சூர்யாவின் வீடு.
ஆனந்தி அழுது அழுது களைத்துப் போயிருந்தாள். சூர்யா கல்லூரியில் இருந்து ஆனந்தியை தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள். ‘சரி, கொஞ்சம் அழுது ஓயட்டும்’ என்று தனியறையில் விட்டுச்சென்றாள். முகம் வீங்கி, கண்கள் சிவந்து, கன்னங்களில் கண்ணீர்க்கறை படிந்து சிதைந்த ஓவியமாய்த் தெரிந்த ஆனந்தியைப் பார்த்து சூர்யா திடுக்கிட்டாள். அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
"எதுக்கு ஆனந்தி இப்படி அழறே?"
சூர்யா கேட்டதும் மீண்டும் ஆனந்தியின் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆனந்தி அழுகையின் நடுவில் விம்மிக்கொண்டே, "நான் அவனை…அவனை எவ்வளவு நேசிச்சேன் தெரியுமாக்கா? இப்படி என்னை ஏமாத்திட்டானே! என்னால தாங்க முடியலை" என்றாள்.
"இப்படி ஓர் அயோக்கியனை எப்படி காதலிச்சோம்னு நீ வருத்தப்படறதில நியாயம் இருக்கு ஆனந்தி! நல்ல வேளையா, தவறா எதுவும் நடக்கறதுக்கு முன்னால அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சுதேன்னு சந்தோஷப்படறதுல புத்திசாலித்தனம் இருக்கு. நாம வந்து மூணு மணி நேரமாகுது. இவ்வுளவு நேரமா, ஓர் அயோக்கியனுக்காக, காதலைப் பத்தின புனிதத்தை உணராத ஒருத்தனுக்காக உன்னோட அழுகையை வீணடிச்சிருக்கியே, உனக்கே வெட்கமாயில்லையா, ஆனந்தி?"
ஆனந்தி விசும்பலை உடனே நிறுத்தினாள். ஆதரவுக்குத் தோளிருந்தால் அழுகை பொங்கிவரும்; அதிர்ச்சி வைத்தியமே உடனடி மருந்து என்று புரிந்து வைத்திருந்த சூர்யா அப்படி ஒரு கேள்வி கேட்டாள்.
இரண்டு நிமிடங்கள் மௌனத்தில் கரைய, "அக்கா! நீங்க சொன்னதுதான் சரி. அவனுக்காக நான் எதுக்கு வீணா அழணும்? இனிமே அவன் முகத்தில்கூட விழிக்க மாட்டேன்" என்று உறுதியான குரலில் ஆனந்தி சொன்னதும் சூர்யாவுக்கு நிம்மதியானது.
"ஆனந்தி! நான் ஒரு விஷயம் சொல்லணும். நிதானமாக் கேட்கறியா?"
"நீங்கதான் என்னைக் காப்பாத்தி இருக்கீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன் அக்கா!"
"நடந்ததுக்கெல்லாம் சரண் மட்டுமே பொறுப்பு இல்லை. உனக்கும் அதிலே பங்கிருக்கு ஆனந்தி!"
"அக்கா!"
ஆனந்தி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
"ஆண் – பெண் நட்புங்கிறது ஓர் எல்லைக்குட்பட்டு இருக்கணும். அப்பதான் அங்கே நட்போட கண்ணியம் காப்பாற்றப்படும். நீ அந்த எல்லையைத் தாண்டிப் போயிட்டே. அதனாலதான் சரவணன் மனசில சலனம் வந்திருக்கு. நீ உன்னுடைய தகுதியா நினைச்ச அந்த நல்ல பழக்கம், கொஞ்சம் ஏமாந்திருந்தா உன் வாழ்வையே இழக்க வைச்சிருக்கும். என்ன, நான் சொல்றது சரிதானே?"
ஆனந்தி குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தாள்.
"தவறு உன்பேர்ல மட்டுமில்லை ஆனந்தி! நிறையப் பெண்கள் இப்படித்தான் நினைக்கிறாங்க; பெண்கள் சுதந்திரம்னா அரைகுறையா டிரெஸ் பண்றது, ஆண்களோட பழகறது, ஹோட்டல், டிஸ்கோன்னு சுத்தறது – இப்படித்தான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் சுதந்திரத்தோட சேர்த்து பெண்மையையும் இழிவுபடுத்தறதுதானே தவிர, சாதனை இல்லை.
"எந்த ஒரு மனிதனாலே தன்னைத்தான் கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறதோ, அவன் தான் சுதந்திரம் அடைந்தவன்" அப்படின்னு காந்தியடிகள் சொன்னார். சுதந்திரத்தாலே கட்டுப்பாடும், ஒழுக்கமும், நேர்மையும் வளரணும். அழகு, இளமை, பருவம் – இதெல்லாம் அவசியம் தான்; அதுவும் இந்த வயசில அப்படித்தான் தோணும். ஆனா பெண்மைங்கிறது இவை மட்டுமே இல்லை; அறிவு, கருணை, இரக்கம், உதவி மனப்பான்மை – இப்படி இன்னும் பெரிய விஷயங்கள் எல்லாம் கூட பெண்மைக்கு அடையாளம் தரும். தலையிலேர்ந்து கால்வரை போர்த்திக்கிட்டு, வாழ்க்கை முழுக்க சேவை செய்து, இறந்த பிறகும் கோடிக்கணக்கான நெஞ்சங்களில் அழியாமல் வாழ்ந்துக்கிட்டிருக்காங்களே அன்னை தெரெஸா, அவங்களை விட அழகான மனசு எந்த மிஸ் யுனிவர்ஸ்க்கோ, மிஸ் வோர்ல்டுக்கோ இருக்கும்ணு நீ நம்பறியா?"
ஆனந்திக்குப் பளீரென மின்னலடித்தது போல இருந்தது.
"ஒரு நிமிஷம் இரு, ஆனந்தி! இதோ வர்றேன்" என்று எழுந்து சென்ற சூர்யா, வரும்போது ஒரு புத்தகத்துடன் வந்தாள்.
"ஆனந்தி! உன்னைப் போல இளைய தலைமுறையைச் சேர்ந்தவங்க முக்கால்வாசி நேரம் டி.வி பார்க்கறீங்க; எந்த நேரம் போட்டாலும், யாராவது ரெண்டு பேர் காதலிச்சிட்டே இருக்காங்க. அதனால காதலைத் தாண்டி உங்க சிந்தனைகள் போகிறதேயில்லை. இந்த புத்தகத்தைப் படி. "
ஆனந்தி பிரித்துப் பார்த்தாள். முதல் பக்கத்தில்,
"கருணை நிறைந்த கண்களே அழகான கண்கள்; உதவி செய்யும் நெஞ்சமே அழகான நெஞ்சம்" என்று எழுதப்பட்டிருந்தது.
"அறிவுத்தெளிவு, தைரியம், சமுதாயத்திற்காக தியாகம் செய்யத் தயங்காத மனசு, விடாமுயற்சியோட போராடும் குணம் – இதெல்லாம் நிறைஞ்ச பெண்கள் உருவாகிறதுதான் உண்மையான பெண்கள் சுதந்திரமா இருக்க முடியும். இதைப் படிச்சா உனக்கே புரியும்னு நம்பறேன். நேரமாயிடுச்சு, வா, சாப்பிடலாம்."
உணவு முடிந்ததும் ஆனந்தி விடைபெற்றாள்.
"அக்கா! நடந்தது எதுவும் மலர் அக்காவுக்குத் தெரிய வேண்டாம்; பாவம், மனசு வருத்தப்படுவாங்க. அக்காவுக்கு என்மேலே இருந்த நம்பிக்கையும் போயிடும். ப்ளீஸ், அக்கா கிட்டே சொல்லாதீங்க" என்று கேட்க சூர்யா தலையைத்தாள்.
ஆனந்தி கிளம்பிய பிறகு, சூர்யா மலருக்கு போன் செய்தாள். மலரிடம் நடந்தவற்றை விவரமாகக் கூறி, கூடவே மலருக்குத் தெரிய வேண்டாம் என்ற ஆனந்தியின் வேண்டுகோளையும் கூறினாள்.
"இவ்வுளவு விஷயம் நடந்திருக்கா சூர்யா? நீ அன்னிக்கு ரொம்ப நேரம் பேசும்போதே எனக்கு லேசா சந்தேகம்தான்"
"எல்லாம் நல்லபடி முடிஞ்சாச்சு. ஆனா நீ எதுவுமே தெரியாத மாதிரி காட்டிக்கணும் மலர்! எதுக்கு உங்கிட்டே எல்லாம் சொன்னேன்னா, ஆனந்தி மனசு மாறின மாதிரிதான் தெரிஞ்சுது. இருந்தாலும் இரண்டு மூணு நாள் அவளைக் கண்காணிக்கிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். என்ன புரியுதா மலர்?"
"ம்ம்.. புரியுது, மீண்டும் அவ பழசை நினைச்சு மனசு உடையாம இருக்கணும். நான் அவளை கவனமாப் பார்த்துக்கறேன். ரொம்ப நன்றி சூர்யா!"
"என்ன மலர், நமக்குள்ளே எதுக்கு இந்த சம்பிரதாயமெல்லாம்?"
"சரி, உன்னோட விஷயம் எந்த நிலையிலே இருக்கு?"
"நானே உன் கிட்டே சொல்லணும்னு இருந்தேன். அடுத்த ஞாயிறு நாம அரவிந்தன் வீட்டுக்குக் போகப்போறோம். என்ன ரெடியா?"
"தாராளமா. அவர் எப்படின்னு நான் பார்த்துச் சொல்லவேண்டாமா? கண்டிப்பா போய்ப் பார்க்கலாம், பை"
(உறவுகள் தொடரும்…..)
Hema, nalla eluthi irukinga. kandipa padika vendiya episode.
மினி,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
ஹேமா
பெண்கள் சுதந்திரம்னா அரைகுறையா டிரெஸ் பண்றது, ஆண்களோட பழகறது, ஹோட்டல், டிஸ்கோன்னு சுத்தறது – இப்படித்தான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் சுதந்திரத்தோட சேர்த்து பெண்மையையும் இழிவுபடுத்தறதுதானே தவிர, சாதனை இல்லை.”
சபாஷ்! இக்காலத்து டீன் ஏஜ் பெண்களுக்கு மிகவும் தேவையான கருத்து.
நம் சினிமாவும், டீவியும் காதலை மட்டுமே வாழ்வின் பிரதான பிரச்சினையாக எடுத்துக் காட்டி இளைய சமுதாயத்தைத் திசை திருப்புகின்றன. எனவே தான் இக்கதையில் சூர்யா சொல்வது போல் காதலைத் தாண்டி இவர்களது சிந்தனை போவதில்லை. கதை மூலமாக நல்ல பல கருத்துக்களை முன் மொழியும் உங்களுக்கு என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் ஹேமா!”
வாழ்த்துக்கு நன்றி, கலை!