நாங்கள் செல்லும் பாதைகளிலெல்லாம்
மேடு பள்ளங்கள் கிடையாது – ஆனால்
குண்டும் குழியும் நிறையவே உண்டு
குறுகிக்கொண்டு ஒளிந்து கொள்ள.
எங்கள் பள்ளித் தோட்டத்தில்
பூக்கள் கூட நிலைத்திருக்கும்
வகுப்பில் உள்ள பிஞ்சுகளுக்கோ
எந்த நிமிடமும் முள்ளிருக்கும்.
வேலைக்குச் செல்லும் கணவனின் வாகனம்
அழகாய் ஓரத்தில் நின்றிருக்கும்
கண்ணீரோடு யோசிக்கும் மனைவி
எந்தத் துப்பாக்கி அவரைக் கொன்றிருக்கும்?
அம்மா வாங்கிய மளிகைப் பொட்டலம்
அலுங்காமல் அப்படியே தரையிருக்க
அம்மா வந்தாளே பொட்டலமாய்
எங்கே சொல்லி அழுது தீர்க்க?
தேவைகளைப் பூர்த்தி செய்ய
தேவைப் பட்டதை வாங்கினோம்
அவை இன்று தேவையில்லை
பதுங்கு குழியில் இடமுமில்லை.
கடலில் துளியாய் எங்கள் தேசம்
தேசம் முழுதும் கண்ணீர்த் துளிகள்
துளித்துளியாய்ப் போகின்ற அப்பாவி உயிர்கள்
உயிர்களற்ற தேசத்திற்குப் போராட்டம் ஏனோ?
அருமையான கவிதை
நன்று