சென்ற வருடம் வெளிவந்து அநேக பாராட்டுக்களைப் பெற்ற A Wednesday என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் – உன்னைப்போல் ஒருவன். கமல்ஹாசன், மோஹன்லால் இணைந்து நடிக்க, ராஜ்கமல் மற்றும் யூடிவி நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில், சக்ரி டொலெடியின் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது இந்தத் திரைப்படம். இசையமைத்திருப்பவர் கமல்ஹாசனின் செல்லப் பெண் ஸ்ருதி ஹாசன். ரஜினிகாந்தின் மகள் அனிமேஷன் உலகில் கலக்கிக் கொண்டிருக்க, ஸ்ருதியோ இசை உலகை ஆள வந்திருக்கிறார். இதற்கு முன் சில பாடல்களைப் பாடியிருந்தாலும், தமிழ் சினிமா இசையில் அம்மணி காலெடுத்து வைக்கும் முதல் படம் இது. செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி அன்று சத்யம் சினிமாஸ் திரையரங்கில் இசை வெளியீடு கோலாகலமாக நடைபெற்றது. பாடல்களைக் கேட்போமே!
உன்னைப்போல் ஒருவன்
படத்தின் தீம் பாடல் போல – "பவித்ராணாய சாதூணாம்" என்ற கீதையின் வரிகளில் ஆரம்பிக்கின்றது. ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டாளமே இப்பாடலைப் பாடியிருக்கிறது. வரிகளை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். தாளம் போட வைக்கும் பீட்ஸ், கூடவே கொஞ்சம் எலெக்ட்ரிக் கிடாரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் – அவ்வளவுதான் டைட்டில் சாங்!
நிலை வருமா
ராஜ்கமல் தயாரிப்பு என்பதால், தானே எல்லா வேலைகளையும் செய்து விட்டால் செலவு மிச்சம் என்று நினைத்துவிட்டார் கமல். தானே பாட்டெழுதி, தானே பாடி, தன் மகளையே இசையமைக்க வைத்து விட்டார். சமூகத்தின் மேல் இருக்கும் கோபத்தில், நமக்கெல்லாம் நன்னிலை வருமா என்ற ஏக்கத்தில் பாடும் பாடல். நல்ல மெலடி. பியானோ, வயலின், பீட்ஸ் என்று மெல்லிசையுடன் பாட்டு ஆரம்பிக்கிறது. பிறகு பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அதன் பிறகு எலெக்ட்ரிக் கிடாருடன் கமல் சேர்ந்து கொள்கிறார். அய்யா பாடுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். குரலுக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. ‘சுந்தரி நீயும்’ பாட்டில் கேட்ட இனிமையும், சுருதி சுத்தமும் காணோம். அதுவும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலோடு சேர்ந்து கேட்டால் தனியாகத் தெரிகின்றது. பாம்பே ஜெயஸ்ரீ பாடினாலும் கோபம் கோபமாகவே வருகின்றது – அவர் மேல் அல்ல, இசையமைப்பாளார் மீது. எட்டு கட்டை எட்டி கர்னாடக சங்கீதத்தில் கலக்கும் அவருக்கு தமிழ் சினிமாவில் ஏனோ (‘வசீகரா’, ‘மலர்களே’ என்று நீளும் பட்டியலில் எத்தனையோ பாடல்கள்!) இத்தனை கீழ்-ஸ்தாயியில் பாடச் சொல்கின்றார்கள்!! ஒரு நல்ல பாடகரின் குரலை இசையமைப்பாளர்கள் சரியாகப் பயன்படுத்தும் நிலை வருமா ?
வானம் எல்லை இல்லை
தமிழ் சினிமா பாட்டென்றால், ஆங்கிலத்தில் ராப் வேண்டாமா – அப்புறம் எப்படி தமிழ் பாட்டாகும் அது! கூப்பிடுங்கள் பிளாசை! மீண்டும் கமல் வரிகள் எழுத, ஸ்ருதி இம்முறை பாடியிருக்கிறார். ராப்பின் இடையே கூட "ஸ்ருதி ஹாசன் அண்ட் பிளாசே" என்று வருகின்றது. ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவே ஆங்காங்கே தமிழ் கேட்கின்றது. ஒரு ரெகுலர் ராப், வேறேதும் ஸ்பெஷல் இல்லை. ஒரு துணுக்கு – கிட்டத்தட்ட பத்து வருடங்களாக திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் பிளாசே யாரென்று யாராவது யோசித்திருக்கின்றீர்களா? எந்த நாட்டவர்? அவர் இயற்பெயர் கேட்டு அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம் – லக்ஷ்மி நரசிம்ஹ விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்.
அல்லா ஜானே
இது மாதிரி ஒரு பாடலை, குரல் மாற்றி கமலைத் தவிர வேறு யாரால் கன கச்சிதமாக பாட முடியும்? சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை அல்லாவிடம் முறையிடும் பாடல். மனம் நெகிழவைக்கும் வரிகளை அற்புதமாக பாடியிருக்கின்றார். வரிகளுக்குச் சொந்தக்காரர் மனுஷ்யபுத்திரன்.
அல்லா ஜானே – ரீமிக்ஸ்
முன்பு கேட்ட பாடலின் ரீமிக்ஸ். நல்ல வேளை, காதை அடைக்கவில்லை! பீட்ஸ், கீஸ் ஆதிக்கம் ஜாஸ்தி. ஆங்காங்கே ஸ்ருதி ஹாசன் பேசுகின்றார், ஆங்காங்கே பாடுகின்றார், பின்னணியில் ஒரு ஹம்மிங்.. பாடல் முழுதும் தொடர்கின்றது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஸ்ருதி ஹாசனின் உச்சரிப்பு எத்தனை கச்சிதம்! வியக்க வைக்கிறார்.
காதல் கிடையாது; நாயகனும் நாயகியும் மரத்தைச் சுற்றிச் சுற்றி ஆடும் டூயட் கிடையாது – ஹப்பா! எத்தனை புதுமையான ஒரு இசை ஆல்பம். இப்படி ஒரு படத்தை தமிழர்களுக்காக ரீமேக் செய்ய நினைத்ததற்கு கமலுக்கு சபாஷ்! அப்படத்திற்காக இசையில் கரம் மசாலா எல்லாம் தூவாமல், சரியான பாடல்களைத் தந்ததற்கு ஸ்ருதிஹாசனுக்குப் பாராட்டுக்கள். இன்னும் நிறைய பாடல்களுக்கு இசையமையுங்கள், அம்மணி!
“
ரீமேக்தான் இப்போ பேஷன் போல……………………..!!! சொந்தமா யோசிங்கய்யா.
ஒகோ