எந்தக் கூட்டத்திலும் தனியே அடையாளப்படும் அம்சவேணி. தோழிகளோடு ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்க குடம் தூக்கி வந்தால் அவள் மாத்திரம் தனியே கண்ணில் படும் மர்மம் என்ன? மனம் அவளை மாத்திரம் குறித்துக் கொள்ள, கண் அவளை மாத்திரம் பின் தொடர, என்று வேடிக்கை பண்ணுகிறது. சாயங்கால பூஜையில் ஈஸ்வர சந்நிதியில் கற்பூரங் காட்டுமுன் கணீரென்று அவள் பாடக் கேட்கவே கூட்டம் சேரும். ஈஸ்வரனைப் பார்க்க அல்ல அந்தக் கூட்டம். ஈஸ்வரனே அவள் பாட காத்திருக்க வேண்டும், என்றெல்லாம் ஊரில் வேடிக்கையாய்ப் பேசிக்கொள்வார்கள். அவளுக்குப் பின் ஓதுவார் ரெண்டு பதிகம் பாடுவார். நன்றாகத்தான் பாடுவார். என்றாலும் கற்பூர ஆரத்திக்குள் பிராகாரம் சுத்திவிட்டு வந்துவிடலாம் என்று கூட்டம் கரையும். ஆனால் இளைஞர் கூட்டம் அப்படியே தங்கி நிற்கும். அவர்கள் அம்சவேணியுடன் பிராகாரம் சுத்த காத்திருந்தார்கள்.
பையன்களிடத்தில், அம்சவேணி யாருக்கு, என்கிற ஒரு ரகசியக் கேள்வி, பரபரப்பு இருந்தது. யாரும் நேரடியாக கேட்டுக் கொள்ளாவிட்டாலும் இருந்தது. எனக்குத்தான், என்று சொல்ல எவனுக்கும் நாக்கு உள்ளே இழுத்துக்கொள்கிறது. அம்சவேணி ஒரு கிராமத்தின் கனவு… அவள் கல்யாணம் என்பது ஊர்த்திருவிழா போல, அது ஒரு வைபவம்…
அவன் வசிக்கும் தெருவில்தான் அவளும், அப்பா, அம்மா, ஒரு தம்பி… குடியிருந்தார்கள். அவள் தம்பியிடம் பழக, அவனுக்கு மிட்டாய் சாக்லேட் என்று வாங்கிக்கொடுக்க, மற்ற பையன்களிடையே போட்டா போட்டி.
இதில் கிரிதரன் பாடுதான் சிக்கல். அவளிடம் பேச அவனுள் துடிப்பாய் இருந்தாலும். கூச்சம் அவனைப் பின்னுக்கு இழுத்தது. அதே தெரு, நாலு வீடுதள்ளி எதிர்வாடையில் அவள் வீடு. தண்ணீர் எடுக்க, போக வர அவள் அவன்கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தாள். தற்செயலாக வாசல்பக்கம் வந்தாப்போல கிரிதரன் வந்து நிற்பான். சட்டென அவள் வீட்டுப்பக்கம் பார்ப்பான். ரொம்ப நேரம் பார்க்க முடியாது. கூச்சமாய் இருக்கும். உள்ளேயிருந்து அப்பாவோ அம்மாவோ அவனை கவனித்துவிட்டு, ”ஏய் கிரி… என்ன பண்றே?” என்று கேட்டுவிடுபார்களோ என்ற நினைப்பே வெருட்டி விடும். அவர்கள் தப்பாய் நினைக்கா விட்டாலும், இது தப்பு, என்கிற உள்குரலை என்ன செய்ய?
நல்ல பையன் எல்லாரும் அத்தனை நல்ல பையன்கள் அல்ல, என புன்னகையுடன் நினைத்துக்கொண்டான். வெளிப்பார்வைக்குத் தெரியாவிட்டாலும் எல்லாரிடமும் உண்டு குடல் வால், பரிணாமத்தின் மிச்சம்… அதனால்தான் வாத்தியார் சொல்கிறாரே என்று கொஞ்ச நேரம் அமைதி காக்கிற பையன்கள் சட்டென வெடித்துச் சிதறுகிறார்கள். பள்ளிக்கூடம் விட்ட ஜோரில் அவர்களிடம் தான் என்ன விடுபட்ட உற்சாகம்…
ஒருவேளை எனக்கு ஒரு தங்கை இல்லாதிருந்தால் நான் இன்னும் அவளுடன், அம்சவேணியுடன் நெருங்க முயற்சி செய்திருப்பேனோ என்னவோ? அட போடா, என தலையை உதறிக் கொண்டான்… நல்லவேளை பையன்கள் யாரும் இப்பவும் கவனிக்கவில்லை. மனசை கொஞ்சம் அடக்கினால் நல்லது. பையன்கள் சப்தமிட்ட காலங்களில் அவர்கள் நம்மை கவனிக்கக் கூட மாட்டார்கள். அவர்கள்உலகத்தில் உற்சாக நீச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். இத்ந அமைதிதான் எனக்கு யோசனை. என்னை அவர்கள் கவனிக்கக் கூடும். எனக்கே இந்த அமைதிதான் இப்போது சிக்கல். மனம் தன்னைப்போல விடுபட்டுத் துள்ளுகிறது.
கையைப் பின்னால் கட்டிக்கொண்டு நடந்தான் கிரிதரன். அம்சவேணி. அம்சவேணி… யாரோ பையன் விடைத்தாள் கேட்டான். மளமளவென்று எழுதித் தள்ளுகிறான் போல. போய்த் தந்துவிட்டுத் திரும்பினான். ம் என்ன நினைத்தோம்… அவனவன் தங்கச்சியை வைத்தே அடுத்த பெண்ணுக்கு பிராக்கெட் போடத் தயங்குவதே இல்லை.
அன்னிக்கு பத்தாங் கிளாஸ் ரமணி பற்றி அவன் சிநேகிதன் கிருஷ்ணன் இவனிடம் வந்து பிராது கொடுத்தான். ”சார் இந்த ரமணியைக் கண்டிச்சி வெய்ங்க. என்னைப் பார்க்க வரதாச் சொல்லி, நான் இல்லாத சமயம் எங்க வீட்டுப் பக்கம் வரான். எந் தங்கச்சிகிட்ட எதும் பேசறான்.” அவனைக் கூப்பிட்டுக் கேட்டால், ”அட அதொண்ணில்ல சார்” என்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறான் ரமணி. ”இனிமே அவங்க வீட்டுப் பக்கமே நீ போகக்கூடாது. இந்த விவகாரத்தை இப்பிடியே விட்றலாம். ஹெச். எம். வரை போக வேண்டாம்…” என்றான் கிரிதரன்.
”எம்மேல ஒண்ணும் தப்பு கிடையாது சார்” என்று ரமணி அவள் எழுதிய காதல் கடிதத்தை எடுத்துக் காட்டினான்.
”டேய் படிங்கடா முதல்ல. இதெல்லாம் என்ன….” என்றான் கிரிதரன். ”இந்தா உன் கையினால இதைக் கிழச்சிப் போடு. நல்லா படி, நல்ல வேலைன்னு உக்காரு. அப்பறம் அந்த வயசில் இதெல்லாம் வெச்சிக்கலாம்… கேட்டுதா?” என்றான் கண்டிப்புடன். என்றாலும் சட்டென அப்போதும் மனதில் அம்சவேணி மின்னல் போல வெட்டியதைத் தவிர்க்க முடியவில்லை.
சில பெண்கள் எப்படி தைரியசாலிகளாய் இருக்கிறார்கள் என நினைக்க ஆச்சர்யம் ஏற்பட்டது. முடிவு என்று எடுத்துவிட்டால் இந்தப் பெண்கள் அதில் காட்டுகிற தீவிரம். எதிர்ப்புகள் மேலும் மேலும் அவர்களை முறுக்கிக் கொள்ளத்தான் வைக்கிறது. யாரையும் சட்டை பண்ணாத நிமிர்வு, துணிச்சல்.
அம்சவேணியின் தைரியம் ஊரில் யாருக்கு வரும்? ஏண்டி பொண் கொழந்தையாடி நீ? இப்படி கலீர்னு சிரிக்கிறியே,,, என அவளைக் கட்டுப்படுத்துவார் யார். ஊரே அவளைக் கொண்டாடியது. அவளுக்கு யார் காதல் கடிதம் எழுத முடியும்?
கடிதம் அல்ல அது, மனு…
அத்தனைக்கு வசதியான குடும்பம் என்றுகூட இல்லை. அவள் அப்பா பஞ்சாயத்து அலுவலகத்தில் குமாஸ்தா. ஆட்சி மாற கட்சி மாற எல்லாருக்கும் சலாம் போட்டே அவர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இருந்த சம்பளத்தில் தினசரிகாலை முந்தினநாள்ச் சாதம் தண்ணியூத்தி, பழையது தான். என்றாலும் அவள் உடம்பில் என்ன தேஜஸ், எப்படி வந்தது அந்த மினுமினுப்பு. வாளிப்பு. படிப்பிலும் அத்தனை சூட்டிகை என்று சொல்ல முடியாது. என்றாலும் எப்படி வந்தது இந்தப் பெருமை. அவள் வயசுக்கு வந்ததை ஊரே கொண்டாடினாற்ப்போல இருந்தது. அடுத்த ரெண்டு வருஷத்தில் அவள் மூக்கு குத்திக் கொண்டபோது, கிராமத்தில் தலைப்புச் செய்தி அதுதான்.
அவளோடு பேச சந்தர்ப்பங்கள் வராமல் இல்லை. ஆ, அவளே பேசினாள் ஒருமுறை. ”கிரி?” என்று கூப்பிட்டாள் அவனை. இடுப்பில் தண்ணீர்க்குடம். தெற்குத் தெரு தாண்டி ஆற்றை நோக்கிக் குளிக்கப் போய்க்கொண்டிருந்தான்.
”கிரி?…”
காது நிறைய ஹாவெனத் திரும்பினான்.
”அந்த வெள்ளைச் செம்பருத்திப் பூ… எத்தனை அழகா யிருக்கு இல்ல?”
உன்னை விடவா, என்று நினைத்தபடி தலையாட்டினான். படபடப்பாய் இருந்தது. உடம்பில் ஒரு ஜிவ். பறக்க யத்தனிக்கும் இதயம். தீயின் சுடராய் இருந்தாள் அவள். தள்ளிநின்று ரசிக்கலாம். வணங்கலாம். கையில் பிடிக்க முடியுமோ?
”அந்தப் பூ…” என்றாள்.
(தொடரும்)