்.
"உன் கண்ணு பளீர்னு மின்னும்! இப்ப அதுல ஒரு நிழல் படிஞ்சிருக்கு!"
சீதைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"என் செல்லங்களா! எனக்கு ஒண்ணும் இல்லை."
அதுவரை ஒதுங்கி நின்ற ஊர்மிளாவைப் பார்வையால் அருகில் அழைத்தாள்.
"எப்படி இருக்கே?"
தபஸ்வினி போல் தோற்றம். தீர்க்கமாய்ப் பார்வை. மற்ற இரு சகோதரிகளுடன் ஒப்பிடும்போது கூடுதலாகவே திடம் ஊர்மிளாவுக்கு.
"உன் கண்கள் அப்படியேதான் இருக்கு ஊர்மிளா!"
சீதையின் குரலில் லேசாய் ஒரு தடுமாற்றமும் இருந்தது.
"அவர்கள் சொன்னதற்குப் பதிலாய் என்னிடமா?" ஊர்மிளா சிரித்தாள்.
"உங்களோடு பேசி வெகு காலமாச்சு!"
"உனக்கு ஓய்வு தேவைப்படுமே"
"நான் நல்லாத்தான் இருக்கேன்"
"சொல்லுக்கா! எதையும் விடாத! பூர்ணமாச் சொல்லு!”
"என்ன சொல்லணும்?"
"இங்கேர்ந்து நீ கிளம்பிப் போனதுல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும்."
சீதா அவளையும் அறியாமல் ஊர்மிளாவைப் பார்த்தாள்.
"என்ன… கிளம்பினோம்… எங்கெங்கோ சுத்தினோம்… என்னென்னவோ ஆச்சு…"
"ஏய்!… இப்படி ஒரு வரி விவரணம் வேண்டாம்! முழுசாச் சொல்லுக்கா!"
"ராட்சசர்களை எல்லாம் வதம் பண்ணி… எவ்வளவு நடந்திருக்கு!…"
"சொல்லுக்கா! ரொம்ப ஆசையா இருக்கு… கதை கேட்க"
ஊர்மிளா முகம் மாறாமல் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மற்ற இருவரும் கதை கேட்கிற சுவாரசியத்தில் சீதையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சீதைக்கு வேறு வழி இல்லை. சொல்ல ஆரம்பித்தாள். பாதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஸ்ருதகீர்த்தி அவள் மடியில் படுத்துக் கொண்டுவிட்டாள். அவள் தலையை வருடியபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"என்னக்கா? உனக்குத் தெரியலியா அது ராட்சசர்கள் மாயா வித்தைன்னு?"
பொன்மானைப் பார்த்த சம்பவத்தைச் சொன்னபோது மாண்டவி கேட்டாள்.
"என்னவோ ஒரு ஆசை. அதைப் பார்த்ததும்… புத்திக்கு எட்டலை"
"ம்ம்… அப்புறம் என்ன ஆச்சு?"
ஊர்மிளாவின் முகத்தில் இப்போது லேசாய் ஒரு பதற்றம்.
"ராவணன் என்னைத் தூக்கிக் கொண்டு போகச் செய்த சதி. அது அப்புறம் புரிந்தது. என்னை அசோகவனத்தில் கொண்டு போய் வைத்தான். பாவம் ஜடாயுப்பா! என்னால் அவரும் உயிரிழந்தார்."
திரிஜடை துணைக்கு இருந்தது, விபீஷணன் உதவியது, சுக்ரீவன், ஆஞ்சநேயர், பாலம் கட்டி யுத்தம் நடந்தது…
"மண்டோதரியை நினைச்சா எனக்குச் சிலிர்க்குது. என்ன ஒரு பதிபக்தி!"
"எப்படிக்கா அவ்வளவு நாள் அசோகவனத்துல தனியா அந்த ராட்சசிகள் மத்தியில இருந்தே?"
"பாவம்க்கா நீ"
"ஊர்மிளாவும்தான் பாவம்!" என்றாள் சீதா.
"ஆமாக்கா!"
இருவரும் ஊர்மிளாவைக் கட்டிக் கொண்டார்கள். சீதா பெருமூச்சுவிட்டாள்.
"ஆனால் ஊர்மிளா அக்காவுக்கு எப்போதும் தூக்கம்தான்."
லட்சுமணன் சொல்லிப் போயிருந்தான்.
"ஊர்மிளா! வனத்தில் எனக்குத் தூக்கம் இராது. என் தூக்கத்தையும் உனக்குத் தந்து விட்டுப் போகிறேன். தூக்கம் ஒரு மருந்து ஊர்மிளா! நம் துக்கம் மறக்க, பிரிவை மறக்க, அதைத் தினமும் எடுத்துக் கொள்! நான் திரும்பி வரும் வரைக்கும்."
சீதா சொல்லிக் கொண்டிருந்தாள்.
"திரும்ப வந்து உங்களை எல்லாம் எப்போது பார்ப்பேன் என்றிருந்தது எனக்கு."
"காட்டுல எப்படித்தான் இருந்தியோ!"
"மரவுரி… கல்லும் முள்ளுமா பாதை… அக்கா! எனக்கு அழுகை வருதுக்கா!"
ஸ்ருதகீர்த்தி அழுதே விட்டாள். மாண்டவியின் கண்களிலும் நீர்.
"ச்சீ!… பைத்தியங்களா! நான்தான் பத்திரமாய் வந்துவிட்டேனே!"
"இருந்தாலும் இத்தனை வருஷமாய் நீ பட்ட சிரமங்கள்… உனக்கு மட்டும் ஏனக்கா இப்படி?"
"நடந்ததைத் திருப்பிப் பார்க்கக் கூடாதென்றுதான் நம் தலை பின் பக்கம் திரும்ப முடிவதில்லை."
"தத்துவம் பேசாதக்கா! அனுபவித்த வலி மாறுமா?"
சீதையின் உடல் அவளையும் மீறி ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அசோகவனத்தில் தனிமையில் அந்த நாட்கள். இரவில் வினோதமான பறவைகளின் அலறல்கள்… பயங்கரத் தோற்றத்தில் ராட்சசிகள்… வருபவர்கள் நிஜமா மாயாவிகளா என்கிற குழப்பங்கள்… மீண்டும் ஒருமுறை உடல் சிலிர்த்து அடங்கியது.
"அக்கா! என்ன ஆச்சு?"
"ஒண்ணுமில்ல"
"சரிக்கா! நீ கொஞ்சம் ஓய்வெடு! நாங்கள் அப்புறம் வருகிறோம்"
ஊர்மிளா தங்களுடன் வருகிறாளா என்று கூடப் பார்க்காமல் போய்விட்டார்கள்.
கண்களை மூடியமர்ந்திருந்த சீதா கண்ணைத் திறந்து பார்த்தாள். எதிரில் ஊர்மிளா.
"என்ன ஊர்மிளா?"
அவளிடம் பதிலேதுமில்லை. சீதாவைப் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னம்மா?…"
சீதா எழுந்து வந்து அவளருகில் அமர்ந்தாள்.
"நமக்குக் கல்யாணம் ஆகிறவரை சேர்ந்திருந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன்"
"ஆமாம்! நம் அன்னை தந்தையின் பாசத்தில், நமக்கான சொர்க்கத்தில் திளைத்திருந்தோம்."
"நமக்குள் எந்தப் பேதமும் இல்லை"
"எந்த ஒளிவு மறைவும் இல்லை… வித்தியாசமும் இல்லை…"
"நம் கல்யாணம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. இல்லையா சீதா?"
சீதையிம் முகம் வாடியது.
"நம் புகுந்த இடத்தைக் குறை சொல்லவில்லை சீதா"
"என்ன செய்ய ஊர்மிளா? ஏதோ போதாத காலம். ஆனால் நீ நம் குல மானத்தைக் காப்பாற்றி விட்டாய் என் செல்லமே! மூன்று அன்னையர்களையும் இத்தனை காலம் உன் அன்பால் காத்து வந்திருக்கிறாய். இங்கு வந்ததும் உன் புகழ்தான் ஊர்மிளா! அவர் இல்லாத குறை கூட மறந்து போச்சாம். உன் கவனிப்பில்!"
"நீ எப்போதும் இப்படிப் பேசியதில்லையே சீதா!"
சீதா திணறித்தான் போனாள்.
"அக்கா! நாம் மணமாகி இங்கு வந்தபின் உன்னைத்தான் எங்கள் அம்மாவாய் நினைத்தோம்"
"நானும் அப்படித்தான் ஊர்மிளா. உங்களை என் குழந்தைகளாய்த்தான் பார்க்கிறேன்"
சொல்லிவிட்டதும் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஊர்மிளா எதுவும் பேசவில்லை.
"வனவாசம் பிடித்ததாக்கா?"
"ஏன் கேட்கிறாய்?"
"மறுபடி வாய்ப்பு கிடைத்தால் போகலாமென்று பார்க்கிறேன்"
சீதா அவள் வாயைப் பொத்தினாள்.
"வேண்டாம் ஊர்மிளா! விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே! நான் திரும்பி வந்து விட்டேன்தான். ஆனால் இன்னமும் அந்த மிரட்சி போகவில்லை. சட்டென்று மனம் பின்னோக்கிப் பாய்கிறது. இந்தக் கணம் மறந்து அந்த வனம் நினைவில் வந்து மிரட்டுகிறது. இன்னும் எத்தனை காலம் ஆகுமோ! மறதி என்னும் மருந்தைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன் ஊர்மிளா என்னை மீட்டெடுக்க."
"ஆமாம் அக்கா! அந்த மருந்துதான் இப்போது உனக்கு, எனக்கு, என் பர்த்தாவிற்கு வேண்டும்!"
தனுசிலிருந்து அம்பு விடுபட்டு விட்டது. அதன் இலக்கில் போய்க் குறி தவறாமல் தைத்தது. உயிர் போகும் வேதனை கனத்தது.
"ஊர்மிளா!…"
"நீ என் அம்மா சீதா! எனக்கு மட்டுமில்லை, எங்கள் எல்லோருக்கும். உன்னை வேறு மாதிரி இதுவரை நினைத்ததே இல்லை"
"நான் மறுக்கவில்லை ஊர்மிளா"
சீதையின் கால்கள் துவண்டன. எழுந்தவள் மீண்டும் அமர்ந்து விட்டாள்.
"வருகிறேன் அக்கா! நீ கொஞ்சம் ஓய்வெடு மறதியின் முதல் துளியை ஸ்பரிசித்து! காலம் தூக்கத்தினால்தான் ஓடுகிறது வேகமாய்"
சற்றும் தொய்வில்லாத நடையுடன் ஊர்மிளா திரும்பிப் போனாள். மானசீகமாய் ஒரு தண்டனையை நிறைவேற்றிய அமைதி அங்கு நிலவியது.
லட்சுமணன் எதுவும் பேசியதில்லை இதுவரை. சீதையை நிமிர்ந்தும் பார்த்ததில்லை. அவனுக்கும் சேர்த்து வைத்து ஊர்மிளா பேசி விட்டுப் போய்விட்டாள்.
சீதையின் மூடிய கண்களுக்குள் இன்னொரு வனவாசம் தெரிய ஆரம்பித்தது.
“
மிகவும் அருமையான படைப்பு. இது கற்பனையா அல்லது கவியின் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் மிகவும் அற்புதமான எழுத்து. ரிஷபன் அவர்களே மிகவும் நன்றி அய்யா. இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற கற்பனையாகவே நான் இதை பார்க்கிறேன். இது போன்ற படைப்புகளை ரிஷபன் அவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
ரவி.
சற்று விளக்கவும் … பர்த்தா என்றால் என்ன ?
பர்த்தா என்றால் கணவன்.
நன்றி திரு. ரவி.. இது என் கற்பனையே. ஊர்மிளா அதிகம் பேசாத கதாபாத்திரம். அதனால் இப்படி ஒரு கற்பனை செய்தேன். நிச்சயமாய் ஊர்மிளா தன் அக்காவைக் குறை சொல்லவே மாட்டாள். இருந்தாலும் தன் கணவனை அக்கா பொய்மான் வந்த நேரம்.. ராமன் குரலில் மாரீசன் கத்தும்போது.. சீதையின் பாதுகாப்பிற்காக நின்ற லட்சுமணனை சீதை கொஞ்சம் திட்டி விடுவாள். பிறகு நடந்தது உங்களுக்குத் தெரியும்.
இப்போது சீதை நாட்டிற்கு திரும்பியதும் நடந்த கதை சொல்லும்போது, ஊர்மிளா மனசு சங்கடப்பட்டால்…. என்கிற என் கற்பனையே இக்கதை. மீண்டும் நன்றி
கர்ப்பனை போல இல்லை,உன்மையாக நடன்தது போல் இருன்தது