உலகினிலெம் வசைபோமோ?

பண்டுதொட்டு வந்த அறம் பாழாகிப் போயினதோ!
குண்டுபட்டு வீழ்ந்ததுவோ குவலயத்தின் ஆன்மநெறி!!
(வேறு)

வாக்களித்த பிராயத்தில் நாற்பத்து ஆறின்னும்
வாழாது காத்திருக்கப் போனதுவும் என்னேயோ?
ஊக்கத்தைத் தந்தனைநீ உணர்ச்சியையும் ஊட்டினைநீ
உலகத்தின் கண்கள்முன் நம்பண்பை உயர்த்தினைநீ
தூக்கத்தில் அமிழ்ந்தோரும் விரக்தியினால் சோர்ந்தவரும்
துடிதுடித்து எழுந்துலவத் துணிச்சலையும் தந்தனைநீ
ஆக்கத்தின் சுனைப்பெருக்கே! அன்பறத்தின் உருவகமே!
அப்பாவே! அருளாளா! அழுகின்றோம்; – உனைக்
காணோம்

அன்புத் தகளிதனில் அஹிம்சையெனும் நெய்யூற்றி,
அடித்துப் புரள்வோரும் அக்குண்டைப் பெற்றோரும்
என்புருகும் தியாகத்தால் இடுதிரியும் சமைத்ததனில்,
எந்நாளும் வையகத்தின் இருட்பாதை ஒளிபெறவே
பொன்தீபம் ஏற்றிவைத்த பொறையுருவே! புண்ணியனே!
பொல்லாத கொலைவெறியால் பொய்யான
மதப்பற்றால்

மன்பதைக்குத் தாயகமாம் மார்பினிலே பட்டகுண்டு
மலர்ச்சரமாய் மாறாது மண்ணிலுனை வீழ்தியதேன்?

கட்டுண்டே பொறுத்திருந்தோம்; காலமும்தான் மாறிற்று!
கண்ணபிரான் சொன்னபடி காந்திமகான் நீவந்தாய்!
பட்டும் படாததுமாய்ப் பனித்துளிபுல் இதழிற்போல்
பயத்தாலும் பொறுப்புணராப் பாங்காலும்
துயின்றோரை

மட்டில்லாத் தைரியத்தால் மறைநாவின் திருமொழியால்
மாற்றியிங்கு ஆக்கினைநீ மனிதர்களாய்; நடுநடுவே
பட்டினியால் காய்ந்தனைநீ – பதினைந்து தடவைகள்
பகையகன்று யாம்வாழ; பலிகொடுத்தோம்
நாங்களுனை

"சத்தியமே துணையாகச் சாம்ராஜ்யத் தோடிவரே
சமர்செய்யப் புறப்படுதல் சாத்தியமா? முற்றிவிட்ட
பித்தந்தான்! இல்லையெனில், பிரிட்டனையே எதிர்பாரோ?
பின்னும்எதோ ராட்டினமாம்; பிதற்றுகிறார் ஏதேதோ!
பத்தாம் பசலியைப்போல்; பாருங்கள் மேற்கினிலே;
பறக்கின்ற கோட்டைகள்; பரமாணு யந்திரங்கள்!"
உத்தமனைப் பழித்தவரும் ஒருமனிதன் அறத்தின்முன்
ஒன்றுமவை நில்லாது ஓடுவதை உணர்த்திட்டார்.

ஆனாலும் பின்ஏனோ அண்ணலவர் திருஉயிரை
அரக்கனொரு அறியாதோன் அணிவகுத்த சிலகுண்டு
பூனாவின் சிறையிருந்து புறப்பட்ட கஸ்தூரிப்
புனிதவதி உயிருடனே புகவைத்து விட்டதந்தோ
தானாபதி அவர்தான்; தள்ளாத ஓர்தாத்தா
தருக்குமுகும் நாய்க்குடைகள் தலைசாயும் அவர்முன்னே!
சோனா மாரியெனச் சொரிந்தாலும் சொல்லம்பை
சொக்குநகை முறுவலிக்கும் சொரூபியினைக்
காணோமே!!

களிமண்ணின் கூடியிருந்து, கயமைக்குத் தலைவணங்காக்
கங்கணமே பூண்டதனைக் காரியத்தில் நிறைவேற்றும்
எளிதற்ற சாதனையில் எதிர்த்தோன்றும் இன்னல்களை
எத்துணையும் கருதாத எண்ணற்ற வீரர்களைத்
துளிக்கூடத் துணையின்றித் தூய்மையிலும் வழுவாமல்
தோற்றினையே! கடவுளெனத் துலங்கினையே! உனை
மாய்த்தோம்;

உளியெடுத்துக் கல்செதுக்கி உருவமைத்துக் கோவிலிலே
உனைவைத்துக் கும்பிடலாம் உலகினிலெம்
வசைபோமோ?

About The Author

1 Comment

  1. P.BALAKRISHNAN

    This ERANGARTPAA -KAIYARUNILAI-is written as if Gandhiji was shot dead yesterday!-Nadru.-Arima Elangkannan

Comments are closed.