நம்முடைய மெகா சீரியல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கும் நமக்கு அக்கரையில் மெகா சீரியல்கள் எப்படி இருக்கும் என்று அறியத் தோன்றுவது இயல்பே! ஆனால் அதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விடுவோம். நம்முடைய மெகா சீரியல்களின் கோளாறுகளின் பிறப்பிடமே அக்கரைதான் என்றால் அது மிகை இல்லை. இதை சோப் ஒபேரா என்று அங்கே கூறுகின்றனர். ‘சோப்’ ‘சோப்’ என்று டி.வி. நிகழ்ச்சிகளைக் கூறும் போதும், பத்திரிக்கைகளில் படிக்கும் போதும் சோப்பிற்கும் இந்த சீரியல்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் எழும். டெலிவிஷன் வராத ரேடியோ காலத்திலும் பின்னர் டெலிவிஷன் வந்த போதும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக சீரியல்கள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரதாரராக ஸ்பான்ஸர் செய்தவை பெரிய பெரிய சோப் தயாரிக்கும் நிறுவனங்கள். ப்ராக்டர் அண்ட் கேம்பிள், கால்கேட் பாமாலிவ், பெப்ஸோடெண்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் இவற்றிற்கு ஆதரவு அளிக்கவே இவை சோப் ஒபேரா என அழைக்கப்படலாயின.
நம்முடைய சீரியல்களில் நாம் காணும் எல்லாக் ‘கூத்துகளும்’ அக்கரை சீரியல்களிலும் உண்டு. காதல், கள்ளத் தொடர்பு, செக்ஸ், பழி வாங்குதல், கடத்தல், விபத்து, கற்பழிப்பு, கொலை ஆகிய எல்லாமே இவற்றில் அடக்கம். இரட்டையர்களாக திடீரென்று தோன்றும் கதாபாத்திரங்கள் நம்மைக் குழப்பி கதையை நீட்டிப்பதும் இவற்றில் சகஜம்!
அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா சீரியல்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோரும் பெரும் பணக்காரர்களாகவே இருப்பர். (நமது பாலிவுட் சினிமா ரேஞ்சில் பெரும் வீடுகளும் கவர்ச்சி உடை அணிந்த கன்னிகளும் இந்த சீரியல்களில் பார்க்க முடியும்). ஆனால் பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சீரியல்களில் அதைப் பார்க்கின்ற சாமான்யரைப் போலவே உள்ள கதாபாத்திரங்கள் கதைகளில் பெரும்பாலும் இடம்பெறும். பொதுவாகவே இந்த சீரியல்களில் வரும் வில்லன் வில்லிகளின் ‘ரிச்’சான நடை உடை பாவனைகள் அனைவரையும் பாடாய்ப் படுத்தும். ஒரு கதை என்றால் அதில் பல இழைகள் இருக்கும். கிளைக்கதை, அதற்குள் கிளைக்கதைகள் என்று முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்! ஒரு எபிசோட் முடியும் போது அடுத்த எபிசோடைப் பார்க்க ஆவலைத் தூண்டும் வகையில் இவை அமைந்திருக்கும்.
நம்முடைய சீரியல்களில் வரும் ‘இவருக்கு பதில் இவர்’ அங்கு தான் ஆரம்பம். ஒரே பாத்திரத்தில் நான்கு, ஐந்து நடிகர் நடிப்பதும் உண்டு. ஏனெனில் அந்த சீரியல் அத்தனை காலம் நீண்டிருக்கும். இதை விடக் கூத்தான விஷயம் ஒரே சீரியலில் ஒரே நடிகர் ஐந்து ஆறு பாத்திரங்களில் தோன்றுவது தான்! இதற்கும் காரணம் சீரியல் பல வருடங்கள் நடைபெறுவதுதான்! இதை விடக் கேலிக்கூத்தான இன்னொரு விஷயம் அங்கு ஒரு கதாபாத்திரம் இறந்து விட்டார் என்றால் அதை கேரண்டியாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் திரும்பி வந்தவுடன் இதுவரை அவர் கோமாவில் இருந்ததாக ரீல் விடப்படும். ‘தி போல்ட் அண்ட் பியூட்டிஃபுல்’ சீரியல் அனைவரும் அறிந்த பிரபலமான ஒன்று. இதில் டாக்டர் டெய்லர் பாரஸ்டரின் இறுதி யாத்திரை கூட முடிந்து விடும். ஆனால் நடிகை ஹன்டர் டைலோ 2005-ல் ‘திரும்பி வந்த போது’ அவர் ‘இறுதியாத்திரையில்’ கோமாவில் இருந்ததாகச் சொல்லப்பட்டு கதை நீட்டிக்கப்பட்டது! எண்பதுகளில் வந்த டல்லாஸ், டைனஸ்டி ஆகியவை பணக்காரக் குடும்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை.
உலகின் மிக நீண்ட டி.வி.டிராமா என்ற புகழைப் பெறுவது கைடிங் லைட் என்ற பிராக்டர் அண்ட் கேம்பிள் புரடக்ஷன்ஸின் தயாரிப்பு தான்! இது 1952-ம் வருடம் ஜூன் 30-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடக்கிறது. கின்னஸில் இடமும் பிடித்து விட்டது! இதற்கு முன்னால் 1937-ம் வருடம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இது ஆரம்பிக்கப்பட்டு ரேடியோவில் 15 நிமிட சீரியலாக ஒலிபரப்பப்பட்டு வந்தது!
சேனல் 4-இல் 1960-ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் தேதி முதல் நடக்கும் ஹஸ்தா லா கோகினா என்ற குக்கரி ஷோவை மெக்ஸிகோவைச் சேர்ந்த திருமதி ஜராடே நடத்தி வருகிறார். இந்த ஷோவும் கின்னஸில் இடம் பிடித்து விட்டது! உலகின் நீண்ட நாட்கள் நடக்கும் டி.வி வெரைடி ஷோ என்ற புகழைப் பெறுவது சபாடோ ஜிஜாண்டே. 1962 ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இதை மரியோ க்ரெஸ்பெர்கர் என்பவர் நடத்தி வருகிறார். இவரை டான் பிரான்ஸிஸ்கோ என்ற பெயரில் அனைவரும் அறிவர்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றால் அக்கரைக்கு இக்கரை பச்சைதாங்கோ!
(நன்றி : சின்னத்திரை 1-9-07 இதழ்)
“