மறுநாள் அலுவலகம் வந்தபோது, அரவிந்தனின் கண்கள் சிவந்திருந்தன.
முதல்நாள் சூர்யாவுக்காக காத்திருந்து கிடைத்த ஏமாற்றத்தின் விளைவு அது. ஏமாற்றம் கோபமாக மாறியது.
"என்னைப் பிடிக்கவில்லை என்றால், நேற்று நான் ஃபோன் செய்தபோதே சொல்லியிருக்கலாமே, அதை விட்டுவிட்டு எதற்காக வருவதாகப் பொய் சொல்லி என்னை அவமானப்படுத்த வேண்டும்?"
சூர்யாவின் மேல் எழுந்த கோபம் அவன் உறக்கத்தைத் தின்றுவிட்டது.
வழக்கமான சுறுசுறுப்பில் வேலைகள் நடக்கவில்லை என்றாலும் மாலையாகும் போது கொஞ்சம் இயல்பாக மாறியிருந்தான்.
பணியாள் வந்து, "சார்! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க" என்றபோது, யாராவது நண்பனாக இருக்கக்கூடும் என்று எண்ணியபடி சென்ற அரவிந்தனுக்கு, சின்னதாய் ஒரு சந்தோஷ அதிர்ச்சி சூர்யா வடிவில் காத்திருந்தது.
சூர்யாவைப் பார்த்ததில் நிஜமாகவே சந்தோஷம்தான் என்றாலும், முதல்நாளின் கோபம் இன்னும் மிச்சம் இருந்ததால், அரவிந்தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டான்.
"அட சூர்யாவா! என்ன இந்தப் பக்கம், ஏதாவது வேலையா வந்தீங்களா?"
"என்ன இப்படிக் கேட்கறீங்க? உங்களைப் பார்த்து பேசத்தான் வந்திருக்கேன்."
"ஆனா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கே."
"பரவாயில்லை, நீங்க முடிச்சுட்டு வாங்க.நான் அதுவரை காத்துக்கிட்டிருக்கேன்."
அதற்குமேல் அரவிந்தனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பத்து நிமிடங்களில் கோப்புகளை ஒழுங்கு செய்து, தன்னுடைய அலமாரியைப் பூட்டி உரிய முறையில் அனுமதி பெற்று வந்துவிட்டான்.
"வாங்க சூர்யா! வெளியில போய் பேசலாம்."
"வேலை முடிஞ்சாச்சா?"
அரவிந்தன் தலையாட்டியே தீர வேண்டிய கட்டாயம். மேலும் கீழுமாய் நன்றாகவே ஆட்டினான்.
சிறிதுதூரம் நடந்த பின், உணவகம் வந்தது.
"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அந்த ஹோட்டல்லே போய்ப் பேசலாமா?"
அரவிந்தன் கேட்க, சூர்யா முதலில் தயங்கி பிறகு ‘சரி’யென்று தலையாட்டினாள்.
உணவகத்தின் உள்ளே, உருவாக்கப்பட்ட இருட்டு. மேஜைகளின் மீது மட்டும் விழும்படி, சின்னச் சின்ன வெளிச்சப் பூக்கள். ‘திடீரென்று அரசனாகி விட்டோமோ’ என்று எண்ணுமளவுக்கு மிகுந்….த அடக்கமாக, மிகுந்த மரியாதையுடன் உபசரிக்கும் ‘பேரர்’கள்.
அரவிந்தனும் சூர்யாவும் அமர்ந்து இரண்டு குளிர்பானங்களுக்கு ஆர்டர் செய்தனர். சூர்யாவே பேசத் தொடங்கினாள்.
"நேற்று என்னை வரச் சொன்னீங்களே, எதுக்கு?"
"கல்யாணத்துக்குச் சம்மதம் அப்படீங்கற என் முடிவை உங்ககிட்டே சொல்லலாம்னுதான் வரச்சொன்னேன்."
கதைகளில் வருவது போல் திருமணம் என்றதும் சூர்யாவின் முகத்தில் நாணத்தின் செம்மை படர்கிறதா எனப் பார்க்கும் ஆவலில் அரவிந்தன் பேச்சை நிறுத்தினான். அடச் சே! விளக்குகள் போடாத அந்த உணவகம் அவன் ஆசையை நிராசையாக்கியது. மீண்டும் தொடர்ந்தான்.
"ஆனா, நேத்து நீங்க வராததுனால உங்க முடிவைத் தெரிஞ்சுக்க முடியலை."
"இன்னிக்கு உங்களைத் தேடி வந்துட்டேனே, இன்னும் என் முடிவு புரியலைன்னா சொல்றீங்க?"
சூர்யா சிரித்தபடி கேட்க, அரவிந்தனும் அவள் சிரிப்பில் சேர்ந்துகொண்டான்.
இன்னும் ஏதேதோ பேசியபடி, இனிப்பு வரவழைத்துச் சாப்பிட்டபிறகு கல்யாணப்பேச்சு எழுந்தது.
"கல்யாணத்தை சிம்பிளா ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லே வைச்சுக்கலாம். எங்கப்பா, அம்மா வர்றது சந்தேகம்தான். ஐந்து, ஆறு பேர் நண்பர்கள்தான் வருவாங்க.அவ்வளவுதான். உன் பக்கம் எப்படி?"
"என் கல்யாணத்துக்கு வர்றதுக்கு இரண்டு பேர்தான் காத்துக்கிட்டிருக்காங்க. ஒருத்தி, என் தோழி மலர், பிறகு இன்னொரு தோழி சிந்து. நான் ஒரு விஷயம் கேட்கலாமா?"
"என்ன தயக்கம் சூர்யா? தாராளமாக் கேளு"
"அதாவது, சிந்து ஆஃபிஸ் வேலையா சிங்கப்பூர் போயிருக்கா. மூணு மாசத்துல வந்துருவா, அவளுக்கு என் கல்யாணத்துல கலந்துக்கணும்னு ரொம்ப ஆசை. அதனால மூணு மாசம் கழிச்சு நாம கல்யாணம் செய்துக்கலாமா? ப்ளீஸ்…" என்று சூர்யா கேட்க, அரவிந்தனும் ஒப்புக்கொண்டான்.
"அப்படியே செய்துடலாம், கூடவே ஒரு சின்ன நிபந்தனை!"
"என்ன, சொல்லுங்க?"
"நான் எங்கேயாவது வெளியில கூப்பிட்டா, நீ கண்டிப்பா வரணும். சரியா?"
"உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். எல்லா ஆண்களும் உங்களைப் போல நல்லவரா இருந்தா, அந்த ப்ரியா இப்படிக் கஷ்டப்படுவாளா? நினைச்சாலே ரொம்ப பாவமா இருக்குங்க…"
அரவிந்தனுக்கு சூர்யாவின் பேச்சு சுத்தமாகப் புரியவில்லை.
"இப்படி திடீர்னு ‘டிராக்’ மாறிப் பேசினா, எனக்கு என்ன புரியும் சூர்யா? யார் அந்த ப்ரியா? என்ன கஷ்டம்? தெளிவாத்தான் சொல்லேன்."
"என் கூட ஆஃபீஸ்லே வேலை செய்யற ப்ரியாங்க. நேத்து நான் வர முடியாம போனதுக்குக் காரணமே அவங்கதான்."
"ஓஹோ! இப்பப் புரியுது. அவங்க கஷ்டத்தை எல்லாம் உங்கிட்ட சொல்லி அழுது புலம்பிகிட்டு இருந்திருப்பாங்க. அதனால்தான் வரமுடியலையா?"
"அதுவும் இல்லைங்க."
"பின்னே, என்ன தான் ஆச்சு?"
"நேத்து நான் உங்களைப் பார்க்க வர்றதுக்காக கிளம்பிட்டிருந்தேன், அப்ப ப்ரியா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவங்க எங்க பிராஞ்சுக்கு வந்து ஆறு மாசம்தான் ஆகுது. ஆஃபிஸ்லே ரொம்பவும் ரிசர்வ்டு டைப். யார் கூடவும் ரொம்ப பேச மாட்டாங்க. எல்லாரும் திகைச்சுப்போய் நின்னுட்டாங்க. அப்புறம் நான்தான் ரெகார்ட்ஸ் பார்த்து அவங்க அட்ரஸ் தெரிஞ்சுக்கிட்டு, ஒரு ஆட்டோ வைச்சு அவங்களை ஒரு ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனேன்."
"ம்….பிறகு?"
"டாக்டர் பார்த்து மயக்கம் தெளிய மருந்து கொடுத்தார். அப்புறம் ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அப்புறம் நானும் அவங்களுக்குத் துணையா அவங்க வீடு வரைக்கும் போனேன். அவங்க வீட்டுல பாருங்க, ஸ்கூல் படிக்கிற அவங்க குழந்தை பயந்துகிட்டே உட்கார்ந்திருக்கு. எப்பவும் ஆறு மணிக்கு வர்ற அம்மா ஏழரை மணியாயிடுச்சே, இன்னும் வரலையேன்னு கவலையா, தனியா உட்கார்ந்திருந்த அந்தக்குழந்தையைப் பார்த்து எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு."
"ஏன் சூர்யா! அவங்க வீட்டுல பெரியவங்க, அவங்க புருஷன் யாருமே இல்லையா?"
"அவங்க டைவர்ஸீயாம். அவங்க அப்பா, அம்மா வேறே ஏதோ ஊர்லே இருக்காங்களாம். ஹ்ம்! உங்களை மாதிரி நல்ல கணவர் அமைஞ்சிருந்தா, அவங்க இப்படித் தனியா திண்டாடியிருப்பாங்களா? எல்லாம் அவங்கவங்க அதிர்ஷ்டம். என்ன சொல்றீங்க?"
அரவிந்தன் ‘ம்’ என்று தலையாட்டினான். நெஞ்சுக்குள் மகள் ரஞ்சனியின் நினைவு மின்னலைப் போல ஓடியது. ரஞ்சனியும் இப்போது, இந்த நிலையில்தான் இருப்பாளோ?
"என்ன அப்படியே உட்கார்ந்துட்டீங்க? நேரமாச்சு. நான் கிளம்பறேன். அப்புறமா பார்க்கலாம். பை."
சூர்யா எழுந்திருக்க, யோசனைகளை விடாப்பிடியாகத் தள்ளிவைத்து அரவிந்தனும் அவளுடன் கிளம்பினான்.
(உறவுகள் தொடரும்…..)