அரவிந்தனின் வீட்டிலிருந்து புறப்பட்ட சூர்யா, தோழி மலர்விழியின் வீட்டுக்குச் சென்றாள்.
"அட, சூர்யாவா? வாம்மா, நல்லாயிருக்கியா? மலர், சூர்யா வந்திருக்கா பாரு…"
மலர்விழியின் தாயார் அன்புடன் வரவேற்றார்.
"வாங்கம்மா, வாங்க! எங்க வீட்டுக்கு இப்பதான் ரோடு வசதி வந்திருக்கு போல" மலர் கேலி செய்ய,"ஏய்..மலர்! வந்ததும் வராததுமா என் கையால அடி வாங்கப் போறே பார்."
"சரி, சரி வா உள்ளே போகலாம்."
"நீ எப்படி இருக்கே சூர்யா? ஆஃபிஸ் வேலைகள் எல்லாம் எப்படி இருக்கு?"
"எல்லாம் நல்லா இருக்கு. நீ வீட்டில் உட்கார்ந்துகிட்டு என்ன பண்றே?"
"என்ன இப்படி கேட்கிற சூர்யா? வீட்டுல எவ்வுளவு வேலை? சாப்பிடணும், தூங்கணும், புத்தகம் படிக்கணும், டி.வி பார்க்கணும்."
"அம்மாடி! ரொம்பக் கஷ்டம்தான் போ, அது சரி, குமார், ஆனந்தி எல்லாம் எப்படி இருக்காங்க?"
அதுவரை விளையாட்டாய்ப் பேசிக்கொண்டிருந்த மலர், திடீரென்று முகம் மாறினாள்.
"குமார் நல்லா படிக்கிறான். இந்த ஆனந்தியைப் பத்திதான் ரொம்பக் கவலையா இருக்கு"
"ஏன்,ஒழுங்கா காலேஜ் போகிறாளா, இல்லையா?"
"அதெல்லாம் போகிறா, ஆனா எதுவும் படிக்கிற மாதிரியே தெரியலை. ரொம்ப ஃபேஷனா டிரெஸ் பண்றதும், ஊர் சுத்தறதும்தான் பெரிசா இருக்கு. அடிக்கடி ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்த போயிடறா. வீட்டுக்கு லேட்டா வர்றா; ரொம்ப கண்டிக்கவும் முடியலை. அவளைப் பத்திதான் கொஞ்சம் கவலையா இருக்கு."
"காலேஜ் சேர்ந்த முதல் வருஷம், இல்லையா மலர்? ஸ்கூல்ல கண்டிப்பா இருந்துட்டு காலேஜ் வந்ததும் சுதந்திரமா இருந்தா அப்படித்தான் இருக்கும். அதே சமயம், அவங்க அந்த சுதந்திரத்தோட எல்லை மீறாமலும் பார்த்துக்கணும். எதுக்கும் அவளோட ஃப்ரெண்ட்ஸ் எந்த மாதிரின்னு கவனிச்சு வை."
"ஆமாம், சூர்யா! எல்லாருக்கும் எனக்குக் கிடைச்ச மாதிரி நல்ல தோழி கிடைச்சுடுவாளா?"
பள்ளி நாட்களில் பூத்த அவர்கள் நட்பு வேர் விட்டு இறுகி இப்போது மரமாகி விட்டது. தன் குடும்பத்தை எண்ணி சூர்யா கலங்கும் வேளைகளில் மலரும், அவள் தாய், தந்தையும்தான் சூர்யாவுக்கு ஆறுதல் சொல்வார்கள்.
"நல்ல புத்தகங்கள் படிக்கிற ஆர்வம், நல்ல விஷயங்கள்ல ஆர்வம் – இதெல்லாம் வந்துட்டா வேண்டாத குணங்களெல்லாம் விட்டு ஓடியே போயிடும். ஆனா, பாரு மலர் ! இதோட வாசனை கூடத் தெரியாதபடி இப்பல்லாம் எங்கேயும் ஆபாச காட்சிகள், அரைகுறை ஆடைகள், அழகிப்போட்டின்னு பெண்களை அசிங்கப்படுத்தறது – இதெல்லாம் நிறைஞ்சு போய் இந்தக் கால இளைஞர்களையும், இளம்பெண்களையும் ஒரு மயக்கத்தில் வைச்சிருக்கு. இந்த மயக்கம் தெளிஞ்சுட்டா எல்லாம் சரியாயிடும். ஒரு நாள் ஆனந்தி வீட்டுல இருக்கிற நேரம் பார்த்து எனக்கு சொல்லு; நான் வந்து அவளைத் தெளிய வைக்கிறேன். என்ன சரியா?"
மலர் சம்மதம் என்று தலையசைத்தாள்.
"சூர்யா…கேட்கவே மறந்துட்டேன், நேத்து ஃபோனில் சொன்னியே…அந்த விஷயம் என்னாச்சு? அவரைப் பார்க்கப் போனியா? இல்லையா?"
"கத்தாம மெதுவாப்பேசு, மலர்! அம்மா கேட்டுடப் போறாங்க"
"அப்ப அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமா? சரி, முதல்ல விஷயத்துக்கு வா"
"நேரா அவங்க வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்துட்டுதான் உங்க வீட்டுக்கு வரேன்."
"ஆள் எப்படியிருக்கார்? அதைச் சொல்லு"
"பார்க்க நல்லாயிருக்கார். பேசின வரைக்கும் நல்ல மாதிரியாதான் தெரியுது. பிடிச்சிருந்தா ஃபோன் பண்ணுங்கன்னு நம்பர் கொடுத்துட்டு வந்திருக்கேன்."
"நாளைக்கே ஃபோன் வரும் பார்"
"எல்லாம் நல்லபடி முடியட்டும். அதுவரையில் அம்மாவுக்குக் கூட சொல்லாதே"
மலர் ஒப்புக்கொள்ள, சூர்யா விடைபெற்றுக் கிளம்பினாள்.
*****************
சூர்யாவைப் பார்த்த பிறகு, அரவிந்தனுக்கு உற்சாகம் கூடியிருந்தது. ‘சூர்யாவையே கல்யாணம் செய்துகொண்டால் என்ன?’ என்றும் தோன்றியது. ஆனால் அடிக்கடி, ‘டாடி, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்களா?’ என்று ரஞ்சனி கேட்பது போல ஒரு பிரமையும் ஏற்பட்டது.
இருந்தாலும், சூர்யாவை மறக்க அரவிந்தனால் முடியவில்லை. அவளுடைய அடக்கமான தோற்றமும், அமைதியான பேச்சும் அவன் நினைவை விட்டு நீங்கவேயில்லை.
சூர்யா வந்துவிட்டுப் போன இரண்டு நாட்களுக்குள்ளேயே சம்மதம் என்று அரவிந்தன் முடிவெடுத்துவிட்டான். ஆனாலும் ஃபோன் செய்து சொல்ல அவனுக்குத் தயக்கமாகவே இருந்தது. ‘நம்மைப் பற்றி ‘சீப்’பாக சூர்யா நினைத்து விட்டால்?’ என்ற கேள்வி அவன் மனசுக்குள் எழுந்தது. அதனால் ஒருவாரம் முடிந்த பிறகே ஃபோன் செய்ய வேண்டும் என்று மிகுந்த சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
இதற்கிடையில், அவன் அளித்திருந்த விளம்பரத்துக்கு வேறு சில கடிதங்களும் தபாலில் வந்தன. எட்டாவது வரை, பத்தாவது வரை படித்த பெண்களாக அவை இருந்ததால், அரவிந்தன் அப்படியே ஒதுக்கிவிட்டான். ஒரு கடிதம் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது.
திருமணமாகி ஒரு மாதத்தில் விவாகரத்து செய்துவிட்ட பெண்ணின் தகப்பனார் சற்றே கோபத்துடன் எழுதியிருந்தார். ‘விவாகரத்து வாங்கிய நீங்களே, விவாகரத்து செய்த பெண்னைத் திருமணம் செய்ய மறுப்பது ஏன்?" என்று கோபமாய்க் கேட்டிருந்தார். சிந்தித்துப் பார்த்ததில் அரவிந்தனால் பதில் சொல்ல முடியவில்லை. ‘மனைவி என்பவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள்’ என்று காலம் காலமாக ஆண்கள் மனத்தில் பதிந்து விட்ட கருத்தே இதற்கு அடிப்படையாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் மட்டும் எழுந்தது. மனத்தில் சூர்யா பதிந்து விட்டதால், அதற்குமேல், அந்தக் கடிதத்தை அவன் பொருட்படுத்தவில்லை.
மறுநாள் திங்கட்கிழமை அன்று காலையில் சூர்யாவின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான்.
"ஹலோ, சூர்யா பேசறேன்."
"நான் தான் அரவிந்தன் பேசறேன்."
எதிர்முனையில் மௌனம்.
"உங்களை நேரில் பார்த்துப் பேசணும். மாலையிலே கண்ணகி சிலையருகில் காத்துக்கிட்டிருக்கேன். வர முடியுமா?"
"சரி, வரேன். எத்தனை மணிக்கு?"
"ஆறு மணிக்கு வாங்க. சாயங்காலம் பார்க்கலாம். பை."
மாலை ஆறு மணிக்கு கண்ணகி சிலையின் அருகில் காத்திருந்த அரவிந்தன், இரவு எட்டு மணி வரை காத்திருந்து, காத்திருந்து களைத்துப் போனான். சூர்யா வரவேயில்லை.
(உறவுகள் தொடரும்……)