உன்னதமான உள்ளுணர்வு

“நீங்கள் உங்கள் உள்ளுணர்வினால் செயல்படும்போது உங்களை அது சரியான வழியில் இட்டுச் செல்கிறது. அது உங்களுக்கு எது சிறந்ததோ அதையே செய்கிறது”. – ஹேல் ட்வாஸ்கின்

ஒரு தெருவில் நீங்கள் நடந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒரு இரு முனைப் பிரிவு வருகிறது. நீங்கள் எந்தவிதக் காரணமுமில்லாமல் மனதில் தோன்றிய ஒரு காரணமற்ற உள்ளுணர்வின்படி இடது அல்லது வலது பிரிவில் திரும்பி நடக்கிறீர்கள். இது ஒரு மிகச்சாதாரணமான விஷயம்தான். அந்தப் பிரிவில் நீங்கள் செல்லும்போது எதிர்பார்க்காத விதமாக நெடுநாட்கள் பார்க்காதிருந்த ஒரு பழைய நண்பரைச் சந்திக்க நேரிடலாம். இது நீங்கள் சிந்தித்துச் செயல்பட்டதில்லை. உங்களின் இனம் தெரியாத உள்ளுணர்வு. அந்தப் பிரிவில் செல்லத்தூண்டியது.

இது போலத்தான் வாழ்க்கையின் சில முக்கிய சந்தர்ப்பங்களில் கூட நமது உள்ளுணர்வு ஒரு முடிவை எடுக்கத் தூண்டும், உந்தும். ஆனால் அந்தப் பிரச்சினைகளின் சாதக பாதகங்களை ஆராயாமல் முடிவெடுக்க நாம் அஞ்சுகிறோம். ஏனெனில் பிரச்சினைகளுக்கு பின் விளைவுகளை ஆராயாமல் முடிவெடுத்தால் என்ன நேரிடுமோ என்ற அச்சம். இது நியாயமானது. உள்ளுணர்வின் உந்துதலுக்கு செவி சாய்க்காததின் மூலம் உங்கள் நல்ல முடிவெடுக்கும் வாய்ப்புக்களை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள் என மிகவும் வெற்றிகரமான மனிதர்கள் கூறுகிறார்கள். உள்ளுணர்வு என்பது நம் பிறப்பிலேயே நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வரம், திறமை. உள்ளுணர்வு என்பது நம் மனதின் உயரிய சக்திகளோடு, நம்மை இணைக்கிறது. இந்த உள்ளூணர்வு நமது இதயத்தில் உதித்து பின்பு மூளைக்குச் சென்று நம்மை அதன்படி முடிவுகள் எடுக்க ஆணையிடுகிறது. இந்த உள்ளுணர்வு என்பது அறிவுசார்ந்தது அல்ல. எந்த தர்க்க வாதத்திற்கும் உட்பட்டது அல்ல. வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நாம் அறிவுப்பூர்வாக மட்டும் முடிவெடுக்க முடியாது. அந்த சந்தர்ப்பங்களில் நமது உந்துசக்தி, அனுபவம், புதிதாகப் படைக்கும் திறன் இவைகள் கலந்த உள்ளுணர்வு சக்தியினால் நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் இந்த உள்ளுணர்வு என்பது ஏதோ சிலருக்கு மட்டுமே வாய்த்த பரிசு என்ற கருத்து நிலவியது. ஆனால் இப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உள்ளுணர்வு சக்தி இருந்து முடிவுகள் எடுக்க வழிகாட்டுகிறது எனத் தீவிரமாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். காரண காரியங்களை லாஜிக்கலாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியாத, நெருக்கடியான முடிவெடுப்பதை தள்ளிப்போட முடியாத சந்தர்ப்பங்களில் இந்த உள்ளுணர்வு கைகொடுக்கிறது. நமக்கு அம்மாதிரியாக முடிவெடுக்க வேண்டிய அவசியங்கள் ஏற்படும்போது நம் உள்ளுணர்வின் சக்தியை எழுப்ப சில வழிகள்:

ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து முடிவெடுக்கவேண்டிய காரியங்களைப் பற்றிய எந்த முன்கூட்டிய முடிவுகள் எடுக்காமல், மனத்தைத் தளர வைத்துக் கொள்வது. அப்போது முடிவுகள் இயற்கையாகவே உள்ளுணர்வால் தோன்றும். சில சமயங்களில் மற்றவர்களுடைய அபிப்ராயங்களையும், அனுபவங்களையும் கேட்கையில், உங்களின் உள்ளுணர்வில் தானாகவே ஒரு முடிவு தோன்றும்.

எப்போதும் தீர ஆலோசித்தே முடிவுகள் எடுக்க நாம் பழகி விட்டதால் நம் உள்ளுணர்வின் சக்தியின்மீது நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். நாம் நம் உள்ளுணர்வை விழிக்கச்செய்தால் மட்டும் போதாது. அதன் மேல் நமக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதனால் நாம் உள்ளுணர்வின் படி முன்பு எடுத்த முடிவுகளைப்பற்றிக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம். அந்தக் குறிப்புகள் முன்பு உள்ளுணர்வின்படி நாம் முடிவெடுத்த சந்தர்ப்பங்கள் என்ன, அந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள உதவும்.

எந்த இடத்தில் முடிவெடுத்தபோது உங்களின் உள்ளுணர்வின் சக்தி அதிகமாக சக்தி வாய்ந்ததாக இருந்ததோ (உங்கள் அலுவலகமா. அல்லது வீடா, அல்லது கடற்கரையா என்பது போன்று) அந்த இடத்தில் மீண்டும் சென்று உள்ளுணர்வின் சக்தியைப் பயன்படுத்தலாம்.

உங்களின் உள்ளுணர்வின் சக்தியை வள்ர்த்துக் கொள்வதற்கு அதை ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் செய்யாமல், அதை ஒரு பழக்கமாகவே வைத்துக் கொள்ளலாம். உங்கள் உள்ளுணர்வின் சக்தியை சோதிப்பதற்கு நீங்கள் ஒரு முன்பின் தெரியாத இடத்திற்கு சென்று யாரையும் வழி கேட்காமலேயே, எந்த வரைபடத்தையும் பார்க்காமலேயே உங்கள் உள்ளுணர்வையே மட்டும் நம்பி உங்கள் இடத்திற்கு திரும்பிவர முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு உங்கள் உள்ளுணர்வின் மீது உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்.

டாடா சன் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான நிர்வாக இயக்குனர் திரு.கோபால கிருஷ்ணன் தன்னுடைய ”The case of the bonsai manager” என்ற புத்தகத்தில் நிறுவனங்களால் முக்கியமான முடிவுகள் எடுப்பதில் உள்ளுணர்வு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறதெனக் குறிப்பிடுகிறார். “முடிவுகள் எடுப்பதில் பிரச்சினைகளைப்பற்றிய ஆய்வும் தர்க்க ரீதியான சிந்தனையும் அவசியமென்றாலும் சில சமயங்களில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஒரு Analysis paralysis (ஆய்வு பக்கவாத)நிலையை அடைந்து விடுகிறோ¡ம். அந்த சமயங்களில் நமக்கு உள்ளுணர்வு தரும் முடிவு கை கொடுக்கிறது. ஆர்க்மிடீசுக்கும் நியூட்டனுக்கும் கூட இந்த உள்ளுணர்வுகள்தான் அவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமாக இருந்தன” என்று குறிப்பிடுகிறார்.

உள்ளுணர்வின்படி சில முடிவுகள் எடுப்பதினால் அனாவசியமான மனோ சக்தி விரயமாகாமல், மன இறுக்கமில்லாமல் முடிவெடுக்க முடிவதும், நமது சுய வழிகாட்டும் திறமைகள் வளர்வதும், பிரச்சினைகளை ஒத்திப் போடாமல் விரைவாக முடிவெடுக்க முடிவதும் முக்கிய நன்மைகள். ஆனாலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நமது உள்ளுணர்வின்படியே மட்டும் முடிவெடுப்பது சரியானதா என்பது அவரவர்களின் அனுபவத்தையும் அவர்களுக்குத் தங்கள் உள்ளுணர்வின் மீது உள்ள நம்பிக்கையையும் பொறுத்தது.

கட்டுரைக்கு உதவியவை: ezyme.com, Sedona.com, ”The case of the bonsai manager” டாடாசன் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களின் நூல்.

About The Author

8 Comments

  1. R Srinivasan

    உள்ளுணர்வின் சக்தி உண்மையிலேயே மகத்தானது. பல நெருக்கடியான கட்டங்களில் அதன் மகிமை நிச்சயம் உதவுவதை பர்சனலாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் உள்ளுணர்வுக்கும் ஆசையின் குரலுக்கும் நமக்கு வேறுபாடு தெரிந்திருக்க வேண்டும்.

  2. தமிழ்த்தேனீ

    அன்புடைய நண்பர்களே
    இந்தக் கட்டுரையைப் படித்தபின் ,ஏன் அதற்கு முன்னாலும்
    இது வரையில் என் உள் உணர்வுகளை மதித்தே என் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொண்டுகொண்டு வந்திருக்கிறேன்,ஏனென்றால் உள் உணர்வு என்பதே நம் வாழ்க்கையை நாமே செப்பனிட்டுக் கொள்ள இறைவனால் நமக்களிக்கப்பட்ட வரப்ரசாதம்,
    மிக எளிய முறையில் சொல்வதானால் நான் என் இள வயதில்
    ஓடும் பேருந்திலிருந்து அனாயாசமாக இறங்குவதை ஒரு வாலிப நாகரீகமாக ஏற்படுத்திக் கொண்டு ஒரு கதாநாயக உருவகத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றவன்
    அப்போதெல்லாம் பல முறை அப்படியே இறங்குவேன்
    ஆனால் பேருந்து மிக மெதுவாக ஓடும் போதும் என் உள்ளுணர்வு வேண்டாம்
    என்று எச்சரிக்கும் குரல் கொடுத்தால் இறங்க மாட்டேன்,அந்த உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த காலையும் பின் வைக்கத் தயங்கியதில்லை
    அப்படி மதிக்காது ஒரு முறை அலட்ஷியமாக காலை எடுத்து வைத்ததன் பலன் நான் கீழே விழுந்து என் இடது தோள்பட்டையின் மூட்டு எலும்பு உடைந்திருக்கிறது,இதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக எடுத்துக் கொண்டால்
    பரவாயில்லை,ஆனால் பல முக்கியமான நேரங்களில் நம்மை இந்த உள்ளுணர்வு எச்சரிக்கிறது ,அப்போது இந்த உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
    வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம்,மொத்தத்தில் இந்த உள்ளுணர்வு
    மனசாட்சி,இறைவன் என்று எப்படி பொருள் கொண்டாலும்
    அதை மதிக்க வேண்டியதே
    என் வாழ்க்கையில் பிறகு இந்த உள்ளுணர்ச்சியை மதித்து
    என் வாழ்வை செம்மைப் படுத்திக் கொண்டவன் நான்

    ஆகவே உள்ளுணர்வு என்பதே இறைவன்
    அதை மதிக்கக் கற்றுக் கொண்டால்
    எல்லாம் நலமாகும்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  3. ARUL.P

    மிகவும் பயனுல்ல தகவல்.. மிக்க நன்றி .. அருள்..

  4. maleek

    நல்லெண்ணங்களையும்,விடாமுயற்சியையும் விதைத்தவர்கள் உள்ளுணர்விலிருந்து
    வெளிப்படும் ஜோதியிலிருந்து திசையறிந்து சாதித்து இருக்கிறார்கள்.இதைத்தான்
    சான்றோர்கள் தியானம்” என்பதாக வலியுறுத்தினார்கள்.(அதற்கு பக்குவப்பட்ட
    சூழ்நிலை வேண்டுமென்பதால் தான் பாபா க்களாக இருந்தாலும் இமயமலையை
    தேடுகிறார்கள் போலும்}”

Comments are closed.