நான் வசிக்கும் அண்ணாநகர்ப் பகுதியிலிருந்து வெகு சமீபத்தில் வில்லிவாக்கம் என்ற இடமுள்ளது. ஒரு சமயம் அங்கு எனக்குப் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.
என் கார் நின்ற இடத்தின் அருகில் மிகப் பழமையான ஒரு கோயில் இருந்தது. கோயில் என்றால் நான் விடமாட்டேனே! சரியாகக் கோயில் திறந்த நேரம் நான் உள்ளே நுழைந்தேன். அந்தக் கோயிலின் பெயர் ஸ்ரீசௌம்ய தாமோதரப்பெருமாள்
கோயில் என இருந்தது. நான் போன நேரம் கூட்டம் இல்லை. மூன்று நிலை ராஜகோபுரம் மிக அழகாகக் கம்பீரமாக
விளங்க, உள்ளே மூலவர் ஸ்ரீசௌம்யதாமோதரப்பெருமாள் அருள் புரிகிறார். அழகிய நான்கு கரங்கள் தாங்கி நிற்க ஸ்ரீதேவி, பூதேவி மந்தஹாஸ வதனத்துடன் புன்னகை பூக்க அருள் பாலிக்கிறார்.
அங்கு பூஜை செய்பவர், இந்தக் கோயில் சுமார் அறுநூறு ஆண்டுகள் பழமையானது என்றார். சம்ஸ்கிருதத்தில் தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு. கண்ணனது குழந்தைப் பருவம் மாயலீலைகளால் நிரம்பிய ஒன்று. மண்ணை உண்ட கண்ணனை யசோதை வாயைத் திறந்து காட்டச் சொல்ல, அதில் எல்லா லோகங்களும் கண்டு பிரமித்துப்போனாள். வெண்ணைத்திருடன், பல சேஷ்டைகள் செய்ய, யசோதா பொறுக்க முடியாமல் கண்ணனை உரலில் கட்டி எங்கும் ஓட முடியாமல் செய்தாள். ஆனாலும் மாயக்கண்ணன் உரலையும் இழுத்தபடித் தோட்டத்துக்குள் வந்தார். அங்கு இரண்டு மரங்கள் மிகவும் உயரமாக நின்று கொண்டிருந்தன. வேண்டுமென்றே அந்த இரண்டு மரங்களின் நடுவில் புகுந்தார். அவ்வளவுதான்! முன்பு சாபம் பெற்ற இரு கந்தர்வர்கள் சாப விமோசனம் பெற்று மோக்ஷம் பெற்றனர். இந்தக் கதையில் வரும் தாமோதரன்தான் இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். இந்தக் கோயிலின் மூலவர் இடுப்பில் யசோதை கட்டிய கயிற்றின் அழுத்தம் தெரிகிறதாம்! அதேபோல் உற்சவர் இடுப்பிலும் இதைக் காண முடியும். கண்ணன் அலங்காரத்துடன் இருந்ததால் என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. உற்சவரும் இரண்டு தேவிகளுடன் காட்சியளிக்கிறார். வெறும் தாமோதரன் என்று இல்லாமல் சௌம்ய தாமோதரன் என அழைக்கப்படுகிறார். காண்பவர் நெஞ்சை அள்ளும் அழகும், முகத்தில் புன்னகையும் கொண்டிருக்க, இதனால்தான் இவர் சௌம்யதாமோதரன் ஆகிவிட்டாரோ?
கோயிலின் பிரதான மண்டபத்தில் மிக அழகான சிற்பங்கள் உள்ளன. அதில் தசாவதாரச் சிற்பங்கள் பார்ப்பவர்களைக் கவருகின்றன!
தாயாருக்கு என்று தனிச் சந்நிதி இருக்கிறது. தாயாரின் பெயர் அமிர்தவல்லி. பெயருக்கேற்ப அமிர்தம் போல் பலனை வாரி வாரி வழங்குவாள். பழைய கோயில் என்றால் தீர்த்தமும் இருக்க வேண்டுமே! இங்கும் அம்ருதபுஷ்கரிணித் தீர்த்தம் இருக்கிறது. ஆனால் இன்னும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாமே எனத் தோன்றுகிறது.
இங்கு நடக்கும் வைபவங்கள். ஆடிப் பௌர்ணமியன்று கஜேந்த்ர மோக்ஷம், தை மாதத்தில் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் மன்னார் அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாளுடன் புறப்பாடு, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி.
தாமோதரன் சந்நிதியைத் தவிர அனுமார், கருடாழ்வார், கோதண்டராமர், ஆண்டாள், ஸ்ரீவேணுகோபாலன், நம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், விஷ்வக்சேனர் என்று பலர் எழுந்தருளியுள்ளனர்.
மழலைச் செல்வம் வேண்டி நிற்கும் பெண்மணிகள் இங்கு நேர்ந்து கொண்டு பால் பாயசம், வெண்ணெய் படைக்கின்றனர். இதனால் பலர் பயனடைந்திருக்கின்றனர் என்றார் அங்கு பூஜை செய்து வரும் ஒரு வைதிகர்.
வில்லிவாக்கம் பஸ் நிலையத்தின் அருகிலேயே இந்தக் கோயில் உள்ளது.
"கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச
நந்தகோப குமாராய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:"