உருளைக்கிழங்கு வெள்ளைக் குருமா

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 3,
காரட் – 1,
பீன்ஸ் – 4,
கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கோப்பை,
இரண்டாம் தேங்காய்ப்பால் – 2 கோப்பை,
பச்சை மிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி – ஒரு துண்டு,
பட்டை – 2,
இலவங்கம் – 2,
ஏலக்காய் – 2,
பூண்டு – 5 அல்லது 6 பல்,
எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி,
உப்பு – சுவைக்கேற்ப,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ள வேண்டும். தேங்காயைப் பால் பிழியும்போது முதல் முறை வரும் கெட்டியான பாலைத் தனியாகவும், அடுத்து பிழியும் நீர்த்த பாலைத் தனியாகவும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்குங்கள். காரட், பீன்ஸ் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் போட்டு இலேசாக வதக்கி, இரண்டாம் பாலைச் சேர்த்து நன்கு, கைவிடாமல் கிளறிக் கொதிக்கவிடுங்கள்.

5 நிமிடம் கொதித்த பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து, வெங்காயம் வேகும் வரை கொதிக்க விடுங்கள். வெங்காயம் வெந்த பிறகு முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். இலேசாகக் கறிவேப்பிலை தூவிப் பரிமாறுங்கள்.

சப்பாத்தி, பூரி, புலவு,இடியாப்பம் போன்றவற்றிற்கு நல்ல சைட்டிஷ் இது. சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author