நான் பதில் சொல்லவில்லை. எனக்கு கௌரியிடமிருப்பது நட்பா, பாசமா, காதலா என்று புரியாத நிலையில் என்னால் இதற்குச் சம்மதிக்க முடியவில்லை. மேல் படிப்புக்காக நான் அமெரிக்கா சென்ற பிறகுதான் ஒருநாள் எனக்கு புரிந்தது கௌரியை நான் நேசிப்பது. அங்கிருந்து அம்மாவிடம் தொலைபேசியில் பேசினேன்.
"நா கௌரியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ ஏற்பாடுகளைச் செய்."
"அவளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிப் பதினைஞ்சு நாளாச்சு. நீ ஏதாவது வெள்ளைகாரியை இழுத்துண்டு வா."
அம்மா கோபமாக போனை வைத்து விட்டாள்.
அதன் பிறகு நான் கிராமத்திற்கு வரவில்லை. அம்மாவைத் தனியே விட்டுவிட்டு அமெரிக்காவில் வேலை பார்க்க விருப்பமில்லாமல் புதுதில்லியில் கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு இந்தியா திரும்பினேன். அம்மாவையும் அப்பாவையும் தில்லிக்கு அழைத்துக் கொண்டேன்.
அம்மா எத்தனை பெண்ணைப் பார்த்தாள். எல்லா முகத்திலும் கௌரி தெரிய நான் திருமணத்தை மறுதலித்தேன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று வாழ எனக்கு விருப்பமில்லை. அடுத்தவன் மனைவியை நினைப்பது பாவம் என்று கௌரியை மறக்க முயற்சித்தேன். பிசாசு மாதிரி அலுவலகப் பணியில் என்னை மூழ்கடித்துக் கொண்டதில் காலப் போக்கில் கௌரியின் நினைவு மங்கிப் போயிற்று. இங்கு வரும்போதுதான் மீண்டும் அவள் நினைப்பு வந்தது. சொல்லி வைத்தாற்போல் அவளும் என்னை எதிர் கொண்டழைக்கிறாள்.
நான் பெருமூச்சு விட்டேன். சந்தியா தேவதை விடைபெற்று இருளரசன் ஊரை ஆக்கிரமித்திருந்தான். நான் எழுந்து முகம் கை கால் கழுவிக் கொண்டு கேசத்தைச் சரி செய்து கொண்டு கௌரியின் வீட்டிற்கு வந்தேன். மங்கின விடிவிளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்க, கூடத்திலிருந்த கட்டிலில் கிழிந்த நாராகப் படுத்திருந்தார் அவளது தந்தை.
“வாகீசன்!” நான் குனிந்து என் பெயா் சொல்ல, அவா் கண்கள் உடைந்தது. சைகையில் ஏதோ சொல்ல முயன்றார்.
எனக்கு விளங்கவில்லை. குரல் கேட்டு அதற்குள் கௌரி அங்கு வந்தாள்.
"உட்கார் வாகீசா!" என்று ஊஞ்சலைக் காட்டினாள்.
"அப்பா என்ன சொல்றார்? எனக்குப் புரியல."
"ரொம்ப காலம் கழிச்சு உன்னைப் பாக்கறார் இல்லையா. அந்த சந்தோஷம்."
"சந்தோஷம் மாதிரி தெரியலையே. கண் கலங்கறதே."
"ஆனந்தக் கண்ணீரா இருக்கப்படாதா?" கௌரி காபி கலந்து எடுத்து வந்தாள்.
"வீட்ல எங்க, யாரையும் காணும். வெளில போயிருக்காளா?"
"யாரு..?"
"உன் புருஷனும் குழந்தைகளும்."
"மத்தியானம் நன்னார்க்குன்னு கூட நாலு எள்ளுருண்டையும் சுகியனும் கேட்டு வாங்கிச் சாப்ட்டயே அது யாருக்காக பண்ணினதுன்னு தெரியுமோ?"
"யாருக்கு?"
"எம் புருஷனுக்குதான். கல்யாணமாகி ஆறாம் மாசம் காவேரி வெள்ளம் அவரை முழுங்கினப்பொ அதிர்ச்சியில என் வயத்து சிசுவும் கரைஞ்சு போயாச்சு. தெவசம் யாருக்குன்னு கேட்டயே. அவருக்குத்தான். சனிப் பொணம் கூடவே எங்கம்மாவையும் கூட்டிண்டு போய்டுத்து."
நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஆறே மாதத்திலா? அப்படியானால் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமே. ஏன் சொல்லவில்லை? ஏன் இந்த விஷயத்தை என்னிடமிருந்து மறைத்து விட்டாள்? நான் சிலையாய் அமா்ந்திருந்தேன்.
"சாரி கௌரி…" என் வாய் முணுமுணுத்தது அவளுக்குக் கேட்டிருக்குமோ எனத் தெரியவில்லை.
"எல்லாரும் என் விதின்னு சொன்னா. நா அப்டி நினைக்கல."
"என்ன சொல்றே?"
"உள்ள ஒண்ணு வெளில வேற ஒண்ணுன்னு வாழ்ந்தா இப்டித்தான் ஆகுமோ என்னமோ?"
நான் அதிர்ச்சியோடு நிமிர்ந்தேன்.
"என்ன சொல்ற நீ?"
"இனிமே அதைச் சொல்லி ஆகப் போறது ஒண்ணுமில்ல. கல்யாணம் வேண்டாம்னு பொம்மனாட்டி சொன்னா யார் கேக்கறா?"
கௌரி மெல்லிய பெருமூச்சோடு பிசைந்து வைத்திருந்த கோதுமை மாவை உருட்டிச் சப்பாத்தி இட ஆரம்பித்தாள்.
எனக்குப் புரிந்தது. சில உணா்வுகள் சொல்லாமல் விளங்கக் கூடியவைதான். குற்றம் அவளுடையதல்ல. சரி என்று ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால், காட்சிகள் வேறுவிதமாக மாறியிருக்கக் கூடும்.
அன்றிரவு நான் உறங்கவில்லை. எது நடந்து விடக் கூடாது என்று அம்மா இந்த விஷயத்தை என்னிடமிருந்து மறைத்தாளோ அதை நடத்திவிடும் முடிவுக்கு நான் வந்திருந்தேன். வீட்டை விற்கும் எண்ணத்தை அப்போதைக்கு மூட்டை கட்டி வைத்தேன்.
மறுநாள் காலையில் நான் கிளம்பும்போது வழியனுப்ப கௌரி வந்தாள். பழைய பெட்டியில் பழுத்துப் போயிந்த பொன்னியின் செல்வனைச் சுத்தம் செய்து எடுத்து வைத்திருந்ததை அவளிடம் கொடுத்தேன். அவள் கண்கள் ஒரு வினாடி பளிச்சிட்டன.
"நாம மறுபடியும் சினிமா எடுப்போம் கௌரி. நீதான் குந்தவை. நான் வந்தியத் தேவன். சரியா? வீட்டைத் தூசு அடைய விடாதே. நா மறுபடியும் வருவேன்." சாவியை அவளிடம் நீட்டினேன்.
அவள் முகத்தில் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒருசேரப் பரவியதை ரசித்தபடி நான் கையசைத்து விடைபெற்றேன்.
(‘தகப்பன் சாமி’ மின்னூலிலிருந்து)
“