ஜானகிக்கும் அவர்களைப் பிடித்துப் போய் விட்டது.
‘அண்ணி.. அண்ணி’ என்று அவர்கள் உறவு கொண்டாடுவதை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.
"சொல்லிட்டீங்களா. மனோகர்தான் பணம் தரார்னு"
பதறி விட்டேன்.
"ஊஹ¥ம். நீயும் சொல்லிராதே. மனோகர் அனுமதி தருகிறவரை வாயைத் திறக்கக்கூடாது"
எழுத்தாளனுக்கே உரிய அடுத்த அரிப்பும் வந்து விட்டது.
‘இதை அப்படியே ஒரு கதையாக்கினால் என்ன?’
முதலில் முழு மனசாய் எழுத முடியவில்லை. மனோகர் என்னைப் பற்றித் தப்பாக நினைக்கலாம். அல்லது அவன் உதவி செய்கிற குடும்பத்திற்கு உண்மை தெரிந்து விடக் கூடும். எழுத வேண்டும் என்கிற என் ஆர்வத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எழுதி விட்டேன். ஜானகியிடம் படிக்கக்க் கொடுத்தேன்.
"என்னை மிரட்டிட்டு நீங்க கதையாவே எழுதிட்டீங்களா?"
"எனக்கு இந்த தீம் பிடிச்சுப் போச்சு. அதான்"
"இப்ப என்ன செய்யப் போறீங்க?"
"பத்திரிகைக்கு அனுப்ப முடியாது. மனோகர் தப்பா நினைச்சுக்குவார்"
அலுவலகத்தில் ஏதோ வேலைக்கு நடுவில் அந்த திடீர் யோசனை.
‘கதையை மனோகருக்கே அனுப்பினால் என்ன?’
அவ்வளவுதான் யோசனையை உடனே செயலாக்கி விட்டேன். வழக்கமாய் உடனே பதில் வந்து விடும். பதினைந்து நாட்களுக்குப் பின்னும் பதில் இல்லை. எனக்குள் சங்கடமானது. என்மேல் நம்பிக்கை வைத்திருந்த ஒருவரை ஏமாற்றி விட்டேனா?. மறுபடியும் அந்தக் கதையின் காப்பியை எடுத்துப் படித்துப் பார்த்தேன்.
சந்தர்ப்பவசத்தால் ஜெயிலுக்குப் போன ஒருவன் தன் நண்பன் மூலமாக அநாதரவாக விட்டு வந்த தன் குடும்பத்திற்கு உதவுகிறான். உண்மை தெரிந்த பிறகு அவனை சபித்துக் கொண்டிருந்தவர்கள் விடுதலையாகி வரும் நாளுக்காகத் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று முடித்திருந்தேன். ‘சிறைப் பறவைகள்’ என்று தலைப்பு.
‘நெஜம்மா நாங்கதான் ஜெயில்ல இருக்கோம். அவனைப் பார்க்காத சோகத்தை தண்டனையா அனுபவிச்சுகிட்டு சிறைப் பறவைகளா காத்திருக்கோம்’ என்று முடித்திருந்தேன்.
மீண்டும் படித்தபோது தவறு எதுவும் புலப்படவில்லை. இன்னொரு கடிதம் எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியது.
20வது நாள் பதில் வந்தது.
‘அருமையான கற்பனை. ரசித்துப் படித்தேன். உடனே பதில் போடாததற்கு மன்னிக்கவும். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. கடும் ஜுரம். இன்றுதான் முழுமையாகக் குணம் அடைந்தேன். உடனே உங்களுக்குப் பதில் எழுதி விட்டேன்’
ஆனால் அந்தக் கதையைப் பிரசுரத்திற்கு அனுப்பலாமா என்பதற்கு பதில் இல்லை. ஜானகியிடம் காட்டினேன்.
"வேணாம்னு சொல்லியிருப்பாரே?" என்றாள்.
எனக்கு அதில் திருப்தி வரவில்லை. மனோகர் என் முடிவிற்கு விட்டுவிட்டதாகத் தோண்றியது. அவன் வெளிப்படையாக சம்மதம் தராதபோது எனக்கும் அனுப்ப மனம் வரவில்லை.
சந்தானம் – என் அலுவலக நண்பர் – கேட்டார்.
"நேற்று உங்களை ராம்நகர் பக்கம் பார்த்தேன். அங்கே யார் இருக்காங்க?"
நெருங்கிய நண்பர்தான். சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்திருந்தது சட்டென்று வெளிப்பட்டு விட்டது. ரகசியம் காப்பதில் எனக்கு அத்தனை சாமர்த்தியம் இல்லைதான்.
"என்ன ஆச்சர்யம் பாருங்க. சொந்தக் குடும்பத்திற்கே இன்னொரு நபர் மூலம் உதவி செய்ய வேண்டியிருக்கு. இதுதான் விதி"
சொன்ன பிறகு சத்தியம் வாங்கிக் கொண்டேன். ‘யார்கிட்டேயும் சொல்லிராதீங்க’
இரண்டு நாட்கள் கழிந்தன. வீடு திரும்பியபோது மனோகர் உதவுகிற குடும்பத்து மூத்த பெண் என் வீட்டில் காத்திருந்தாள். ஜானகியிடமும் பதற்றம்.
"ஏதாச்சும் சாப்பிடக் கொடுத்தியா?" என்றேன்.
"எதுவுமே வேணாம்னு சொல்லிட்டா. என்ன விஷயம்னு கேட்டா பதிலே இல்லை. நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டு பேசாம உட்கார்ந்திருக்கா"
"என்னம்மா.. யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா?"
"அம்மா உங்களை அழைச்சுகிட்டு வரச் சொன்னாங்க" என்றாள் என் முகம் பார்க்காமல்.
என்ன நிகழ்ந்தது.. திகைப்புடன் போனேன்.
என்னை உட்காரக் கூடச் சொல்லவில்லை.
"இனிமேல நீங்க இங்கே வராதீங்க. நீங்க கொடுத்த இந்த மாசப் பணம் இதோ. இதுக்கு முன்னால நீங்க கொடுத்த பணத்தை எப்படியும் திருப்பிக் கொடுத்திருவோம்"
"என்னம்மா.. என்ன ஆச்சு?"
"வேணாங்க. எங்களை விட்டுருங்க"
எதுவும் புரியாமல் வெளியே வந்தேன். தெரு முனையில் சந்தானத்தைப் பார்த்தேன்.
"ஒரு தப்பு நடந்து போச்சு" என்றார் தவிப்புடன்.
"என்ன?"
"நீங்க சொன்னதை அப்படியே என் வீட்டுக்காரியிடம் உளறிட்டேன். அவ சும்மா இல்லாம அந்த வீட்டுல போய் சொல்லிட்டா. அப்புறம்தான் தெரிஞ்சுது. அவங்களோட இந்த நிலைமைக்குக் காரணமே மனோகர்தான்னு."
குடும்பத் தலைவன் இறப்பிற்குக் காரணமாய் இருந்த மனோகர் பிராயச்சித்தமாய் இந்த உதவியைச் செய்திருக்கிறான். என் அஜாக்கிரதையால் தப்பு நடந்து விட்டது. மனோகருக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்.
ஜானகியும் தன் பங்கிற்கு என்னைச் சாடினாள்.
"லேடீஸைக் குறை சொல்வீங்களே. இப்ப நீங்களே சொதப்பிட்டீங்க"
எழுதிவிட வேண்டியதுதான். மனோகர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க வேண்டியதுதான்.
பதில் வருகிறவரை நிம்மதி இல்லை. ஒரு மாதம் கழித்து ஜெயிலரிடமிருந்து பதில் வந்தது.
"மனோகர் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தார். அவர் உடல் நிலை மீண்டும் மோசமாகி ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். உயிர் பிரிந்த கடைசி நிமிடம் வரை உங்கள் நினைவுதான் அவருக்கு. அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் நான் அவருடன் பிறக்க வேண்டும் என்று சொன்னார். அவர் உறவினர்கள் என்று யாரும் இல்லாததால் ஜெயில் நிர்வாகமே இறுதிக் கடன்களைச் செய்து விட்டது. உங்களுக்குத் தகவல் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்."
என் கடிதம் மனோகர் பார்வைக்கே போகவில்லை. தபாலில் தவறி இருக்கிறது. கடைசி வரை என்னைப் பற்றி நல்ல நினைப்புடன் இருந்திருக்கிறார்.
ஒரு கைதிக்கு தன் தவறின் பிராயச் சித்தம் தெரிந்திருக்கிறது.
ஆனால் எனக்கு?
“