வெட்டாற்றுப் பாலத்தைத் தாண்டி அந்தச் சாலையின் இசகுபிசகான வளைவுகளைக் கடந்துவிட்டால் கடினமான அந்த சைக்கிள் பயணத்தின் இம்சை மறந்து சில நிமிடங்களுக்கான சந்தோஷத் தருணங்கள் வந்துவிடும். வாகான சரிவு சைக்கிளை அழுத்தி மிதிக்க வேண்டியதில்லை. சோர்ந்து போயிருந்த பாதங்களைப் பெடல்களில் சொகுசாக வைத்துக் கொண்டு பயணிக்கலாம். அந்த ஓட்டைச் சைக்கிளும் நேசிக்கத்தக்கதாக ஆகிவிடும்.
அடிக்கடி செயின் கழன்று பெல் ரிப்பேராகி ஏதாவது பாகங்கள் கழன்று விழுந்து சில நேரம் கூட்டங்களுக்கு நடுவே குண்டுவெடிப்பதுபோல டமாலென்று டியூப் வெடித்து ஆளைச் சாய்த்துவிடும். எத்தனை காலமாயிற்ற! தேய்ந்துபோன எந்தப் பாகங்களையும் மாற்ற வக்கில்லை. ஒரு எண்ணெய் போட வக்கில்லை. துடைத்து சுத்தப்படுத்த யோக்யதை இல்லை. இருந்தும் உனக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறேன் என்பது போல் பரிதாபமாகப் பார்ப்பது புரியும். கோபித்துக் கொள்ளவும் தகுதி இல்லை என்று முனகுவதும் புரியும். அது ஒன்றுதான் திருப்பித் திட்டாது என்பது குறித்து விளக்கிக் கொண்டிருக்கவா முடியும்?
அன்று சரியான இடத்தில் பழி வாங்கிவிட்டது. இறக்கம் முடிந்து திடீரென மேடு. பெடலை அழுத்த வேண்டிய கஷ்டம். வாகனம் கிறீச் கிறீச்சென முனகி எரிச்சலை ஏற்படுத்தியது. அப்போதுதான் அந்த வீட்டைப் பார்க்க முடிந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கரியான கையைத் துடைத்துக் கொண்டு பார்த்தபோது அட… இவ்வளவு நாட்கள் எப்படி கவனிக்காமல் போனது. பெரிய வீடு… அளவான வண்ணப்பூச்சு. முன்புறம் அலங்காரச் சீமை ஓடுகள் வெளிர் சிவப்பில்… ஒரு புதுவிதமான கம்பீரம். வீட்டைச் சுற்றிலும் பிரம்மாண்டமான மரங்கள், நிறைய பூச்செடிகள் முன்புறம் தாராளமான இடம். விசாலமான வெராண்டா… ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சருகுகள்… ஏழெட்டு மர பெஞ்சுகள், நடுவே ஊஞ்சல் —
ஊஞ்சல் சுகத்தை இப்போது யாரும் அனுபவிப்பதாகத் தெரியவில்லை.
கோடை விடுமுறைக்கு மாமா வீட்டிற்குப் போகும்போது கூடத்து ஊஞ்சலை விட்டு எழுந்திருக்க மனசு வராது. அக்கம் பக்கம், மாமா பெண் வத்சலா இன்னும் நண்டுசிண்டுகள் என ஏகப்பட்டதுகள் நெருக்கியடித்து உட்கார்ந்து ‘இன்னும் வேகமா இன்னும் வேகமா’ என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும். காலால் தரையில் உதைத்து வேகப்படுத்தலாம். ‘முடியலே பசங்சளே’ என பாரம் தாங்காமல் கிறீச் கிறீச் சென்று கத்தும். “எலேய்… பாத்துடா… கீழே விழுந்துடப் போறீங்க” எனப் பாட்டி அவ்வப்போது எச்சரிப்பாள். நாங்கள் ஒரு கட்டத்தில் இறங்கியவுடன் பாட்டி உட்கார்ந்து கொள்வாள். ஊஞ்சலில் உட்கார்ந்தால் பாட்டு தானாக வந்துவிடும். ஊஞ்சல் சப்தத்தோடு தான் பாடுவதை ‘தேவகாந்தாரி ராகம்’ என்று சாதிப்பாள்.
பழைய ஞாபகங்களை – மன இறுக்கங்களை – உதறிவிடலாமென்றால் அடிக்கடி வீடு ஞாபகத்துக்கு வந்து தொந்தரவு கொடுக்கிறது. சீட்டாடியே வீட்டைத் தொலைத்த அப்பா ஞாபகம் வந்து சங்கடப்படுத்துகிறது. வீடு என்பது உண்மையில் கனவுதான். அதுவும் இந்த வீடு எட்டாக் கனவுதான்!
அந்த ஊஞ்சலில் அவன் உட்கார்ந்திருந்தான். கம்பீரமாக சிவப்பாக புஜங்களும் தோள்களும் புடைத்துக் கொண்டு நிற்க ஆஜானுபாகுவாக நிறைய அலட்சியத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவ்வப்போது காலை நீட்டி தரையை உதைத்து ஊஞ்சலை சீரான வேகத்தோடு இயக்கிக் கொண்டிருந்தான். பேரழகு. ஊஞ்சலுக்குகேற்ற அழகு. கவனித்ததில் எந்நேரமும் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பவனாகவே இருந்தான். ஊஞ்சலோடு பிறந்தவனோ, பிரிக்க முடியுமோ. ஊஞ்சலாடுவதைத் தவிர வேறு லட்சியங்களுண்டோ.
சற்றுத் தள்ளி ஒரு சோபா. அதன் ஓரத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள். கையில் ஒரு புஸ்தகம். அவ்வப்போது புரட்டிப் பார்ப்பதும் எதிர் மேடையில் விதவித வண்ணங்களில் குலுங்கிக் கொண்டிருக்கும் ரோஜாச் செடிகளைப் பார்ப்பதுமாக இருந்தாள். சில நேரம் தூணில் சாய்ந்து கொண்டு பிருஷ்டம் வரை நீண்டிருந்த தலைக் கேசத்தைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். அதில் அபார லயிப்பு. அவளுடைய இயக்கங்கள் எல்லாமே ரசிக்கத் தக்கவையாகவே இருந்தன. அவனுடைய மனைவியாக இருக்க வேண்டும். அவளுடைய முகத்துப் புன்னகை நிரந்தரமானது. இப்படி எல்லோருக்கும் வாய்ப்பது அபூர்வம்! பூசினாற்போன்ற உடம்பில் நல்ல சிவப்பு நிறச் சேலை பிரமாதமாக இருந்தது. அலுக்காத அழகு. ரசிக்கலாமோ தப்பில்லையோ? வறியவர்க்கு அறம் கூற்று. தர்மம் நீதியாகாது. தர்ம நியாயங்கள் கஷ்டப்படுபவர்களுக்கே என்று விதித்திருப்பது அயோக்யத்தனமில்லையோ?
சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வீடு, அவர்கள் எனப் பார்ப்பது அலாதியான சந்தோஷத்தை அளித்தது. எல்லாமே சரியாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்து திருப்திதராததைக் கலைத்துவிட்டு திரும்பவும் திரும்பவும் செய்தது மாதிரி. அந்த வீடு – அவர்கள், மகிழ்ச்சியின் உச்சம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். வீடும் மனைவியும் சரியாக அமைவது அற்புதமானதுதான். வரம்தான்!
இங்கே வாடகை வீடு கூட சரியாக அமைந்ததில்லை. ஒரு வருஷத்தில் ஏழெட்டு வீடு – சந்து, எலி வளை சதா சிடுசிடுத்துக் கொண்டிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரன். பக்கத்து போர்ஷன்காரர்களோடு தீராத அர்த்தமற்ற சண்டை. அனேகமாக ஒவ்வொரு சண்டையின் பின்னணியில் என் மனைவியின் பங்கு கணிசம். வெளியே புறப்படும் ஆண்களுக்கு இதொன்றும் பெரிதில்லை. அவசரம்! தானே எடுத்துப் போட்டுக் கொண்டு இரண்டு வாய் அள்ளித் திணித்துக் கொண்டு ஜீவியத்திற்காக ஓடுவதற்கே சரியாக இருக்கும். ஏதாவது கடுமையான முறையீடு வந்தால் சாயங்காலம் பார்த்துக்கலாம் என்பது மாதிரி சொல்லிவிட்டு ஓடினால் தீர்ந்தது பிரச்சினை. வீடு திரும்ப அவசரம் காட்டுவதில்லை. ஆபீஸ் விட்டவுடன் பொது நூலகம். அப்புறம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு நடை. நடைபாதையில் கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை காட்டுவதாக நீளமாகப் பேசிக் கொண்டிருப்பவனை வெகுநேரம் வேடிக்கை. உலகத்திலுள்ள சகல வியாதிகளுக்கும் மருந்து தருவதாகச் சொல்லி வரிசை வரிசையாக வைத்திருக்கும் பாட்டில்கள் விதவிதமான வேர்கள் மரப்பட்டைகள், உலர்ந்த காட்டுக் காய்கள் – இவற்றைக் காட்டி அவற்றின் மகிமை பற்றி விவரித்துக் கொண்டிருப்பவனை சுவாரசியமாக ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு ஒருவழியாய் வீடு வந்து சேரும்போது பத்தரை பதினொன்றாகிவிடும். அப்போதும்கூட துணைவி பட்டியல் வைத்திருப்பாள்.
நான்காவது போர்ஷன்காரன் ஒரு குடிகாரன். சதா யாரையோ வெட்றேன் குத்தறேன் என்று வைது கொண்டே இருப்பான். வரைமுறையற்ற சப்தத்தைத் தவிர வேறு தொந்தரவில்லை. ஒரே ஒரு தடவை நிதானம் புரியாமல் என் போர்ஷனுக்குள் நுழைய – புடவையை வாரிச் சுருட்டிக் கொண்டு ருக்கு படபடப்போடு அவசரமாக எழுந்து ‘என்னங்க என்னங்க…’ என்று உலுக்கி எழுப்பியது நினைவுக்கு வரும். எதிர் போர்ஷன் ஆசாரப்பாட்டி ‘இந்த வீட்டிலே ஒரு தீட்டு மடின்னு கிடையாது. எல்லாம் ஒண்ணு’ என்று புலம்பிக் கொண்டே இருப்பாள். கடைசி போர்ஷனில் கிருஷ்ணமாச்சாரியார் – தள்ளாத வயது. ஒண்டிக்கட்டை உள்ளூர் பெருமாள் கோயிலில் கைங்கர்யம். சதா வாய் எதையாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். உற்றுக் கேட்டால் பிரபந்தமோ நாராயணீயமோ. நல்ல குரல். சில நேரம் ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய’ – இழையும் ‘அமீர்கல்யாணி’ யாருடனும் பேசிப் பார்த்ததில்லை. சாப்பிட்டாரா தூங்கினாரா என்று யாருக்கும் தெரியாது.
வாழ்க்கையும் பொழுதுகளும் கலவையாய் இருப்பது ஒருவிதத்தில் சுவாரசியமானதுதான்.
திடீரென்று ஒரு நினைப்பு. அவளுக்குப் பாட்டு வருமோ. பாடுவாளோ? அவளுடைய வாயசைப்பைப் பார்த்ததில்லை. ஒரு தேவதைக்குப் பாடவராமல் இருக்குமோ. நளினக் கலைகள் அனைத்தும் கைவரப் பெறாமல் இருக்குமோ. ஊஞ்சலாடுபவன் அடிக்கடி வாயசைப்பது தெரியும். அவன் பாடுவானோ? அடிக்கடி சிரித்துக் கொள்வதும் தெரியும். அவள் ஒரு வினாடி அவன் சிரிப்பை ரசிப்பவளாய் புன்னகைத்ததையும் பார்த்ததுண்டு.
அந்த வெளிர் நீலப்புடவை கூட அவளுக்கு அம்சமாக இருந்தது. அவளுக்குப் பிடித்தமானது வெளிர் நீலமும் சிவப்பும். பிரமிப்பூட்டும் நிறம். ருக்குவும்தான் இருக்கிறாளே. கண்ணை அடிக்கும் திக்கு கலர் கண்டிப்பா ரோஜாப்பூ கலர். கரும்பச்சை, இல்லே அடர்த்தியான மஞ்சள்… காமாசோமா வென்று சுற்றிக் கொண்டு வருவாள். ஒரு நாள் ஏதோ சைக்கிள் ரிப்பேரானதைப் போல அந்த வீட்டின் முன் இறங்கினான். சைக்கிளை ஒரு சுற்று சுற்றிவிட்டு பெடலை அப்படியும் இப்படியுமாய் இரண்டு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு மெல்ல நிமிர்ந்தான். அவளின் புடவை அதைக் கட்டியிருக்கும் நேர்த்தி அதன் மெலிதான பூக்கள், இதமான வண்ணத்தில் தலைப்பு முதலானவற்றை உள்வாங்கிக் கொண்டான்.
மாலை திரும்பும்போது ஏழெட்டு கடைகள் ஏறி இறங்கி ஏகப்பட்ட வசவுகளைக் கடைக்காரரிடமிருந்து பெற்றுக் கொண்டு ‘பொம்பிளைங்க கூட இப்பல்லாம் சீக்கிரம் செலக்ஷன் பண்ணிடறாங்க… நூத்தம்பது ரூபாய்ப் புடவைக்கு இந்தப் பாடு படுத்தறான் மனுஷன்… புடவை வாங்க வந்தியா ஏதாவது சுருட்டிக் கொண்டு போக வந்தியா’ – கிட்டத்தட்ட அதேபோன்ற புடவையைக் கண்டுபிடித்து வாங்கிவிட்டான். கொஞ்சம் பூ… ராயர் கடையிலே நூறு அல்வா… வாங்கிக் கொண்டு வந்தான். “இதென்ன அழுதுவடியற சோகைக் கலர். உங்களை யார் வாங்கி வரச் சொன்னது. பணத்த விட்டெறிஞ்சா எனக்குப் பிடிச்ச கலர்லே நானே வாங்கிப்பேன்ல” என்று மூலையில் தூக்கியெறிந்தாள். இவள் எழுப்பிய தேவைக்கதிகமான கூச்சலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் படபடவென விழித்துக் கொண்டன. எதிர் போர்ஷன் ஆசாரப்பாட்டி… “என்னப்பா தூங்க விடாம சண்டை… இந்த வீட்டிலே குடியிருக்க முடியுமோ நிம்மதியா…” என்று ஆட்சேபணை.
திடீரென்று இருட்டு சூழ்ந்து கொண்டதைப்போல – பிரபஞ்சம் காரிருளில் மூழ்கி காணாமல் போனதைப்போல – சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட அந்நியமாய்ப் போனதைப்போல – உலகத்தின் அத்தனை மேன்மைகளும் கோபித்துக் கொண்டு விலகிப் போனதைப்போல ‘இது தகுமோ இது சரியோ, இது தருமம்தானோ’ என்று உரக்கப் பாட வேண்டும் போலிருந்தது.
சாப்பிடாமலே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான். இவனுடைய கோபத்தை ஆட்சேபிப்பதுபோல் சைக்கிள் கிறீச் கிறீச் சென்று விகாரமாய் ஒலியெழுப்பியது.
சொர்க்கம் – இங்கேதான் குடி கொண்டிருக்க வேண்டும். அவன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான். அவள் ஒரு ரோஜாப்பூத் தொட்டியை சிரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னத்தில் விழுந்த அழகிய குழி வெகுவாகச் சங்கடப்படுத்தியது. மனசில் லேசாகப் பொறாமை! மேன்மையான விஷயங்களில் பொறாமைப்படுவது தருமம் சார்ந்ததுதான். ‘அவர்களுக்கு அது ஏன்? எனக்கு இது ஏன்?’ என்ற தத்துவ விசாரம் வேறு.
தலைக்குளித்த நாளில் நீண்ட கூந்தலைக் காற்றில் உலர்த்திக் கொண்டு சிரிப்பு மாறாத முகத்தோடு வானத்து மேகங்களைப் பார்த்துக் கொண்டு ‘என்ன அழகு! ஒரு கால் அங்கிருந்து இறங்கி பூமிக்கு வந்தவளாக இருக்குமோ? ஊஞ்சலாடும் அவனை அடைவதற்கான தவப்பயணமோ? அந்தப் பயணத்தின் நிறைவு வெற்றியாய்த்தான் அமைந்திருக்கிறது. அவள் மேல் அபார பிரேமையும் அவனின் மேல் அழுத்தமான பொறாமையும் இயல்பானதுதான்.
இரவுகளில் தனக்குள் ஏற்படும் கனவுகள் குறித்து அதீத சந்தோஷம்தான். அவள் அவனைக் கோபித்துக் கொண்டாள். சிரித்தாள். சிணுங்கினாள். ‘ஏன் இன்னிக்கு லேட்… ரொம்ப நேரமா காத்திருக்கேன். இன்னிக்கு காரட் அல்வா பண்ணினேன். உங்க நினைப்பு. சைக்கிளுக்கு கொஞ்சம் எண்ணை போடக் கூடாதா. துடைக்கக் கூடாதா. பரிதாபமா சத்தம் போடுது’ எனச் செல்லமாய் ஒரு கோபம் – ஒரு சிணுங்கல். அந்த நேரங்களில் எல்லா விஷயங்களுமே பிடித்தமானதாயிருக்கும். “தூக்கத்தில் என்ன உளறல். வீட்லே துளி சாமான் இல்லே. என்னத்தைப் பண்ணி என்னத்தைச் சாப்பிடறது. பால்காரருக்கு போன மாசமே பாக்கி. இந்த மாசம் பால் கிடையாதுன்னு சத்தம் போட்டுப் போயாச்சு. மூத்தவனுக்கு ரெண்டு நாளா இருமல். டாக்டரிடம் அழைச்சிண்டு போகணும்.” ரெண்டு தட்டு தட்டிவிட்டுப் போவாள். தரைக்கு வர வெகுநேரமாகிவிடும்.
மனசுக்குள் அழுந்திக் கிடந்த பொறாமை நெருப்பைத் தணிக்க முடியவில்லை. அவர்களின் சந்தோஷத்தைக் குறித்த அசூயை சரியோ நியாயமோ என்றெல்லாம் யோசிக்க வரவில்லை. கடவுள் ஓரவஞ்சனைக்காரர் என்ற கோபமும் வந்துது. சைக்கிளை வேகவேகமாக மிதித்தான். அவனுடைய வேகத்தைத் தாங்க முடியாமல் அது பெரிதாக அலறியது. ‘என்னை விட்டுடு விட்டுடு’ என்று பரிதாபமாகக் கதறியது. ‘பொறாமைப்படாதே கண்ணா’ என்று இடையிடையே அறம் சொன்னது போலவும் இருந்தது.
அந்த இடம் வந்தபோது சைக்கிளை விட்டு இறங்குவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டிருந்தது. வேலையில்லாத நாட்களிலும் ஒரு பயணம் அவசியமாய்ப் போனது. அன்றைய தினத்துக்கான மகிழ்ச்சியை முழுவதுமாய்க் கொள்முதல் செய்யும் அற்புத இடமாக இருந்தது. இன்னிக்கு வெளிர் நீலப் புடவையா இளம் சிவப்பா என்ற படபடப்பு வேறு.
அந்த வீட்டை நெருங்கியபோதே இதமான காற்று வீசியது போன்ற உணர்வு. அந்த வெப்பத்திலும் இதுவோர் அதிசயம். சைக்கிளை வேகவேகமாக மிதித்தான். இன்னிக்குக் கொஞ்சம் தாமதம். இதோ வந்துவிட்டது. வாசனையாய் ரம்மியமாய் மனசு முழுக்க குறுகுறுப்பு நிறைய.
அந்த வீட்டை நெருங்கியபோதே சைக்கிளின் வேகம் குறைந்தது. ‘அடே… இதென்ன கூட்டம் என்றுமில்லாத புதிய சூழல். வித்யாசமாய் விநோதமாய்’
ஊஞ்சலைக் கழற்றி ஓரமாக வைத்திருந்தனர்.. அந்த இடத்தில் நாற்காலியிலும் தரையிலுமாய் ஒரு பத்து பதினைந்து பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ‘என்ன இது… என்ன நடக்கிறது என்ன நடந்தது?’
வெளிர் நீலப்புடவையில் அந்த தேவதை ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. ஏதாவது விசேஷமோ?
யாரோ ஒருவர் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். உடன் தேம்பினார்.
“வைதேகி என்ன பண்றது. எல்லாம் விதி! உன் குடும்ப வறுமை – கஷ்டம். மனநிலை சரியில்லாதவனைக் கட்டி வச்சுட்டாங்க. நீயும் படாதபாடு பட்டுட்டே.எவ்வளவு சொத்து இருந்தென்ன. உன் புருஷன் பண்ணின லூட்டி கொஞ்சமா? சதா ஊஞ்சல்… மத்த நேரத்திலே மூர்க்கக் குணம். கையிலே கிடைக்கறத எடுத்து வீசி உன்னை த்வம்சம் பண்ணிட்டு அப்புறம் ஊஞ்சல்… பாவி என்ன நினைச்சானோ. தூக்கிலே தொங்கிட்டான். உன் கஷ்டமா விடிவா – தெரீலே…
திடீரென்று மையிருட்டு. சைக்கிள் தாறுமாறாய் ஓடியது. திசை புரியாமல் –