உயிர்மொழி – இசை விமர்சனம்

அறிவியலும் (science fiction) காதலும் ஒன்று குழைத்த ஒரு திரைப்படம் தமிழில்!

ஐந்து இளைஞர்கள், பெண் ஒருத்தியைக் காதலிக்கிறார்கள். அவர்களுடைய டி.என்.ஏ (D.N.A) செயல்பாடுகள்தான் கதையே! சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்களைப் பார்ப்போமா?…

நானாக நான் இன்றி

கிதாரின் சிலிர்ப்பூட்டும் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடலைப் பிரதீப் குமார் – கல்யாணி நாயர் பாடியுள்ளனர். முத்தமிழ்ச் செல்வன் இதை எழுதியுள்ளார். செய்யுள் போலத் தொடங்கி, வரிகளின் அடிகள் ஒத்துப் போக, சுகமாகக் காதில் விழுகிறது இந்தக் காதல் கூறும் பாடல். கிதார் வாசித்தவரைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது! தூய தமிழ் வார்த்தைகள், மேற்கத்திய இசைக் கருவிகள் இரண்டும் மிகச் சரியாக இணைக்கப்பட்டிருக்கின்றன. அண்மைய வரவுகளில் அருமையான மெல்லிசைப் பாடல் இது!

"வீட்டுக் கதவில் விரல் தைத்து
விழிகள் இரண்டும் வெளிவைத்து
காத்துக் கிடந்த எனக்குக் கை காட்டிச் சென்றாயே" – அழகுத் தமிழ் வரிகள்

ஒருமுறை

இந்தப் பாடலுக்கு எழுத்தும் குரலும் பிரதீப் குமார். இதுவும் மெல்லிசைப் பாடல்தான். பாடல் நெடுகிலும் வரும் மெலிதான டிரம்ஸ் இசை, வரிகளைத் தழுவி, வார்த்தைகளைப் பாதிக்காமல் ரசிக்க வைக்கிறது. கர்நாடக இசையின் சாயல் தெரிவது பாடலுக்குக் கூடுதல் பலம்.

"அருகே உன் நிழல் பார்த்தாலுமே துரும்பாகப் பறப்பேனே
ஒரு பார்வை, ஒரு வார்த்தை போதும் கண்ணே!" – எனக் காதல் ஏக்கம் பேசும் பாடல்.

இளவட்டத் தாளம்

ஆல்பத்தின் ரகளையான பாடல்! எழுதி, பாடியிருக்கிறார் அருண் ராஜா. இவருடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருப்பவர் ஆண்டனி தாசன். காதலைத் தூற்றிப் பாடும் பாடல்களுக்கு எப்பொழுதுமே தனி வரவேற்பு உண்டு. இதுவும் அந்த வகைதான். சிறு வித்தியாசம் என்னவென்றால், இதில் காதல்வயப்பட்ட நண்பனுக்கு, அதன் பாதகப் பக்கங்களை விவரிக்கிறார்கள். உடனடி வெற்றி இதற்கு உறுதி!

"கண்ணால பேசுவாங்க
காதல்னு சொல்லுவாங்க
ஒலிம்பிக்கு போனாக் கூட
ஏமாத்தும் போட்டியில
நம்ம ஊரு பொண்ணுங்கதான் தங்கம் அள்ளும்டா!" – குறும்பு வரிகள்!

வானத்தில் அன்று நீ

நா.முத்துக்குமார் எழுதியுள்ள பாடல். காதல் சோகம் சொல்லும் இந்தப் பாடலை உயிர்ப்புடன் பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

"வானத்தில் அன்று நீ வரைந்து வைத்த வெண்ணிலா
போகுதே போகுதே உன்னைத் தேடி ஓர் உலா!" – பிரிவு சொல்லும் வரிகள்.

இசை மட்டுமில்லாது நன்றாகப் பாடியும் இருக்கிற சந்தோஷ் நாராயணன், தமிழ்த் திரை உலகிற்கு ஒரு நல்வரவே!

‘உயிர்மொழி’ காதலுக்குப் புது மொழி கூறும்!

About The Author